புதன், 6 செப்டம்பர், 2017

சிரவையாதீனம் சிறப்புகள்

              சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்
                                          
இந்தியப் பண்பாடு என்பது முழுக்க முழுக்க சமய ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கலாச்சாரமாகும் சமயம் என்பது கடவுள் வழிபாடு ,சமயக்கல்வி என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது. இவற்றில் தெய்வ வழிபாட்டிற்கு உரிய இடங்களாக திருக்கோயில்களும் ,சமயக் கல்வி மற்றும் மெய்ப்பொருள் கல்விக்கும், ஆய்வுக்கும் உரிய நிறுவனங்களாகத் திருமடங்களும் திகழ்கின்றன.எனவே இந்திய சமயங்கள் அனைத்தினுக்கும் ஆலயங்களும், ஆதீனங்களும் இரு கண்களுக்கு நிகரானவை எனலாம். தமிழ் இலக்கியத்துறையில் ஆதீனங்களின் பெரும்பங்கை உணர தமிழ் இலக்கிய வரலாற்றை மிகச் சுருக்கமாக சுட்டிக்காட்டிய திரு.சி.வை.தாமோதரனார் ஒரு காலப் பகுதியை ஆதீன காலம் எனச் சிறப்புப் பெயரிட்டு வழங்குவதே போதுமானதாகும். இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சைவ ஆதீனங்களின் மரபில் வாழையடி வாழையாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உதயமானதுதான் சிரவையாதீனம் என்னும் கௌமார மடாலயம்.
 இப்பொழுது அறுவகை சமயங்கள் என்று சூரியன், சிவபெருமான் ,பராசக்தி ,திருமால் ,விநாயகர், முருகப்பெருமான் என்னும் கடவுளர்களுள் ஒருவரை முதன்மையாக கொண்டு வழிபடுவதும் ,முறையே  சௌரம்,சைவம் ,சாக்தம்,காணாபத்தியம் ,கௌமாரம் என வழங்கப்படுவதும் ஆகிய ஆறு தான் பரவலாக பேசப்படுகின்றன .இந்த அறுசமய நெறியை வகுத்தவர் எட்டாம் நூற்றாண்டின் ஆதிசங்கராச்சாரியார் என்று கூறப்படுகிறது.
சிரவையாதீனக் குரு பரம்பரை
அகச்சந்தானம்
முருகக்கடவுள்
 புறச் சந்தானம்
1.அருணகிரிநாதர் (15 ஆம் நூற்றாண்டு )
2.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898)
உபதேச பரம்பரை
1.தவத்திரு இராமானந்த சுவாமிகள்
2.தவத்திரு சிரவை கந்தசாமி சுவாமிகள்
3.தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் (1929-1994)
4.தவத்திரு குமரகுருபர சுவாமிகள் -இப்போதைய ஆதீனகர்த்தர்.
கொங்கு நன்னாடு பல நூற்றாண்டுகளாகச் செய்த தவத்தின் பயனாக இரண்டு திருமடங்கள் இங்கு தோன்றின. ஒன்று வீர சைவ மடம். மற்றொன்று குருநாதரைப் பரம்பொருளாகவும் ,முருகப் பெருமானை வழிபடுகடவுளாகவும் கொண்ட கௌமாரம மடம் .முன்னையது திருப்பேரூர் ஆதீனம். அடுத்தது சிரவை ஆதீனம். இரண்டு ஆதின கர்த்தர்களும் தவத்திரு இராமானந்த   அடிகளார் என்ற புனித கங்கையின் கிளை நதிகளே. ராமானந்த சுவாமிகள் கவுமார ஆச்சாரியரான தவத்திரு தண்டபாணி சுவாமிகளிடம் அருள் உபதேசம் பெற்று தம்  ஊரான சரவணம்பட்டியில் ஒரு மடாலயம் நிறுவி அதில் சதுர்வேத சித்தாந்த சண்மத சமயாதீத அத்துவித கௌமார சபையையும் தோற்றுவித்தார்.அவரிடம் உபதேசம் பெற்ற அடியார்களில் தமது பூர்வாசிரமத் தம்பி திரு வெங்கிடசாமி கவுண்டர் திருமகன் கந்தசாமி என்பவருக்குத்  தமக்கு அடுத்த பீடாபதியாகப் பட்டம் சூட்டி எழுந்தருளிவித்தார்.இரண்டாவது தலைவரான தவத்திரு கந்தசாமி சுவாமிகள் மிகச்சிறந்த தமிழறிஞர்.
பக்த மான்மியம் என்ற பெருங்காப்பியம், கோவை,கலம்பகம்,பிள்ளைத்தமிழ், பதிகங்கள் என்று பல சிற்றிலக்கியங்களும் பாடி அருளினார். அடுத்து மூன்றாவது பட்டமான போற்றுதலுக்குரிய கஜபூஜை சுந்தர சுவாமிகள் இந்த மடாலயத்தின் புகழை உலகமெல்லாம் பரப்பினார். இப்போது அவர் காட்டிய திருநெறியில் தொடர்ந்து சமயப் பணியும் தமிழ்ப்பணியும் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிமுகக் கருத்துக்கள் சிரவையாதீனக் கவிஞர் பெரும்புலவர் ப.வெ. நாகராஜன் அவர்கள் எழுதிய சிரவை ஆதீனம் வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும் .

 தற்போது நான்காம் பட்டமாக தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள் 24 வயதிலேயே குருமகா சன்னிதானமாக அருளாட்சி பெற்று மிகச் சீரிய சேவை புரிந்து வருகிறார் .இவர் கஜபூஜை சுவாமிகளின் பூர்வாசிரமத் தம்பி திரு நடராஜகவுண்டர்,அவரது மனைவி திருமதி வள்ளியம்மை ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 6.8.1970 அன்று பிறந்தவர்.தமது இளங்கலைப் பட்டம் முடித்தபிறகு கஜபூஜை சுவாமிகளின் தொண்டராகத் திருமடத்திலேயே பணிபுரிந்து வந்தார்.அதன்பின் 1994ல் துறவு பூண்டு 24ம் வயதில் நான்காவது குருமகா சந்நிதானமாகப் பொறுப்பேற்றார்.
ஆரம்ப கால இன்னல்களைத் தம் அளவற்ற திருவருளாலும்,குருவருளாலும் சமாளித்து இன்று இவரது தலைமையில் சிரவையாதீனம் கஜபூஜை சுவாமிகள் காட்டிய வழியில் பேரொளி பரப்பி வருகிறது. குமர குருபர சுவாமிகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  தமிழில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் .தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சு.வேங்கடராமன் அவர்கள் ஆய்வுநெறியாளராக விளங்கிய இந்த ஆராய்ச்சிப்படிப்பிற்கு சுவாமிகள் எடுத்துக்கொண்ட பொருள்”சிரவை கந்தசாமி சுவாமிகளின் திருப்பேரூர் பற்றிய சிற்றிலக்கியங்களின் இலக்கிய மதிப்பீடு”
திரு.வேங்கட ராமன் அவர்களை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சந்தித்த போது அவர் சுவாமிகள்  ஆதினப் பணிகளில் கொண்டுள்ள அளவற்ற ஈடுபாட்டையும், முன்னெடுத்துச் செல்ல அவர் மேற்கொள்ளும் ஒப்பற்ற பணிகளையும் குறித்து தம் மகிழ்ச்சியைத் தெரிவித்தபோது நமக்குப் பெருமிதமாக இருந்தது.சுவாமிகள் வருடந்தோறும் மலேசியாவில் நடக்கும்  அருணகிரிநாதர் விழாவில் கலந்து  கொள்வது உட்பட பல வெளிநாடுகளுக்கும் சென்று முன்செய்த பழிக்குத் தீர்வான நம் தமிழ்க்கடவுள்  முருகப்பெருமானின் எல்லையற்ற திருவருளைப்பரப்பி வருகிறார்.மூன்று மாநிலங்களைச்சார்ந்த முருக ஆதினங்களுக்குத் தலைமை ஆதினமாக நம் சிரவையாதீனம் செயல்பட்டு வருகிறது.அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச்  செல்லும் உயரிய நோக்கிலும் நம் சுவாமிகள் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார்.அண்மையில் கோவை ஹஜ் கமிட்டித்தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவில் சுவாமிகள் கலந்துகொண்ட செய்தியைப் படித்த போது இதை உணர முடிந்தது.எந்த மடாலயமும் அவ்வளவாக ஈடுபடாத மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனிலும் சிரவையாதீனம் கால்பதித்துள்ளது.கோவையிலும்,திருப்பூரிலும் 150 குழந்தைகளுக்கும் மேற்பட்டோர் பயிலும் சிறப்புப் பள்ளிகள் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 www.kaumaramutt.com
கட்டுரையாக்கம்: கொங்கு இதழுக்காக இந்தக் கட்டுரையை எழுதியவர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்கள், துணைப்பேராசிரியர், வைணவக்கல்லூரி.
நன்றி: கொங்கு இதழ்

              சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக