புதன், 20 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-13

இறை அருள் பெற்றவர்களை அனுபூதி பெற்றவர்கள் என்று சொல்கின்றோம். பல பேர் அனுபூதி பெறுவதற்காக இறைவன் மீது பாடுவார்கள். அவர்கள் பாடல்களைக் கேட்டு கடவுள் மகிழ்ந்து இறைவன் அனுபூதி கிட்டும். ஆனால் கௌமார குரு நாதர் அருணகிரி நாத சுவாமிகளுக்கு அனுபூதி கிடைத்துப் பின் பாடினார். கந்தர் அனுபூதி பெற்று கந்தர் அனுபூதி பாடி என்பார் தாயுமாணவ சுவாமிகள். இவர் பாடி அருள் பெறவில்லை அருள்பெற்றுப் பாடினார். இன்னும் சொல்லப் போனால் பாட அருள் பெற்றார். இத்தகைய அருள் பெற்ற ஞானிகள் அருகில் இருந்தாலே நமது கர்ம வினைகள் சுட்டு எரிக்கப்படும். அருள் நிலையில் அவர்கள் பாடிய பாடல்களில் அளப்பரிய மந்திர சக்தி உண்டு. அந்த பாடல்களை நாம் பாடினால் அவர்கள் என்ன நிலையில் இருந்து பாடினார்களோ அதே நிலையை நாமும் உணர முடியும். அதற்கு உதவுவது திருப்புகழ் எனும் மகா மந்திரம்.
                                                 
                                             கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவர்கள்
எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகளுக்கு 24 வயது ஆன போது தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்கள் முருகன் திருவடியில் கலந்தார்கள். அப்போது அடுத்த ஆதீனம் யார் என்ற பேச்சு எழுந்தபோது தவத்திரு சுந்தர சுவாமிகள் அவர்களின் அனுக்கத் தொண்டராக வலம் வந்த எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள்தான் அடுத்த ஆதீனம் என்று பட்டம் சூடி கல்லாடை புனைந்து சந்நியாசம் பெற்று மடாதிபதியாக ஆனார்கள். இதைக் கொடுத்தது எது. அதற்குப் பெயர்தான் அனுபூதி என்பது. இறையருள் கருணை நிரம்பப் பெற்றவர் எம் ஞானதேசிகர் அவர்கள். தனது குருவிற்கு செய்த பணிவிடையும் தொண்டுகளும் தனது குரு நாதர் சொல்லும் அனைத்து செய்திகளையும் உடன் இருந்து கொண்டே உள் வாங்கி உள் வாங்கி வசனங்களை மிக ஏற்றி மறவாமல் மனதை எந்த துயர்களும் பாதிக்காமல் வைத்துக் கொண்டு தனது குரு நாதர் கொடுத்த ஆறெழுத்து மந்திரத்தை இசை போல் எப்போதுமே ஓதி ஓதி இன்று கல்விப்பணி, சமுதாயப்பணி, இலக்கியப்பணி, ஆன்மீகப்பணி என அனைவரும் போற்றும் வகையில் காந்தம் என் இழுக்கும் கவர்ச்சி முகத்தோடு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதுதானே இகபர சௌபாக்யம் என்பது. இல்லறத்தில் இல்லாவிட்டாலும் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு இல்லறத்தை நல்லறமாக வாழ வழிகாட்டி வருபவர் எம் ஞானதேசிகர் அவர்கள். இது எப்படி கிடைத்தது அருணகிரி நாதர் உபதேச வம்சத்தில் வந்தவர் எம் ஞானதேசிகர் அவர்கள். பதி என்பது இறைவன் பசு என்பது ஆன்மாவாகிய நாம் பாசம் என்பது அந்த இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு இதை சைவ சிந்தாந்தங்கள் வலியுறுத்திக் குறிப்பிடுகின்றது. அந்த பதி பசு பாசத்தை உணர குரு வேண்டும் குரு கொடுக்கும் மந்திரம் வேண்டும். அந்த மந்திரத்தை நாம் ஜபம் செய்து வர வேண்டும். அந்த மந்திரமே நமக்கு இகபர சௌபாக்யத்தைக் கொடுத்து பசு பதி பாசத்தை உணர்த்திவிடும் காரணம் அந்த சடாட்சர மந்திரத்திற்குரிய முருகப்பெருமான் இந்த பசு பதி பாசத்தை நன்றாக உணர்ந்தவர் என்பதால் நமக்கும் ஓதாமல் அதை உணர வைப்பார். குரு நெறியே கௌமார நெறி. யாம் ஓதிய கல்வியும் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது என்பது கந்தர் அனுபூதி. இதை மையமாக வைத்தே இன்றைய திருப்புகழைப் பாராயணம் செய்வோம்.
பழனிமலை திருப்புகழ்
வசன மிக வேற்றி...மறவாதே
மனது துயர் ஆற்றில்...உழலாதே

இசை பயில் சடாட்ச...ரமதாலே

இகபர செளபாக்யம்...அருள்வாயே


பசுபதி சிவாக்யம்...உணர்வோனே

பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!
விளக்கம்:


வசன மிக வேற்றி...மறவாதே = உன் பெயரையே, வசனமாய் உருவேற்றி உருவேற்றி 
                                             
                                குரு சொல்லும் வசனங்களை மனதில் உரு ஏற்றுதல்

மனது துயர் ஆற்றில்...உழலாதே = மனதைத் துயரம் என்னும் ஆற்றில் மிதக்க விடாமல் 
குரு உபதேசங்களைக் கடைபிடிக்க மனத்துயர் இல்லை


இசை பயில் சடாட்ச...ரமதாலே = இசையாய் இனிக்கும் ஆறெழுத்து மந்திரத்தால் 

இகபர செளபாக்யம்...அருள்வாயே = இம்மை-மறுமை இரண்டிலும் இன்பம் அருள்வாயே!!



பசுபதி சிவாக்யம்...உணர்வோனே = பசு-பதி-பாசம் என்னும் சைவ ஆகமத்தை உணர்ந்தவனே

                                                 
பழநிமலை வீற்று...அருளும் வேலா = பழனி மலை மேல் வீற்றிருக்கும் வேலவனே!!

                                         

அசுரர் கிளை வாட்டி...மிகவாழ = அசுரரைக் குடும்பத்தோடு வாட்டி!

அமரர் சிறை மீட்ட...பெருமாளே!! =  நன்றாக வாழும்படி அமரரைச் சிறையில் இருந்து மீட்டிய பெருமாளே!
                                               
நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்
 கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

2 கருத்துகள்: