திங்கள், 1 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 2


நாடியை பக்தி இல்லாதவர்க்கு உரைக்கக் கூடாது.

வக்ர புத்தியுடன் சோதித்து பார்ப்பவர்க்கும் உரைக்கக் கூடாது.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்க்கும் உரைக்கக் கூடாது.

அவ்விதம் உரைத்தால் உரைத்தவனுக்கும் இழுக்கு.

இங்கு படிக்கும்போது கேட்டு விட்டு வெளியே சென்று வாய்க்கு
வந்தபடி பேசுபவர்கள் எங்களுக்குத் தெரிந்தே
சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்த தொடரை எழுதுவதற்கே
பல முறை உத்தரவு கேட்டு சித்தர்களும், முருகப் பெருமானும் சரி என சம்மதம் தந்ததால்தான் எழுதுகிறோம்.

ஏனெனில் பல பேர் படிப்பதால்
அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்.

அவர்களின் கசப்பான
அனுபவங்கள் நாடி மீது வெறுப்போடு இருப்பவர்கள், நம்பிக்கை அற்றவர்கள்
இதைப் பழித்துக் கூறி சித்தர்கள் சாபத்தைப் பெற நேரலாம்.

எனவே அடியேன் கேட்டுக் கொள்வது என்னவெனில் நம்பிக்கை
இல்லாதவர்கள்
இந்த தொடரைப் படிக்கவே வேண்டாம்.

நம்பிக்கையுடன் படிக்கும்போது
பல கஷ்டங்கள் தீருவதை உணர்வீர்கள்.

ஏனெனில் இந்தத் தொடரில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் சித்தர்களின் அருளால்
செதுக்கப்படுபவை

எனது அத்துனை கட்டுரைகளும் பூஜை
அறையில் தானாக
எழுதும் முறையில் (AUTO WRITTING) கிடைக்கின்ற
முத்துக்கள். 


பயன்படுத்தினால் நிச்சயம் மேன்மைகளைக் காண்பீர்கள்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

ஞாயிறு, 31 மே, 2020

    தமிழ் மொழியை விட உயர்மொழி உண்டு எனக் கேட்டதும் சினம் கொள்ளாதவன் புலவனல்ல

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   



நூற்பா: 63               


தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனில் வெகுளியற்று      இருப்போன் வெறும்புல வோனே.

இதன்பொருள்: தமிழைவிட எல்லாவகையாலும் சிறப்புப்பெற்றதாகிய வேறு ஒரு மொழி இவ்வுலகத்திலே இருக்கிறது என யாராவது ஒருவர் கூறக்கேட்டும் சற்றும் சினங்கொள்ளாமல் ஒரு புலவன் இருப்பின் அவன் பெயரளவில் புலவனே அன்றி உண்மையில் வெறும் சதைப்பிண்டமே என்றவாறு.:

விளக்கம்: ஆகிய அடிப்படைச்சீர்கள் ஆறும் அவனுடைய ஆறு தலைகள்; இவைகளை அமைத்த அகத்திய முனிவர் முருகனடியார்” என்பார். “கண்நிகர் மெய்யும் சென்னிக் கணம்உறழ் சேர்க்கைச் சீரும் திண்ணிய புயங்க ளேபோல் திகழ்தரும் உயிரும் வேறு ஒன்று எண்ணிடற்கு அரியது ஆகும் எஃகமும் இயலிற்காட்டும் புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமைதானே”1 என்றது அது. இவர் இத் தமிழ்மொழி தன்னை அன்புடன் பயில்பவரை தேவர்களுக்கும் தேவராக ஆக்கும் எனலை இந்நூல் 672-ஆம் நூற்பா உரையிற் காட்டினாம். இவ்விலக்கணத்தின் ஈற்றிலே அமைந்துள்ள ஒரு வண்ணக்கவியில் தமிழை, “உலகேழும் மெச்சும் உம்பர் நாட்டும் ஒங்கு துய்ய வண்மை தமிழதாமே”2 எனப் போற்றுகிறார். இவர் தமிழைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்து ஒரு பெரிய நூலாகவே வெளியிடலாம். விரிவஞ்சி அனைத்தையும் கூறி விரிக்காமல் இவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் சுருக்கமாகக் காட்டி அமைவேன். இந் நூலாசியர் தம் யாத்திரைகளின் இடையில் ஒருசமயம் இராயவேலூரில் தங்கியிருந்தபோது வடமொழிப்புலமை மிக்க இருவர் இவரிடம் தமிழைவிட வடமொழியே உயர்ந்தது என்றனர். பேச்சு முறையான வாதமாக வளர்ந்தது. முன்னிரவில் தொடங்கி மறுநாள் விடியும்வரை வாக்குவாதம் நீடித்தும் முடிவுகாண முடியவில்லை. இறுதியில் திருவுளச் சீட்டுப்போட்டு எடுப்பது என முடிவாயிற்று. அவ்வாறே செய்தனர். தமிழே உயர்ச்சி என்ற சீட்டு வந்தது. உடனே, “தமிழே உயர்ச்சி என்று சீட்டுக் கொடுத்த பெருமாளே” என்ற திருப்புகழ்ப்பா ஒன்றும், தமிழ்த் துதிப்பதிகம் ஒன்றும், 100 கட்டளைக் கலித் துறைகளால் தமிழ் அலங்காரமும் பாடினார். இந்நிகழ்ச்சியின் விரிவை இவர் சுயசரிதையாகிய “குருபரதத்துவம்” என்னும் நூலில் புதுவைச் சருக்கத்திற் காணலாம். தமிழ் வடமொழியிலிருந்து தோன்றியது என்பாரை எண்ணிப்பாடியது.


நன்றி: பதிவு
புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம்,கோவை .

சனி, 30 மே, 2020

ஜீவ நாடி அருளாடல்கள் பகுதி 1

எனது குருநாதர் எலுமிச்சம் பழத்தை வைத்தே திரிகால வர்த்தமானங்களைத் திறம்பட உரைத்துவிடுவார். ஒருமுறை அடியேன் எலுமிச்சம்பழத்தை நேரடியாகச் செடியில் பறித்தேன். நறுக்கென முள் தைத்தது. சரி என விட்டுவிட்டேன். அந்தப் பழத்தைக் கொண்டு போய் குருநாதரிடம் பூஜைக்குக் கொடுத்துவிட்டேன். இரவு பூஜைகளை முடித்து அருள்வாக்கு சொல்ல அமர்ந்தார் குரு. இரவு 2 மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். என்னை அருள்வாக்கில் அழைப்பதாக வந்து அழைத்துச் சென்றார்கள். அடடா தூங்கி விட்டோமோ என்று பரபரப்பாக எழுந்து குருவின் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தேன். குரு கேட்ட கேள்வி என்னை மெய் சிலிர்க்க வைத்த்து. என்னப்பா இந்த எலுமிச்சம் பழம் பறிக்கும் போது முள் ஏறியதோ? அது இன்னும் வலிக்கிறதா?

கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி 
கௌமாரபீடம், அந்தியூர்.

வெள்ளி, 29 மே, 2020

 பல நயங்களைப் பாராட்டாது ஒரு குற்றத்தை மட்டும் பேசல் இழிவு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

நூற்பா: 62   
     
பலவகை நயங்களும் பாராது ஒருவிதக் 
குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு 
இழிந்த பான்மை என்று  இயம்பிடல் இசைவே  62.

இதன்பொருள்: ஒரு நூல் அல்லது செய்யுளில் இடம்பெற்றுள்ள பல சொல் நயம், பொருள் நயங்களைப் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு குற்றத்தை நினைத்து அந் நூல் அல்லது பாடல் முற்றுமே பிழையென்று வாதிடுதல் சிறந்த அறிவுடைமைக்கு ஏற்ற செயலாகாது எனக் கூறுதல் பொருந்தும் என்றவாறு

விளக்கம்: குற்றம் கருதி என்ற சொல்லாற்றலானே அழுக்காறு அல்லது வேறு காரணம்பற்றிக் குற்றம் கூறவேண்டும் என நினைந்து குறைகூறுஞ் செயல் பெறப்பட்டது. இச்செயல் “இலக்கணக் கவிஞர்சொல் இன்பந் தேடுவர் மலக்குசொற்றேடுவர் வன்க ணாளர்கள்”1 என முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சிவப்பிரகாசர், “உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே”(தனிப்பாடல்) என்பதைச் செய்யுட்கும் கொள்ளலாம்.

நன்றி: பதிவு புலவர்
ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 27 மே, 2020

பரிசுக்காக பாட்டை விற்பவன் பிச்சைக்காரனை விடக் கேவலமானவன்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      

நூற்பா 61

சேவித்து ஒருவர்பின் செல்வார் புலமையில்
பாடல்விற்று அலைவார் பரிசுகேடு இனிதே 61

இதன்பொருள்: ஒரு செல்வனுக்கே சற்றேறக்குறைய அடிமைப்பட்டு அவன் கருத்தின் வண்ணமே ஒழுகுகின்ற ஒரு கவிஞனின் புலமையை விடப் பற்பல தலைவர்களின்் மீது பாடல்களைப் புனைந்து அவர்கள் தரும் பரிசில்களால் வாழ்க்கை நடத்தும் இரவலரின் இழிவும் உயர்ந்ததே ஆகும் என்றவாறு.

விளக்கம்:  முன் பதினைந்தாம் நூற்பாவில் “புகலரும் பனுவற் பொற்பணங் கருதி விற்கத் துணிவது மேம்பாடு அன்றே” என்றவர் இங்கு அதனினும் இழிந்ததாக மற்றோர் நிலையைச் சுட்டுகிறார். ஓர் அரசன், சிற்றரசன் அல்லது செல்வனையே எப்போதும் சார்ந்திருந்து அவன் விருப்பு, வெறுப்புகளையே தம்முடையவை யாக்கிக் கொண்டும், அவன் செயல்களுக் கெல்லாம் எவ்வாறேனும் நியாயம் கற்பித்துக்கொண்டும் சிலர் இருப்பர். இந் நிலையையே “சேவித்து ஒருவர்பின் செல்வார்” என்றார். இவர்களை அச் செல்வரின் உடைமைகளில் ஒன்றாகக் கூறினும் தவறாகாது. தமக்கு உணவளிப்பவனை மகிழ்விப்பது ஒன்றே இவர்களது தலையான குறிக்கோள். இவர்களுக்குப் பெரும்பாலும் விடுதலையே இல்லை.

     இதற்கு மாறாகப் புலமை வியாபாரிகள் எந்நாளும் ஒரு செல்வனுக்கே ஆட்பட்டிருப்பதில்லை. தம் சரக்கிற்கு மதிப்பு இருக்கும் வரையில் ஓரிடத்தில் இருப்பர்; சற்று மதிப்புக் குறைந்தால் அங்காடியை மாற்றிவிடுவர். எனவே, இவர்களுக்குச் சற்றுப் பரந்த கண்ணோட்டமும், சுயமரியாதையும் இருக்கும். இந்நிலையில் சுதந்திரம் மிகுதி
 
புலவர்களின் அடிமைநிலை, வணிகர்நிலை என்னும் இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டி அறிஞன் அடிமையாதலை விட வணிகனாக இருப்பதே மேல் என்கிறார். புலமையை விற்பது தவறுதான். எனினும், புலமையை அடிமையாக்குவதில் அதைவிடப் பெருந்தவறு என்பது கருத்து. இனிதே என்பதிலுள்ள ஏகாரத்தைக் கேடு என்ற சொல்லிற்கு மாற்றுக.

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும்-போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்
நாழி அரிசிக்கே நாம்” (நல்வழி 19) என்றதில் முதலில் வந்த இரண்டும் இவை.

நன்றி பதிவு புலவர்.ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை


திங்கள், 25 மே, 2020


பொது நூல்களில் பாமரர் கூறும் வரலாறுகள் இருத்தல்  கூடாது

55 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
                      

பொருள்நயம் தோன்றும் பொருட்டில் பொதுநூல் 
கலைஉணர் மாக்கள் கழறும் காதை 
பற்றிப் பேசப் படாதுஎனல் பழுதே.
  
இதன் பொருள்: (குறித்த ஒரு சமயம் அல்லது நாடு என அமையாது) அனைவருக்கும் பொதுவாகப் பயன்படவேண்டும் என்கின்ற கருத்துடன் இயற்றப்படுகின்ற நூலில் மொழியறிவுள்ள பாமரர்களும் கூறுகின்ற பழைய வரலாறுகள் இடம்பெறக் கூடாது என்பது ஒரு தவறான கருத்தாகும் என்றவாறு

விளக்கம்:மாக்கள் என்புழிச் சிறப்பும்மை தொக்கது. ஏதாவதோர் கதையைக் கூறினால் அந் நூல் சமயத்தாலும் இடத்தாலும் ஒரு சாராருக்கே உரியதாக ஆகித் தன் பொதுத்தன்மையை இழந்துவிடும் என்னும் கருத்துக்கு மறுப்பாக எழுந்தது இந் நூற்பா. பொருள் விளக்கத்திற்காக அனைவரும் நன்கு அறிந்த செய்திகளை எடுத்துக் காட்டுவதாலேயே ஒரு நூல் நடுநிலைமையற்று ஒரு சார்புடையதாக ஆகிவிடாது. எடுத்துக்காட்டாகச் செங்கோன்மைக்கு மநுநீதிச் சோழனை எடுத்துக்காட்டும் ஒரு நூல் சேர நாட்டில் பயன் தராமற் போய்விடுமா? அடியார்கள் இறைவனின் திருநாமத்தை நாத் தழும்பேறச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள் என்னும் பொதுக் கருத்தை ஏதாவது ஓரடியாரின் நிலையைக் காட்டி விளக்கினால் பிற சமயத்தார் மறுத்தல் சரியா? மாறாக அனைவரும் அறிந்த கதையைக் கொண்டு பொருள்விளக்கம் செய்யப்பட்டடிருப்பதாலேயே அது அனைவராலும் எளிதில் உணரப்பட்டுச் சிறந்த பொதுநூலாக மிளிரும்.
நன்றி: பதிவு .புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம், தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை

வியாழன், 21 மே, 2020

விரிக்க வேண்டியதை சுருக்கியும் சுருங்கக் கூற வேண்டியதை விரித்தும்  கூறுவது குற்றம் . 
                   
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

நூற்பா: 56   

வீணே விரிப்பினும் விரித்தலைச் சுருக்கினும்
மாணார் புலவரோர் மதியார் அன்றே  56

இதன் பொருள்: சுருக்கமாகச் சொல்லத் தக்கனவற்றைப் பயனின்றி மிக நீட்டி விரித்துக் கூறினாலும், விளக்கமாக்கி கூறவேண்டிய இடங்களில் தெளிவு ஏற்படா வண்ணம் மிகவும் சுருக்கமாகக் கூறினாலும் கல்விச்சிறப்புடைய அறிஞர்கள்  போற்ற மாட்டார்கள்.

வீணே விரிப்பின் மிகைபடக்கூறல், வெற்றெனத் தொடுத்தல் நின்று பயனின்மை ஆகிய குற்றங்களுக்கு இடமாகும். விரித்தலைச் சுருக்கின் குன்றக்கூறல்,  மயங்க வைத்தல் என்ற குற்றங்கள்  நேரும். எனவே இக்குற்றங்களை நீக்கிச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், விழுமியது பயத்தல், என்னும் குணங்களை உடையனவாக ஏற்ற அளவறிந்து உரைக்க வேண்டும்.

  கீழ்க்கண்ட இவர் வாக்குகள் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தற்குரியனவாம். “இருந்ததற்கு ஒருபாட்டு அப்பால் எழுந்ததற்கு ஒருபாட்டு ஓதி பெருந்தொகைப் படுத்துவாரைப் பேதையர் வியந்து  கொள்வார்; மருந்துறழ் கவியொன்றாற்பல் வான்பொருள் தெளிவாகச் சொல்லும் திருந்தியற் பாரதச்சீர் திரிபவர் சிலர்தாம் அன்றே”(புலவர் வில்லி17)  “தாரகன் தான்கந்தன் தன்பால் உரைத்ததற்குறைத்தான்; வாரம் உடையாள் ஒரு பெண்மகளுக்கு அழுகை வளர்த்தான்; ஈரம்இலர் ஊன்சமைக்கும் இழிவைப் பெருக்கி இசைத்தான்; ஆரமலையோன் அருள் பெற்றதனைக் குறுக்கியறைந்தான்”(புலவர் கச்சியப்பர் 6) “சுருகிடில் விளங்கிடாது; துணிவொடு செல்லுமட்டும் பெருக்கிடில் இந்நூல் சூடும் பெயரினுக்கு இசைவுறாது ஆங்கு இருக்கவும் இடையிற் காதை யீரண்டு அடக்கிச் சொற்றோம் செருக்குறு புலவர் பல்லோர் தெளிவுறச் செப்ப லாறே”(அருணகிரி நாதர்புராணம் 93)”கற்பனை மொழிந்தனர்கள் கவிப்புலவர் பல்லோர் அம்முறை விரித்திடல் அடுத்தது அல என்றே இம்முறை சுருக்கினம்’(அருணகிரி நாதர்புராணம் 20,21) இதுவரை எடுத்துக் காட்டப் பெற்ற மேற்கோள்களால் இவ்வாசிரியர் எத்தகைய செய்திகளை விரித்துக் கூறவேண்டும்; எத்தகையனவற்றை விரித்துக் கூறக்கூடாது எனக் கருதுகிறார். என்பதை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி :சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை