வெள்ளி, 6 நவம்பர், 2015

தண்டபாணி சுவாமிகள் !





தண்டபாணி சுவாமிகள் (1839 - 1898தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். பலவிதச் சிறப்புகளுக்கு உரியவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்று அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைச் சுருக்கம் :-
சங்கரலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட தண்டபாணி சுவாமிகள் திருநெல்வேலியில்செந்தில்நாயகம் பிள்ளை - பேச்சிமுத்து தம்பதியருக்கு 1839 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையின் நண்பரான சீதாராம நாயுடு என்பவரால் இவருக்கு முருகன் மீது பக்தி உருவாயிற்று. ஆரம்பக் கல்வியை முடித்த இவர், இளம் வயதிலேயே தமிழில் மிகுந்த புலமைப் பெற்றார். எட்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றார்.
அந்த வயதில், "பூமி காத்தாள்" என்ற அம்மனுக்கு அப்பெயர் எப்படி அமைந்தது என்ற காரணத்தைக் கூறி, பாடுதற்கு அரிய வெண்பாவில் அதைப் பாடினார். கவிதை பொழியும் இவருடைய ஆற்றலைக் கண்டு வியந்த சீதாராம நாயுடு இவருக்கு "ஓயா மாரி" என்ற சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார். சங்கரலிங்கம், முருகனின் அடியவர் ஆனார். முருகன் புகழ் பாடினார். ஆகவே இவர் "முருகதாசர்" என்று அழைக்கப்பட்டார். இவர் முருகனின் திருப்புகழை விரும்பிப் பாடிக்கொண்டே இருந்ததால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் சிறப்பிக்கப்பட்டார்.
உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீறு பூசிக்கொண்டார். இடுப்பில் கல்லாடை அணிந்துகொண்டார். கையில் தண்டாயுதம் ஏந்திக் கொண்டார். இந்தக் கோலத்தில் விளங்கிய இவரை மக்கள் "தண்டபாணி சுவாமிகள்" என்று போற்றினார்கள். அகப்பொருளின் துறைகளை அமைத்துச் சந்த யாப்பில் “வண்ணம்” என்ற பெயரில் பாடல்களைப் பாடியதால் வண்ணச்சரபம் என்றும் அழைக்கப்பட்டார்.அவிநாசி முதல் வேளூர் வரையிலான 218 ஊர்களுக்கும், கேரளம் மற்றும் இலங்கைக்கும் இவர் சென்றுள்ளார்.
இயற்றிய நூல்கள் :-
தமிழைத் துதிக்கும் பின்வரும் நூல்கள் இயற்றினார்:
  • முத்தமிழ்ப் பாமாலை
  • தமிழ்த் துதிப் பதிகம்
  • தமிழலங்காரம்
இவற்றோடு, முசுகுந்த நாடகம், இசைக் கீர்த்தனைகளையும் படைத்தார். திருக்குறளின் அடியொற்றி வருக்கக் குறள் என்ற நூலை உருவாக்கினார். சத்தியவாசகம் என்ற உரைநடைச் சுவடியை எழுதினார்.ஆங்கிலியர் அந்தாதி என்ற நூலைப் பாடி அதன்மூலம் ஆங்கிலேயரைப் பலவாறு சாடினார்.
பாடல்கள் :-
இவர் இலட்சம் பாடல்களைப் பாடியுள்ளார்.
  • குருபர தத்துவம் என்ற பெயரில் தன் வரலாற்று நூலை எழுதினார். இது 1,240 விருத்தப்பாக்களால் ஆனது.
  • புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதாகும்.
  • அருணகிரிநாதர் புராணம் என்ற பெயரில் அருணகிரிநாதர் வரலாற்றை எழுதினார்.
  • வைணவப் பெரியார்களான பெரியாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள் முதலியவர்களை உயர்வாகப் பாடியுள்ளார். பழந்தமிழ்ப் புலவர்கள் மற்றும் ஒளவையாரையும், திருவள்ளுவரையும் பலவாறு போற்றியுள்ளார்.

சொல்லாய்வு:-
தமிழ்ச்சொல் "புகல்" என்பது இந்தியில் "போல்" என்று மருவிவிட்டது என்றார். அதை, "புகல் எனும் சொல்லினைப் போல் எனச் சொல்லுதல் போல்இகல் இந்துத்தானியும் பலசொல செந்தமிழிற் கொண்டு இயம்புகின்றார்" என்று பாடினார்.

இலக்கண ஆய்வு:-
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்ற தமிழின் ஐந்திலக்கணத்தை விட புலமைக்கு இலக்கணம் கூறும் ஆறாம் இலக்கணத்தை இவர் கற்பித்தார்.
சிற்றிலக்கியங்களில் முன்னிலை நாட்டம், மஞ்சரி, ஆயிரம், முறைமை, விஜயம், நூல், சூத்திரம் என்ற புதுமை இலக்கிய வகைகளை வழங்கினார்.
இவர் பழகிய பெரியோர்கள்:-

புரட்சிக் கருத்துக்கள்:-
இல்லறத்தை மேன்மையுடையது என்றார். பெண்மையை உயர்த்திக் கூறி, பெண் உரிமைக்குக் குரல் கொடுத்த இவர், பெண்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி மறுப்பவர்களை, "நாரியரும் கற்கை நலம் என்று உரைக்குநரைப் பாரில் இகழ்வார் பலர்" என்று கூறி மனம் வருந்தினார்.
கணவனை இழந்த பெண் மறுமணம் புரிந்து கொள்ளலாம் என்ற புரட்சிகரமான கருத்தைக் கூறியுள்ளார் தண்டபாணி சுவாமிகள்.
தண்டபாணி சுவாமிகள், இம்மண்ணை ஆங்கிலேயர் ஆண்டு வருவதைக் கண்டு, அந்நியர் ஆட்சியை எதிர்த்துக் குரல் கொடுத்து,
"நிரைபடப் பசு அனந்தம் கொன்று தினும்
நீசர் குடை நிழலில் வெம்பித்
தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்" என்று பாடினார்.

இறுதிக் காலம்:-
இறுதிக் காலத்தில் அரிசி உணவைத் தவிர்த்து பயறு உணவுகளை உட்கொண்டார். கடும் தவத்தால் இவரது உடலில் வெப்பம் மிகுதியாகி, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு இறந்தார்.

                சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் 

இந்த அற்புதமான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்  பற்றிய வரலாற்றை அருளிய  சிரவைஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களை ஞானஸ்கந்தாசரமம் சார்பாகவும்,நமது குருநாதர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் வாழ்த்தி வணங்குகிறோம்

                                      
                                       ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                           சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக