வியாழன், 21 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-14

எப்போதும் வள்ளியோடு இருக்கும் பரம்பொருள் குருவாக அருளல்
அருணகிரிநாத சுவாமிகளுக்கு முருகப்பெருமானே குருவாக வந்ததால் முருகா இந்த சம்சார சாகரத்துள் பிறந்து மீண்டும் இறந்து உழலாமல் என்னை ஆள்கின்ற சற்குருவாகி இருப்பாயே என்கிறார். 
                                               
                                                          பிறப்பு இறப்பு சக்கரம்
அது மட்டுமல்ல குருவே பரம்பொருள் என்பது கௌமார நெறியாகும். ஒருவருக்கு குரு மட்டும் கிடைத்துவிட்டால் போதும் மற்றவை தானாகவே வந்துவிடும். இறைவனே முதல் குரு. இதை அகச்சந்தானம் என்கின்றோம். கௌமார சமயத்தின் அகச்சந்தான முதல் குரு நாதர் கயிலையில் கந்த வெற்பில் உள்ள முருகப்பெருமானாகும். ஒருவரை குரு பிறப்பு இறப்பு எனும் சக்கரத்தில் இருந்து மீட்டு எடுப்பார். அதற்கு மட்டும் குரு அல்ல மற்ற எல்லா செயல்களுக்கும் குருவாக நீ அருள வேண்டும் என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். அதனால் தான் பிறவாகி என்கிறார். பிற என்றால் இன்னும் என்னென்னெ உள்ளதோ அனைத்துக்கும் நீயே ஆகி என்றும் அழிவில்லாத பெரு வாழ்வைத் தருவாயே என்கிறார். எப்போதும் இச்சா சக்தியாகிய வள்ளிப்பிராட்டியோடு இருக்கின்ற முருகப்பெருமானே நீ அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு அறங்களையும் தருவாய் என்று கேட்கின்றார். அருணகிரிநாத சுவாமிகள் இதை எங்கு கேட்கிறார் கொங்கு மண்டலத்தில் உள்ள சுந்தரரால் முதலை வாயில் இருந்து மதலையை மீட்ட அதிசயம் நடந்த அவிநாசி எனும் தலத்தில் இதைப் பாடுகின்றார். 
                                    
                                     அவிநாசி திருத்தலத்தின் அருமைக் காட்சி
நிச்சயம் அவிநாசி செல்லும் அன்பர்கள் அங்கு சென்று இந்த திருப்புகழைப் பாடுங்கள் நிச்சயமாக நல்ல குரு நாதர் உங்களுக்கு வாய்க்கப் பெருவீர்கள். குருவை நாடி அலைபவர்கள் இந்தத் திருப்புகழை ஓதினால் ஒரு நல்ல குரு உங்களைத் தேடி வருவார் என்பது திண்ணம். அப்படி வருகின்ற குரு அறம் பொருள் இன்பம் வீடு எனும் நான்கு விதமான நல்லறங்களையும் தந்து பிறப்பு இறப்பாகிய சக்கரத்தில் இருந்து விடுபட வைத்து அழியாப் பெருவாழ்வை அருள்வார். அது நிச்சயம் நடக்கும். இதோ அந்த திருப்புகழ்

அவிநாசி திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப் 

பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே 

குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா 

அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

2 கருத்துகள்: