வெள்ளி, 22 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-15

                                         திருமுருகன்பூண்டி முருகப்பெருமான்
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்


ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!
என்பது ஔவையார் வாக்கு. 
                                                            
                                                                      ஔவையார்
நமக்கு இறைவன் மனிதப் பிறப்பு கொடுத்திருப்பது இறைவனை உணர்ந்து கொள்வதற்காகத்தான். 84 லட்சம் உயிரினங்கள் உள்ளன. அதில் மனித இனமும் ஒன்று. புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாப் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்கிறார் மாணிக்க வாசக சுவாமிகள் சிவபுராணத்தில்.
                                                            
அப்படி கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீணடிக்காமல் முருகா...பரம்பொருளே...கௌமாரச் செல்லமே...கௌமாரச் செல்வமே என்று உனை வழிபட வேண்டியது அவசியம் என்பதை அறிந்து பல காலமும் பிரார்த்தனை செய்து எனது அறிவினில் உண்ணை உணர்ந்து வருடத்திற்கு ஒருமுறையாவது உன்னை நோக்கி தவம், ஜபம் போன்றவைகளைச் செய்து மனம் கனிந்து உனது திருவடிகளை சரணடைய அருள்வாயே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். இன்று நமது பாரம்பரியமான முருக வழிபாட்டை விட்டு பின் மனிதர்களை தெய்வமாக்கி தொழுகின்ற செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. வருடந்தோறும் ஆறு படை வீடுகளுக்கு மாலை போட்டுச் சென்று முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே முருக பக்தியில் திளைத்த பக்தர்கள் இன்று பல சமய வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள். அது தவறில்லை ஆனால் நமது பாரம்பரிய வழிபாடான முருக பக்தியை விட்டு விடக்கூடாது என்று எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அடிக்கடி உபதேசம் செய்கின்றார்கள். 
                                                   
                                                           பாரம்பரிய முருக பக்தி
நாம் பேசுகின்ற மொழியைக் கொடுத்ததே அந்த முருகப் பெருமான்தானே. தமிழ்க்கடவுள் என்றும் முப்பாட்டன் முருகன் என்றும் நாம் போற்றுகின்ற முருகப்பெருமான் சாதாரண சிறு தெய்வம் அல்ல. ஆறு சமயங்களும் காண அறியாத உன்னத பரம்பொருள் முருகப் பெருமான். அதை நான் சொல்லவில்லை. அருணகிரிநாதர் சொல்கிறார். நாரதர் செய்த யாகத்தில் வந்த ஆட்டை அடக்கி அதை வாகனமாகக் கொண்ட முருகப்பெருமான் மீது யார் தூய அன்பு வைத்து வழிபடுகின்றார்களோ அவர்களை விட்டு ஒரு நிமிடம் கூட நீங்காமல் இருப்பாராம் முருகப்பெருமான். இப்போது புரிகின்றதா அனைத்து சாஸ்திரங்களையும் படித்து முடித்தால் மட்டும் போதாது ஆறு சமயங்களும் அறிவினால் தேடி தேடி கிடைக்காத முருகப்பெருமான் பக்தியாகிய அன்பினால் நம்மை விட்டு ஒரு நிமிடம் கூட நீங்கமாட்டார் என்றால் உண்மையான பக்தியின் வலிமையை உணர்ந்து கொள்ளுங்கள்.  கொங்கு நாட்டில் உள்ளஅற்புத சிவத்தலம், சிவ பெருமான் சுந்தரரது பொருள்களை மறைத்து வைத்து திருவிளையாடல் செய்த தலம் திருமுருகன் பூண்டி. அந்தத் திருத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மீது இந்த திருப்புகழைப் பாடியுள்ளார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                                  
                  சிவபெருமான் வேடராக வந்து சுந்தரர் பொருள்களைப் பறித்தல்
அவிநாசி திருப்புகழைப் பாடினால் எப்படி குரு கிடைப்பாரோ அப்படி இந்த திருமுருகன் பூண்டி திருப்புகழைப் பாடினால் குரு மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் ஏற்படும். யாருக்கு குரு மீது இப்படி பக்தி ஏற்படுகிறதோ அவர்களுக்கு குமரனாகிய முருகப்பெருமான் அவர்களை விட்டு நீங்காமல் நிறைந்து இருப்பார் என்பது திண்ணம். குரு பக்தி தான் கௌமார நெறி. முதல் குரு முருகப்பெருமான். எனெவே குரு நெறியில் குரு பக்தியில் திளைக்க வேண்டும். அது தூய முருக பக்தியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பது திண்ணம். இதை விளக்கும் திருமுருகன் பூண்டி திருப்புகழ் இதோ.


அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் 

அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் 

தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் 

சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே 

சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் 

சடுசமயங் காண்டற் ...... கரியானே 

சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே 

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

 
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

வியாழன், 21 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-14

எப்போதும் வள்ளியோடு இருக்கும் பரம்பொருள் குருவாக அருளல்
அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமானே குருவாக வந்ததால் முருகா இந்த சம்சார சாகரத்துள் பிறந்து மீண்டும் இறந்து உழலாமல் என்னை ஆள்கின்ற சற்குருவாகி இருப்பாயே என்கிறார். 
                                               
                                                          பிறப்பு இறப்பு சக்கரம்
அது மட்டுமல்ல குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். ஒருவருக்கு குரு மட்டும் கிடைத்துவிட்டால் போதும் மற்றவை தானாகவே வந்துவிடும். இறைவனே முதல் குரு. இதை அகச்சந்தானம் என்கின்றோம். கௌமார சமயத்தின் அகச்சந்தான முதல் குரு நாதர் கயிலையில் கந்த வெற்பில் உள்ள முருகப்பெருமானாகும். ஒருவரை குரு பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் இருந்து மீட்டு எடுப்பார். அதற்கு மட்டும் குரு அல்ல மற்ற எல்லா செயல்களுக்கும் குருவாக நீ அருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். அதனால் தான் பிறவாகி என்கிறார். பிற என்றால் இன்னும் என்னென்னெ உள்ளதோ அனைத்துக்கும் நீயே ஆகி என்றும் அழிவில்லாத பெரு வாழ்வைத் தருவாயே என்கிறார். எப்போதும் இச்சா சக்தியாகிய வள்ளிப்பிராட்டியோடு இருக்கின்ற முருகப்பெருமானே நீ அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு அறங்களையும் தருவாய் என்று கேட்கின்றார். அருணகிரிநாத சுவாமிகள் இதை எங்கு கேட்கிறார் கொங்கு மண்டலத்தில் உள்ள சுந்தரரால் முதலை வாயில் இருந்து மதலையை மீட்ட அதிசயம் நடந்த அவிநாசி எனும் தலத்தில் இதைப் பாடுகின்றார். 
                                    
                                     அவிநாசி திருத்தலத்தின் அருமைக் காட்சி
நிச்சயம் அவிநாசி செல்லும் அன்பர்கள் அங்கு சென்று இந்த திருப்புகழைப் பாடுங்கள் நிச்சயமாக நல்ல குரு நாதர் உங்களுக்கு வாய்க்கப் பெருவீர்கள். குருவை நாடி அலைபவர்கள் இந்தத் திருப்புகழை ஓதினால் ஒரு நல்ல குரு உங்களைத் தேடி வருவார் என்பது திண்ணம். அப்படி வருகின்ற குரு அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கு விதமான நல்லறங்களையும் தந்து பிறப்பு இறப்பாகிய சக்கரத்தில் இருந்து விடுபட வைத்து அழியாப் பெருவாழ்வை அருள்வார். அது நிச்சயம் நடக்கும். இதோ அந்த திருப்புகழ்

அவிநாசி திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் 

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே 

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா 

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

புதன், 20 ஜனவரி, 2016

கௌமார மடாலயத்தில் தைப்பூசத் தேர் விழா

                                                  சிரவை தண்டபாணிக்கடவுள்
கோவை சிரவணபுரம் கௌமார மடாலத்தில் உள்ள தண்டபாணிக்கடவுள் திருக்கோவிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா சிரவை ஆதீனத் தலைவர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. அதன் அழைப்பிதழை இங்கு இணைத்துள்ளோம்.
அழைப்பிதழ்


தினம் ஒரு திருப்புகழ் பகுதி-13

இறை அருள் பெற்றவர்களை அனுபூதி பெற்றவர்கள் என்று சொல்கின்றோம். பல பேர் அனுபூதி பெறுவதற்காக இறைவன் மீது பாடுவார்கள். அவர்கள் பாடல்களைக் கேட்டு கடவுள் மகிழ்ந்து இறைவன் அனுபூதி கிட்டும். ஆனால் கௌமார குரு நாதர் அருணகிரி நாத சுவாமிகளுக்கு அனுபூதி கிடைத்துப் பின் பாடினார். கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி பாடி என்பார் தாயுமாணவ சுவாமிகள். இவர் பாடி அருள் பெறவில்லை அருள்பெற்றுப் பாடினார். இன்னும் சொல்லப் போனால் பாட அருள் பெற்றார். இத்தகைய அருள் பெற்ற ஞானிகள் அருகில் இருந்தாலே நமது கர்ம வினைகள் சுட்டு எரிக்கப்படும். அருள் நிலையில் அவர்கள் பாடிய பாடல்களில் அளப்பரிய மந்திர சக்தி உண்டு. அந்த பாடல்களை நாம் பாடினால் அவர்கள் என்ன நிலையில் இருந்து பாடினார்களோ அதே நிலையை நாமும் உணர முடியும். அதற்கு உதவுவது திருப்புகழ் எனும் மகா மந்திரம்.
                                                 
                                             கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகளுக்கு 24 வயது ஆன போது தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் முருகன் திருவடியில் கலந்தார்கள். அப்போது அடுத்த ஆதீனம் யார் என்ற பேச்சு எழுந்தபோது தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்களின் அனுக்கத் தொண்டராக வலம் வந்த எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள்தான் அடுத்த ஆதீனம் என்று பட்டம் சூடி கல்லாடை புனைந்து சந்நியாசம் பெற்று மடாதிபதியாக ஆனார்கள். இதைக் கொடுத்தது எது. அதற்குப் பெயர்தான் அனுபூதி என்பது. இறையருள் கருணை நிரம்பப் பெற்றவர் எம் ஞானதேசிகர் அவர்கள். தனது குருவிற்கு செய்த பணிவிடையும் தொண்டுகளும் தனது குரு நாதர் சொல்லும் அனைத்து செய்திகளையும் உடன் இருந்து கொண்டே உள் வாங்கி உள் வாங்கி வசனங்களை மிக ஏற்றி மறவாமல் மனதை எந்த துயர்களும் பாதிக்காமல் வைத்துக் கொண்டு தனது குரு நாதர் கொடுத்த ஆறெழுத்து மந்திரத்தை இசை போல் எப்போதுமே ஓதி ஓதி இன்று கல்விப்பணி, சமுதாயப்பணி, இலக்கியப்பணி, ஆன்மீகப்பணி என அனைவரும் போற்றும் வகையில் காந்தம் என் இழுக்கும் கவர்ச்சி முகத்தோடு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதுதானே இகபர சௌபாக்யம் என்பது. இல்லறத்தில் இல்லாவிட்டாலும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இல்லறத்தை நல்லறமாக வாழ வழிகாட்டி வருபவர் எம் ஞானதேசிகர் அவர்கள். இது எப்படி கிடைத்தது அருணகிரி நாதர் உபதேச வம்சத்தில் வந்தவர் எம் ஞானதேசிகர் அவர்கள். பதி என்பது இறைவன் பசு என்பது ஆன்மாவாகிய நாம் பாசம் என்பது அந்த இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இதை சைவ சிந்தாந்தங்கள் வலியுறுத்திக் குறிப்பிடுகின்றது. அந்த பதி பசு பாசத்தை உணர குரு வேண்டும் குரு கொடுக்கும் மந்திரம் வேண்டும். அந்த மந்திரத்தை நாம் ஜபம் செய்து வர வேண்டும். அந்த மந்திரமே நமக்கு இகபர சௌபாக்யத்தைக் கொடுத்து பசு பதி பாசத்தை உணர்த்திவிடும் காரணம் அந்த சடாட்சர மந்திரத்திற்குரிய முருகப்பெருமான் இந்த பசு பதி பாசத்தை நன்றாக உணர்ந்தவர் என்பதால் நமக்கும் ஓதாமல் அதை உணர வைப்பார். குரு நெறியே கௌமார நெறி. யாம் ஓதிய கல்வியும் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது என்பது கந்தர் அனுபூதி. இதை மையமாக வைத்தே இன்றைய திருப்புகழைப் பாராயணம் செய்வோம்.
பழனிமலை திருப்புகழ்
வசன மிக வேற்றி...மறவாதே
மனது துயர் ஆற்றில்...உழலாதே

இசை பயில் சடாட்ச...ரமதாலே

இகபர செளபாக்யம்...அருள்வாயே


பசுபதி சிவாக்யம்...உணர்வோனே

பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!
விளக்கம்:


வசன மிக வேற்றி...மறவாதே = உன் பெயரையே, வசனமாய் உருவேற்றி உருவேற்றி 
                                             
                                குரு சொல்லும் வசனங்களை மனதில் உரு ஏற்றுதல்

மனது துயர் ஆற்றில்...உழலாதே = மனதைத் துயரம் என்னும் ஆற்றில் மிதக்க விடாமல் 
குரு உபதேசங்களைக் கடைபிடிக்க மனத்துயர் இல்லை


இசை பயில் சடாட்ச...ரமதாலே = இசையாய் இனிக்கும் ஆறெழுத்து மந்திரத்தால் 

இகபர செளபாக்யம்...அருள்வாயே = இம்மை-மறுமை இரண்டிலும் இன்பம் அருள்வாயே!!



பசுபதி சிவாக்யம்...உணர்வோனே = பசு-பதி-பாசம் என்னும் சைவ ஆகமத்தை உணர்ந்தவனே

                                                 
பழநிமலை வீற்று...அருளும் வேலா = பழனி மலை மேல் வீற்றிருக்கும் வேலவனே!!

                                         

அசுரர் கிளை வாட்டி...மிகவாழ = அசுரரைக் குடும்பத்தோடு வாட்டி!

அமரர் சிறை மீட்ட...பெருமாளே!! =  நன்றாக வாழும்படி அமரரைச் சிறையில் இருந்து மீட்டிய பெருமாளே!
                                               
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-12

எல்லோருக்குமே மரண பயம் என்பது உண்டு. மரண பயம் இல்லாத உயிர்கள் இல்லை. உயிர்களைத் துடி துடிக்க கொலை புரிந்து அதை உணவாகப் புசிப்பவர்களுக்கு அருள் எங்கிருந்து வரும். நான் எந்த கடவுளை வணங்கியும் எனக்கு கஷ்டம் தீர வில்லையே என என்னிடம் புலம்புபவர்கள் அதிகம். ஆனால் புலால் உண்பதை நிறுத்தாமல் எந்த வித மான வழிபாடுகளும் பெரிய அளவில் பலன் தருவதில்லை. கடவுளுக்குக் கண் இல்லை என்னை இப்படி சோதிக்கின்றார் என்பவர்களுக்கு அடியேன் சொல்வது கடவுளுக்கு சோதிக்கும் வேலை கிடையாது. அவர் அவர் பிராப்தம் எப்படியோ நமது கர்ம வினைகள் எப்படியோ அதை ஒட்டித்தான் நம்க்கு இன்பமும் துன்பமும் வருகின்றன. புலால் உண்பதை முதலில் நிறுத்த வேண்டும். கௌமார நெறியில் முதல் படியே கொல்லாமையும் புலால் உண்ணாமையும்தான். அதற்காகத்தான் கோவை கௌமார மடாலயத்தில் கௌமாரக் காப்பு எனும் சிவப்பு நிறக் கயிறு ஒன்றை வலது கையில் கட்டி விடுகின்றார்கள். அதற்கு கௌமாரக் கங்கணம் என்று பெயர். அதை அணிந்து கொண்டால் கொல்லாமை புலால் உண்ணாமை தானாகவே வந்துவிடும். தவத்திரு கந்தசாமி சுவாமிகள் சிறு தெய்வங்களுக்கு பலி இடும் ஆடுகளை விலை கொடுத்து வாங்கி பலி இடும் செயல்களை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். சிரவை ஆதீனங்கள் அனைவருமே கொல்லாமை. புலால் உண்ணாமையைப் போதித்து வருகின்றார்கள். குரு வாக்கை ஆராய்ச்சி செய்தல் கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். கொல்லாமையைப் பற்றி வள்ளுவரும் ஒரு தனி அத்தியாயமே எழுதி வலியுறுத்தி இருக்கின்றார்.
படம்: 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களப் பாடி கொங்கு நாட்டு கச்சியப்பர் என புகழப்படும் சிரவையாதீனம் இரண்டாம் சந்நிதானம் கௌமார குரு தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்

எதற்காக இவ்வளவு சொல்கின்றேன் என்றால் எல்லா உயிர்களுக்குமே மரண பயம் உண்டு. அந்த மரணத்தை உயிர்க்கொலை மூலம் நாம் நிகழ்த்திதிவிட்டு முருகா...முருகா...என்றால் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. அப்படி கௌமார நெறியில் நின்று முருகனை பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவர்களைக் காலன் என்று சொல்லும் எமன் அனுக மாட்டான். அப்படியானால் சாவே இல்லையா எனும் கேள்வி எழும். அனைவருமே இந்த உடலை விட வேண்டிய நாள் ஒன்று உண்டு. உடலுக்குதான் அழிவே தவிர ஆன்மாவிற்கு அழிவில்லை. அந்த ஆன்மாவைக் கொண்டு போக முருகன் அடியவர்களிடம் காலன் வரமாட்டான். வேலன் வருவார். என்ன ஆச்சரியம். நமது இறுதிக் காலத்தில் நம்மை மயில் மேல் வந்து நமது வழிபடு கடவுள் முருகப்பெருமான் தன்னிடம் அழைத்துக் கொள்வார். கார் மா மிசைக் காலன் வரிற் கலபத் தேர்மா மிசை வந்து எதிரப்படுவாய் என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அனுபூதியில். அந்த வகையில் இதை உணர்ந்து மரண பயம் வரும்போதெல்லாம் இந்த திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள். காலன் எனை அனுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே என்கின்றது இந்தத் திருப்புகழ். அவன் அருளால் தான் அவன் தாளை வணங்க முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்கிறது சிவ புராணம். முருகா உனது திருவடியை எக்காலமும் தப்பாமல் வழிபடும் அருளை எனக்குத்தா என்று வேண்டுதல் செய்ய வேண்டும். அப்படி வேண்டினால் நிச்சயம் அவன் அருள் கிட்டும். அவன் காலில் வழிபடும் அடியவர்களை காலன் அனுகுவதில்லை. இந்தக் கருத்தினை மனதில் கொண்டு தை கிருத்திகையான இன்று இந்த திருப்புகழை ஓதுங்கள். சுமார் 6 லட்சம் கௌமார அன்பர்கள் நமது கௌமாரபயணத்தைத் தொடர்ந்து படித்து வருகின்றார்கள். அனைவருமே இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று எமது ஞானதேசிகர் திருவடியை வணங்கி கேட்டுக் கொள்கின்றேன்.
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காகமுற அருள்மாயன் அரிதிரு மருகோனே
காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகாளும் வகையுறு சிறைமீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசுவாமி மலைதனில் உறைவோனே
சூரன் உடலற வாரி சுவறிட வேலைவிட வல பெருமாளே.


பொருள்
பிறைநிலவு, கங்காநதி, மலர்கள், ஜடாமுடி ஆகியவற்றைத் தரித்த சிவபெருமான் பெற்ற குமரனே! 

வெல்லமும், கனியும் போன்று இனிமையாகப் பேசும் வள்ளிநாயகியின் பாதத்தை வருடும் மணவாளப்பெருமானே! 
                                                       
காக வடிவெடுத்த அசுரனை ஒருவிழியால் மட்டும் பார்க்கும்படி செய்த ராமபிரானின் அழகிய மருமகனே!
                                                  
 காலன் என்னை அணுகாதபடி உன் இரு திருவடிகளிலும் பக்தி செலுத்தும் புத்தியை தந்தருள்வாயாக. அமரலோகத்தை காப்பாற்றியவனே! 
                                                  
தேவர் களைச் சிறையில் இருந்து மீட்டவனே! நடனமாடும் மயிலில் ஏறி பவனி வரும் இளையவனே! 
                                                   
மாஞ் சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் உறைபவனே! 
                                                 
சூரனின் உடலை இருகூறாகப் பிளக்க வேலாயுதத்தை ஏவிய பெருமானே! 
                                                 
பிறப்பற்ற நிலைக்கு அருள்புரியவேண்டும்.
                                                            
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

திங்கள், 18 ஜனவரி, 2016

தேரோட்டம் நடத்தவும் தடை வரலாம் சிரவையாதீனம் உருக்கப் பேச்சு

ஆறுபடை முருகன்
கோவை அன்னூரில் மன்னீஸ்வரர் கோவிலில் நடந்த ஆறுபடை வீடுகளுக்கு முருக பக்தர்கள் புறப்பட்டுச் செல்லுதல் மற்றும் சண்முகார்ச்சனை விழாவில் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்கள்.
                                                                         சண்முகர்
அந்த விழாவில் பேசுகையில் மரபு சார்ந்த விளையாட்டுகளுக்குத் தடை வருவதைப் பார்த்தால் புழுதி ஏற்பட்டு சுற்ருச் சூழல் மாசுபடுகிறது என்று கூறி தேரோட்டத்திற்கு கூட தடை வரலாம் அதேபோல் சர்க்கரைப் பொங்கல் அதிகமாகச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று சொல்லி கோவில்களில் சக்கரைப் பொங்கல் வழங்கவும் தடை விதிக்கப்படலாம் என்றும் மிகுந்த வேதனை கலந்த உருக்கத்துடன் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசினார்கள்.
                                        
                                                              தேரோட்டம்
                                           
                                                        சக்கரைப் பொங்கல்
அதேபோல் நமது வழிபாடுகளின் நோக்கங்களை மறந்து நாளடைவில் சடங்குகளை மட்டும் கடைபிடிப்பது போல் ஆகிவிடக்கூடாது என்றும்  நமது குழந்தைகளுக்கு ஆன்மீகம் கற்பிக்க வேண்டும் என்றும் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் பேசினார்கள்.
           படம்: குழந்தைகளுக்கு ஆன்மீகம் கற்பித்தல் (எழுத்தாணிப்பால் விழா)
நன்றி: கோவை தமிழ் பத்திரிகைச் செய்தி
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
என்றும் எம் ஞானதேசிகர் பணியில் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்

திருவள்ளுவர் சிலையைத் திறந்துவைத்து சிரவையாதீனம் அவர்கள் உரை

கோவை சின்னியம்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையை கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் திறந்து வைத்து அருள் உரை நிகழ்த்தினார்கள்.
நமது கலாச்சாரம், பண்பாடு , மொழி அனைத்தும் 3000 ஆண்டுகள் பழமையானது. மனிதன் தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்துக்கு அடுத்து வான் சிறப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். நீரின்றி அமையாது உலகு என உலகுக்கு உணர்த்தியவர்.அவர் காட்டிய வழியில் நாம் நடந்து நமது சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்று  சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தனது அருளுரையில் குறிப்பிட்டார்கள்.
கோவை தினமணி நாளிதழில் வந்த செய்தி

நன்றி: தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!!

என்றும் எம் ஞானதேசிகர் பணியில் 
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்