வெள்ளி, 22 ஜனவரி, 2016

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-15

                                         திருமுருகன்பூண்டி முருகப்பெருமான்
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்


ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!
என்பது ஔவையார் வாக்கு. 
                                                            
                                                                      ஔவையார்
நமக்கு இறைவன் மனிதப் பிறப்பு கொடுத்திருப்பது இறைவனை உணர்ந்து கொள்வதற்காகத்தான். 84 லட்சம் உயிரினங்கள் உள்ளன. அதில் மனித இனமும் ஒன்று. புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாப் பாம்பாய் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்கிறார் மாணிக்க வாசக சுவாமிகள் சிவபுராணத்தில்.
                                                            
அப்படி கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை வீணடிக்காமல் முருகா...பரம்பொருளே...கௌமாரச் செல்லமே...கௌமாரச் செல்வமே என்று உனை வழிபட வேண்டியது அவசியம் என்பதை அறிந்து பல காலமும் பிரார்த்தனை செய்து எனது அறிவினில் உண்ணை உணர்ந்து வருடத்திற்கு ஒருமுறையாவது உன்னை நோக்கி தவம், ஜபம் போன்றவைகளைச் செய்து மனம் கனிந்து உனது திருவடிகளை சரணடைய அருள்வாயே என்கிறார் அருணகிரிநாத சுவாமிகள். இன்று நமது பாரம்பரியமான முருக வழிபாட்டை விட்டு பின் மனிதர்களை தெய்வமாக்கி தொழுகின்ற செயல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. வருடந்தோறும் ஆறு படை வீடுகளுக்கு மாலை போட்டுச் சென்று முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே முருக பக்தியில் திளைத்த பக்தர்கள் இன்று பல சமய வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள். அது தவறில்லை ஆனால் நமது பாரம்பரிய வழிபாடான முருக பக்தியை விட்டு விடக்கூடாது என்று எமது ஞானதேசிகர் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அடிக்கடி உபதேசம் செய்கின்றார்கள். 
                                                   
                                                           பாரம்பரிய முருக பக்தி
நாம் பேசுகின்ற மொழியைக் கொடுத்ததே அந்த முருகப் பெருமான்தானே. தமிழ்க்கடவுள் என்றும் முப்பாட்டன் முருகன் என்றும் நாம் போற்றுகின்ற முருகப்பெருமான் சாதாரண சிறு தெய்வம் அல்ல. ஆறு சமயங்களும் காண அறியாத உன்னத பரம்பொருள் முருகப் பெருமான். அதை நான் சொல்லவில்லை. அருணகிரிநாதர் சொல்கிறார். நாரதர் செய்த யாகத்தில் வந்த ஆட்டை அடக்கி அதை வாகனமாகக் கொண்ட முருகப்பெருமான் மீது யார் தூய அன்பு வைத்து வழிபடுகின்றார்களோ அவர்களை விட்டு ஒரு நிமிடம் கூட நீங்காமல் இருப்பாராம் முருகப்பெருமான். இப்போது புரிகின்றதா அனைத்து சாஸ்திரங்களையும் படித்து முடித்தால் மட்டும் போதாது ஆறு சமயங்களும் அறிவினால் தேடி தேடி கிடைக்காத முருகப்பெருமான் பக்தியாகிய அன்பினால் நம்மை விட்டு ஒரு நிமிடம் கூட நீங்கமாட்டார் என்றால் உண்மையான பக்தியின் வலிமையை உணர்ந்து கொள்ளுங்கள்.  கொங்கு நாட்டில் உள்ளஅற்புத சிவத்தலம், சிவ பெருமான் சுந்தரரது பொருள்களை மறைத்து வைத்து திருவிளையாடல் செய்த தலம் திருமுருகன் பூண்டி. அந்தத் திருத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் மீது இந்த திருப்புகழைப் பாடியுள்ளார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                                  
                  சிவபெருமான் வேடராக வந்து சுந்தரர் பொருள்களைப் பறித்தல்
அவிநாசி திருப்புகழைப் பாடினால் எப்படி குரு கிடைப்பாரோ அப்படி இந்த திருமுருகன் பூண்டி திருப்புகழைப் பாடினால் குரு மீது அளவு கடந்த பக்தியும் அன்பும் ஏற்படும். யாருக்கு குரு மீது இப்படி பக்தி ஏற்படுகிறதோ அவர்களுக்கு குமரனாகிய முருகப்பெருமான் அவர்களை விட்டு நீங்காமல் நிறைந்து இருப்பார் என்பது திண்ணம். குரு பக்தி தான் கௌமார நெறி. முதல் குரு முருகப்பெருமான். எனெவே குரு நெறியில் குரு பக்தியில் திளைக்க வேண்டும். அது தூய முருக பக்தியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பது திண்ணம். இதை விளக்கும் திருமுருகன் பூண்டி திருப்புகழ் இதோ.


அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும் 

அறிவினுணர்ந் தாண்டுக் ...... கொருநாளில் 

தவசெபமுந் தீண்டிக் ...... கனிவாகிச் 

சரணமதும் பூண்டற் ...... கருள்வாயே 

சவதமொடுந் தாண்டித் ...... தகரூர்வாய் 

சடுசமயங் காண்டற் ...... கரியானே 

சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே 

திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.

 
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்:
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக