செவ்வாய், 19 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-12

எல்லோருக்குமே மரண பயம் என்பது உண்டு. மரண பயம் இல்லாத உயிர்கள் இல்லை. உயிர்களைத் துடி துடிக்க கொலை புரிந்து அதை உணவாகப் புசிப்பவர்களுக்கு அருள் எங்கிருந்து வரும். நான் எந்த கடவுளை வணங்கியும் எனக்கு கஷ்டம் தீர வில்லையே என என்னிடம் புலம்புபவர்கள் அதிகம். ஆனால் புலால் உண்பதை நிறுத்தாமல் எந்த வித மான வழிபாடுகளும் பெரிய அளவில் பலன் தருவதில்லை. கடவுளுக்குக் கண் இல்லை என்னை இப்படி சோதிக்கின்றார் என்பவர்களுக்கு அடியேன் சொல்வது கடவுளுக்கு சோதிக்கும் வேலை கிடையாது. அவர் அவர் பிராப்தம் எப்படியோ நமது கர்ம வினைகள் எப்படியோ அதை ஒட்டித்தான் நம்க்கு இன்பமும் துன்பமும் வருகின்றன. புலால் உண்பதை முதலில் நிறுத்த வேண்டும். கௌமார நெறியில் முதல் படியே கொல்லாமையும் புலால் உண்ணாமையும்தான். அதற்காகத்தான் கோவை கௌமார மடாலயத்தில் கௌமாரக் காப்பு எனும் சிவப்பு நிறக் கயிறு ஒன்றை வலது கையில் கட்டி விடுகின்றார்கள். அதற்கு கௌமாரக் கங்கணம் என்று பெயர். அதை அணிந்து கொண்டால் கொல்லாமை புலால் உண்ணாமை தானாகவே வந்துவிடும். தவத்திரு கந்தசாமி சுவாமிகள் சிறு தெய்வங்களுக்கு பலி இடும் ஆடுகளை விலை கொடுத்து வாங்கி பலி இடும் செயல்களை தடுத்து நிறுத்தி இருக்கின்றார்கள். சிரவை ஆதீனங்கள் அனைவருமே கொல்லாமை. புலால் உண்ணாமையைப் போதித்து வருகின்றார்கள். குரு வாக்கை ஆராய்ச்சி செய்தல் கூடாது. அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். கொல்லாமையைப் பற்றி வள்ளுவரும் ஒரு தனி அத்தியாயமே எழுதி வலியுறுத்தி இருக்கின்றார்.
படம்: 15,000 க்கும் மேற்பட்ட பாடல்களப் பாடி கொங்கு நாட்டு கச்சியப்பர் என புகழப்படும் சிரவையாதீனம் இரண்டாம் சந்நிதானம் கௌமார குரு தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள்

எதற்காக இவ்வளவு சொல்கின்றேன் என்றால் எல்லா உயிர்களுக்குமே மரண பயம் உண்டு. அந்த மரணத்தை உயிர்க்கொலை மூலம் நாம் நிகழ்த்திதிவிட்டு முருகா...முருகா...என்றால் நமது பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. அப்படி கௌமார நெறியில் நின்று முருகனை பரம்பொருளாகக் கொண்டு வழிபடுபவர்களைக் காலன் என்று சொல்லும் எமன் அனுக மாட்டான். அப்படியானால் சாவே இல்லையா எனும் கேள்வி எழும். அனைவருமே இந்த உடலை விட வேண்டிய நாள் ஒன்று உண்டு. உடலுக்குதான் அழிவே தவிர ஆன்மாவிற்கு அழிவில்லை. அந்த ஆன்மாவைக் கொண்டு போக முருகன் அடியவர்களிடம் காலன் வரமாட்டான். வேலன் வருவார். என்ன ஆச்சரியம். நமது இறுதிக் காலத்தில் நம்மை மயில் மேல் வந்து நமது வழிபடு கடவுள் முருகப்பெருமான் தன்னிடம் அழைத்துக் கொள்வார். கார் மா மிசைக் காலன் வரிற் கலபத் தேர்மா மிசை வந்து எதிரப்படுவாய் என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள் கந்தர் அனுபூதியில். அந்த வகையில் இதை உணர்ந்து மரண பயம் வரும்போதெல்லாம் இந்த திருப்புகழைப் பாராயணம் செய்யுங்கள். காலன் எனை அனுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே என்கின்றது இந்தத் திருப்புகழ். அவன் அருளால் தான் அவன் தாளை வணங்க முடியும். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்கிறது சிவ புராணம். முருகா உனது திருவடியை எக்காலமும் தப்பாமல் வழிபடும் அருளை எனக்குத்தா என்று வேண்டுதல் செய்ய வேண்டும். அப்படி வேண்டினால் நிச்சயம் அவன் அருள் கிட்டும். அவன் காலில் வழிபடும் அடியவர்களை காலன் அனுகுவதில்லை. இந்தக் கருத்தினை மனதில் கொண்டு தை கிருத்திகையான இன்று இந்த திருப்புகழை ஓதுங்கள். சுமார் 6 லட்சம் கௌமார அன்பர்கள் நமது கௌமாரபயணத்தைத் தொடர்ந்து படித்து வருகின்றார்கள். அனைவருமே இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று எமது ஞானதேசிகர் திருவடியை வணங்கி கேட்டுக் கொள்கின்றேன்.
சுவாமிமலை திருப்புகழ்
பாதி மதிநதி போது மணிசடை நாதர் அருளிய குமரேசா
பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா
காது மொருவிழி காகமுற அருள்மாயன் அரிதிரு மருகோனே
காலன் எனை அணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே
ஆதி அயனொடு தேவர் சுரர் உலகாளும் வகையுறு சிறைமீளா
ஆடும் மயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே
சூத மிகவளர் சோலை மருவுசுவாமி மலைதனில் உறைவோனே
சூரன் உடலற வாரி சுவறிட வேலைவிட வல பெருமாளே.


பொருள்
பிறைநிலவு, கங்காநதி, மலர்கள், ஜடாமுடி ஆகியவற்றைத் தரித்த சிவபெருமான் பெற்ற குமரனே! 

வெல்லமும், கனியும் போன்று இனிமையாகப் பேசும் வள்ளிநாயகியின் பாதத்தை வருடும் மணவாளப்பெருமானே! 
                                                       
காக வடிவெடுத்த அசுரனை ஒருவிழியால் மட்டும் பார்க்கும்படி செய்த ராமபிரானின் அழகிய மருமகனே!
                                                  
 காலன் என்னை அணுகாதபடி உன் இரு திருவடிகளிலும் பக்தி செலுத்தும் புத்தியை தந்தருள்வாயாக. அமரலோகத்தை காப்பாற்றியவனே! 
                                                  
தேவர் களைச் சிறையில் இருந்து மீட்டவனே! நடனமாடும் மயிலில் ஏறி பவனி வரும் இளையவனே! 
                                                   
மாஞ் சோலைகள் நிறைந்த சுவாமிமலையில் உறைபவனே! 
                                                 
சூரனின் உடலை இருகூறாகப் பிளக்க வேலாயுதத்தை ஏவிய பெருமானே! 
                                                 
பிறப்பற்ற நிலைக்கு அருள்புரியவேண்டும்.
                                                            
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

2 கருத்துகள்: