வெள்ளி, 8 செப்டம்பர், 2017
புதன், 6 செப்டம்பர், 2017
சிரவையாதீனம் சிறப்புகள்
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர
சுவாமிகள்
இந்தியப் பண்பாடு என்பது முழுக்க
முழுக்க சமய ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கலாச்சாரமாகும் சமயம் என்பது கடவுள் வழிபாடு
,சமயக்கல்வி என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது. இவற்றில் தெய்வ வழிபாட்டிற்கு உரிய
இடங்களாக திருக்கோயில்களும் ,சமயக் கல்வி மற்றும் மெய்ப்பொருள் கல்விக்கும், ஆய்வுக்கும்
உரிய நிறுவனங்களாகத் திருமடங்களும் திகழ்கின்றன.எனவே இந்திய சமயங்கள் அனைத்தினுக்கும்
ஆலயங்களும், ஆதீனங்களும் இரு கண்களுக்கு நிகரானவை எனலாம். தமிழ் இலக்கியத்துறையில்
ஆதீனங்களின் பெரும்பங்கை உணர தமிழ் இலக்கிய வரலாற்றை மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்டிய
திரு.சி.வை.தாமோதரனார் ஒரு காலப் பகுதியை ஆதீன காலம் எனச் சிறப்புப் பெயரிட்டு வழங்குவதே
போதுமானதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சைவ ஆதீனங்களின் மரபில் வாழையடி
வாழையாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதயமானதுதான் சிரவையாதீனம் என்னும் கௌமார
மடாலயம்.
இப்பொழுது அறுவகை சமயங்கள் என்று சூரியன், சிவபெருமான்
,பராசக்தி ,திருமால் ,விநாயகர், முருகப்பெருமான் என்னும் கடவுளர்களுள் ஒருவரை முதன்மையாக
கொண்டு வழிபடுவதும் ,முறையே சௌரம்,சைவம் ,சாக்தம்,காணாபத்தியம்
,கௌமாரம் என வழங்கப்படுவதும் ஆகிய ஆறு தான் பரவலாக பேசப்படுகின்றன .இந்த அறுசமய நெறியை
வகுத்தவர் எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கராச்சாரியார் என்று கூறப்படுகிறது.
சிரவையாதீனக் குரு பரம்பரை
அகச்சந்தானம்
முருகக்கடவுள்
புறச் சந்தானம்
1.அருணகிரிநாதர் (15 ஆம் நூற்றாண்டு
)
2.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
(1839-1898)
உபதேச பரம்பரை
1.தவத்திரு இராமானந்த சுவாமிகள்
2.தவத்திரு சிரவை கந்தசாமி சுவாமிகள்
3.தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள்
(1929-1994)
4.தவத்திரு குமரகுருபர சுவாமிகள்
-இப்போதைய ஆதீனகர்த்தர்.
கொங்கு நன்னாடு பல நூற்றாண்டுகளாகச்
செய்த தவத்தின் பயனாக இரண்டு திருமடங்கள் இங்கு தோன்றின. ஒன்று வீர சைவ மடம். மற்றொன்று
குருநாதரைப் பரம்பொருளாகவும் ,முருகப் பெருமானை வழிபடுகடவுளாகவும் கொண்ட கௌமாரம மடம்
.முன்னையது திருப்பேரூர் ஆதீனம். அடுத்தது சிரவை ஆதீனம். இரண்டு ஆதின கர்த்தர்களும்
தவத்திரு இராமானந்த அடிகளார் என்ற புனித கங்கையின்
கிளை நதிகளே. ராமானந்த சுவாமிகள் கவுமார ஆச்சாரியரான தவத்திரு தண்டபாணி சுவாமிகளிடம்
அருள் உபதேசம் பெற்று தம் ஊரான சரவணம்பட்டியில்
ஒரு மடாலயம் நிறுவி அதில் சதுர்வேத சித்தாந்த சண்மத சமயாதீத அத்துவித கௌமார சபையையும்
தோற்றுவித்தார்.அவரிடம் உபதேசம் பெற்ற அடியார்களில் தமது பூர்வாசிரமத் தம்பி திரு வெங்கிடசாமி
கவுண்டர் திருமகன் கந்தசாமி என்பவருக்குத்
தமக்கு அடுத்த பீடாபதியாகப் பட்டம் சூட்டி எழுந்தருளிவித்தார்.இரண்டாவது தலைவரான
தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மிகச்சிறந்த தமிழறிஞர்.
பக்த மான்மியம் என்ற பெருங்காப்பியம்,
கோவை,கலம்பகம்,பிள்ளைத்தமிழ், பதிகங்கள் என்று பல சிற்றிலக்கியங்களும் பாடி அருளினார்.
அடுத்து மூன்றாவது பட்டமான போற்றுதலுக்குரிய கஜபூஜை சுந்தர சுவாமிகள் இந்த மடாலயத்தின்
புகழை உலகமெல்லாம் பரப்பினார். இப்போது அவர் காட்டிய திருநெறியில் தொடர்ந்து சமயப்
பணியும் தமிழ்ப்பணியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிமுகக் கருத்துக்கள் சிரவையாதீனக்
கவிஞர் பெரும்புலவர் ப.வெ. நாகராஜன் அவர்கள் எழுதிய சிரவை ஆதீனம் வரலாற்று நூலிலிருந்து
எடுக்கப்பட்டவையாகும் .
தற்போது நான்காம் பட்டமாக தவத்திரு குமரகுருபர சுவாமிகள்
அவர்கள் 24 வயதிலேயே குருமகா சன்னிதானமாக அருளாட்சி பெற்று மிகச் சீரிய சேவை புரிந்து
வருகிறார் .இவர் கஜபூஜை சுவாமிகளின் பூர்வாசிரமத் தம்பி திரு நடராஜகவுண்டர்,அவரது மனைவி
திருமதி வள்ளியம்மை ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 6.8.1970 அன்று பிறந்தவர்.தமது இளங்கலைப்
பட்டம் முடித்தபிறகு கஜபூஜை சுவாமிகளின் தொண்டராகத் திருமடத்திலேயே பணிபுரிந்து வந்தார்.அதன்பின்
1994ல் துறவு பூண்டு 24ம் வயதில் நான்காவது குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்றார்.
ஆரம்ப கால இன்னல்களைத் தம் அளவற்ற
திருவருளாலும்,குருவருளாலும் சமாளித்து இன்று இவரது தலைமையில் சிரவையாதீனம் கஜபூஜை
சுவாமிகள் காட்டிய வழியில் பேரொளி பரப்பி வருகிறது. குமர குருபர சுவாமிகள் மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம்
பெற்றுள்ளார் .தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சு.வேங்கடராமன் அவர்கள் ஆய்வுநெறியாளராக
விளங்கிய இந்த ஆராய்ச்சிப்படிப்பிற்கு சுவாமிகள் எடுத்துக்கொண்ட பொருள்”சிரவை கந்தசாமி
சுவாமிகளின் திருப்பேரூர் பற்றிய சிற்றிலக்கியங்களின் இலக்கிய மதிப்பீடு”
திரு.வேங்கட ராமன் அவர்களை உலகத்தமிழாராய்ச்சி
நிறுவனத்தில் சந்தித்த போது அவர் சுவாமிகள்
ஆதினப் பணிகளில் கொண்டுள்ள அளவற்ற ஈடுபாட்டையும், முன்னெடுத்துச் செல்ல அவர்
மேற்கொள்ளும் ஒப்பற்ற பணிகளையும் குறித்து தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது நமக்குப்
பெருமிதமாக இருந்தது.சுவாமிகள் வருடந்தோறும் மலேசியாவில் நடக்கும் அருணகிரிநாதர் விழாவில் கலந்து கொள்வது உட்பட பல வெளிநாடுகளுக்கும் சென்று முன்செய்த
பழிக்குத் தீர்வான நம் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின்
எல்லையற்ற திருவருளைப்பரப்பி வருகிறார்.மூன்று மாநிலங்களைச்சார்ந்த முருக ஆதினங்களுக்குத்
தலைமை ஆதினமாக நம் சிரவையாதீனம் செயல்பட்டு வருகிறது.அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் உயரிய நோக்கிலும் நம் சுவாமிகள் அனைவருக்கும்
முன்னோடியாகத் திகழ்கிறார்.அண்மையில் கோவை ஹஜ் கமிட்டித்தலைவருக்கு நடந்த பாராட்டு
விழாவில் சுவாமிகள் கலந்துகொண்ட செய்தியைப் படித்த போது இதை உணர முடிந்தது.எந்த மடாலயமும்
அவ்வளவாக ஈடுபடாத மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனிலும் சிரவையாதீனம் கால்பதித்துள்ளது.கோவையிலும்,திருப்பூரிலும்
150 குழந்தைகளுக்கும் மேற்பட்டோர் பயிலும் சிறப்புப் பள்ளிகள் அதிக எண்ணிக்கையிலான
ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
www.kaumaramutt.com
கட்டுரையாக்கம்: கொங்கு இதழுக்காக இந்தக் கட்டுரையை எழுதியவர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்கள், துணைப்பேராசிரியர், வைணவக்கல்லூரி.
நன்றி: கொங்கு இதழ்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
தவத்திரு சுந்தரசுவாமிகள் நினைவு சுழற்கோப்பை விளையாட்டு விழா
05.09.17 அன்று தவத்திரு கஜபூஜை சுந்தரசுவாமிகள் அவர்களின் நினைவு சுழற்கோப்பை விளையாட்டு விழாவில் சுமார் 40 ற்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட மாணவர்களையும் ஆசிரியர்களையும் நமது சுவாமிகள் செயலர் Dr. தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் வாழ்த்தி துவக்கி வைத்தார்கள். அதன் படங்கள்.
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
ஆறெழுத்தலங்காரம் பகுதி-1
ஓதின் மனம் குவியும்
பொய்கொண்ட மாயை எல்லாம் பொடி
ஆகும் புகழ்மலியும்
கைகொண்ட மட்டும் கொடுத்துக்
களிக்கும் கருணை உண்டாம்
மெய்கொண்ட சித்தி எட்டும்
தனி
வீடும் வெளிப்படுமே
-ஆறெழுத்தலங்காரம்
கௌமார குரு நாதர் வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அவர்கள் தமது ஆறெழுத்தலங்காரம் எனும் நூலில் பாடிய பாடல் இது. முருகனது
ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வந்தால் மனம் ஒன்று குவியும். பொய்யாகிய மாயை எல்லாம் பொடிப்
பொடியாய்ப் போய்விடும். புகழ் வரும். எவ்வளவுக்கெவ்வளவு ஓதுகின்றோமோ அந்த அளவு கை கொடுத்து
இன்பம் தரும். இறைவனது கருணை கிட்டும். உண்மையாகிய எட்டு சித்திகளும் பேரின்ப தனி வீடும்
வெளிப்படும் என்பது இதன் பொருள்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
www.kaumaramutt.com
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
வெள்ளி, 1 செப்டம்பர், 2017
ஜீவ நாடி உரைத்தபடி செய்யும் தீப விழா அழைப்பிதழ் 05.09.17
ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் காரைக்குடி அகத்தியர் திருமகன் அவர்களுக்கு முருகப்பெருமான் உரைத்தபடி உலக நன்மைக்காக பஞ்சபூத தலங்களில் 1008 சக்திகள தீப வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மண் தலமான காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் வருகின்ற 5.9.2017 செவ்வாய்க்கிழமை முழுமதியன்று மாலை 5.45 மணிக்கு தீப வழிபாடு நடக்க உள்ளது. முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்து செய்யப்படும் தீப விழா என்பதால் இதில் கலந்து கொள்பவர்களுக்கு இறைவன் அருள் கிட்டும் என்பது திண்ணம். தாங்கள் எது குறித்து நன்மைக்காக பிரார்த்தனை செய்தாலும் அது அப்படியே நடக்கும் என்பது ஜீவ நாடி அருள்வாக்காகும். பிராப்தம் இருக்கும் நமது கௌமாரபயணம் வாசகர்கள் இந்த தீப விழாவில் கலந்து கொண்டு அம்மை அப்பன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அழைப்பிதழ்
தொடர்புக்கு: ஸ்ரீஅகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழு மதுரை மற்றும் காரைக்குடி
செல்: 9994635716
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
மலேசியா முருக பக்தர்கள் பாராட்டு
முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கு மலேசியா முருக பக்தர்கள் பேரவை மற்றும் அருணகிரிநாதர் மன்றம் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கௌமார மடாலயமும் சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் அவர்களும் எடுக்கும் இந்த அதி உன்னத முயற்சிக்கு தாங்கள் உறுதுணையாக இருந்து எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் சுவாமிகளிடம் தெரிவித்து இந்த நிகழ்வு முருகனின் அருளால் நடக்கின்றது என்றும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதை சுவாமிகள் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நல்ல செய்தியை நமது கௌமாரபயணம் முருக பக்தர்களுக்கும் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். வருடம் தோறும் மலேசியாவில் நடக்கும் அருணகிரிநாதர் விழாவில் நமது சிரவையாதீனம் சுவாமிகள் கலந்து கொண்டு சிறப்பு செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
www.kaumaramutt.com
படங்கள்: மலேசியாவில் அருணகிரி நாதர்விழா
வேண்டுகோள்: மலேசியா மக்கள் அருணகிரிநாதர் மகிமை தெரிந்து விழா எடுக்கின்றார்கள். நாமும் நிச்சயம் அருணகிரி நாதருக்கு ஊர் தோறும் விழா எடுக்க வேண்டும். திருப்புகழை வீதிகள் தோறும் பாடி தமிழ்க்கடவுளாம் முருகனை தமிழால் பாடி அருள் பெற அனைவரும் ஒன்று கூடுவோம். நன்றி!
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்தஉபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள், ஸ்ரீஞானஸ்கந்தர் பீடம் அந்தியூர்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
வியாழன், 31 ஆகஸ்ட், 2017
புலவர் புராணத்தில் ஒரு துளி
கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அவர்கள் புலவர் புராணம் என்ற பெயரில் 72 புலவர்களின் வாழ்க்கை வரலாற்றை
எழுதினார்கள். இது மூவாயிரம் பாடல்களைக்கொண்டதாகும். அதில் ஒரு துளி பகழிக்கூத்தர்
பற்றி நமது குருநாதர் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்களிடம் இருந்து
வெளிப்பட்டது.
பகழிக்கூத்தர்
பகழிக்கூத்தர் 15 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர். திருச்செந்தூர்
முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் இயற்றிப்
பெரும்புகழ் ஈட்டியவர். இவர் இயற்றிய மற்றொரு
நூல் சிந்தாமணிச் சுருக்கம். இவருடைய ஊர் ஏரல்.
இவ்வூர் திருநெல்வேலி அருகே உள்ள திருவைகுண்டத்தைச்
சார்ந்த பெருங்குளத்துக்கு கிழக்கே உள்ளது.இவர்
இயற்றிய நூல் திருச்செந்தூர் பிள்ளைத்
தமிழ்.இவர் வைணவ மரபினர்.இப்பிள்ளைத் தமிழைப்பாடி வயிற்று நோய் நீங்கப்
பெற்றார். இவர் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றி
முடித்ததும் சபையோரில் சிலர் இவர் வைணவர்
என்று மரியாதை செய்தாது புறக்கணித்தனர்.
அன்றிரவு முருகவேளுக்குச் சாத்தப்பட்டிருந்த ரத்ன பதக்கம் காணாமற்போக,
விடியற் காலையில் கோயிலார் தேட, அது நித்திரை
செய்து கொண்டிருந்த பகழிக்கூத்தரது கழுத்தில் அணியப்பட்டிருப்பதைக் கண்டு,அவர் மகிமையை
அறிந்து தாம் செய்த அபசாரத்தை
பொருத்தருளும் படி அவரைக் கேட்டுக்
கொண்டு அவரைப்பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வந்து
மரியாதை செய்தனர். எனவேதான் சமயபேதங்கள் பார்க்காமல் அறுசமய
வழிபாடுகளயும் செய்வது கௌமார நெறியாகும். இதை முறைப்படுத்தியவர் கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அவர்கள் ஆவார். அவரிடம் இருந்து தோற்றம் பெற்றதே கோவை கௌமார மடாலயம்
ஆகும். புலவர் புராணப் பாடலை நமது கௌமாரபயணம் வாசகர்கள் படித்து அருள் பெறுக.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்
அருளிய பழிக்கூத்தரைப் பற்றி கௌமார குரு நாதர் தவத்திரு.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
அருளிய புலவர் புராணம் எனும் நூலில் உள்ள பழம்பாடல்.
பூமாது போற்றும் புகழ்ப்பகழிக்
கூத்தாவுன்
பாமாலை கேட்கயாம் பற்றோமோ-
யேமம்
கொடுக்க வறியேமா கூற்றுவன்வா
ராமற்
றடுக்க வறியேமா தாம்.
-புலவர் புராணம்
கட்டுரையாக்கம்: ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள்
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்
www.kaumaramutt.com
www.kaumaramutt.com
படம்: எம்மதமும் சம்மதமாய் ஹஜ் கமிட்டி தலைவருக்கு பாராட்டு தெரிவித்த சிரவையாதீனம் அவர்கள். நன்றி: தினத்தந்தி
ஓம் ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















