பொது நூல்களில் பாமரர் கூறும் வரலாறுகள் இருத்தல் கூடாது
55 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
பொருள்நயம் தோன்றும் பொருட்டில் பொதுநூல்
கலைஉணர் மாக்கள் கழறும் காதை
பற்றிப் பேசப் படாதுஎனல் பழுதே.
இதன் பொருள்: (குறித்த ஒரு சமயம் அல்லது நாடு என அமையாது) அனைவருக்கும் பொதுவாகப் பயன்படவேண்டும் என்கின்ற கருத்துடன் இயற்றப்படுகின்ற நூலில் மொழியறிவுள்ள பாமரர்களும் கூறுகின்ற பழைய வரலாறுகள் இடம்பெறக் கூடாது என்பது ஒரு தவறான கருத்தாகும் என்றவாறு
விளக்கம்:மாக்கள் என்புழிச் சிறப்பும்மை தொக்கது. ஏதாவதோர் கதையைக் கூறினால் அந் நூல் சமயத்தாலும் இடத்தாலும் ஒரு சாராருக்கே உரியதாக ஆகித் தன் பொதுத்தன்மையை இழந்துவிடும் என்னும் கருத்துக்கு மறுப்பாக எழுந்தது இந் நூற்பா. பொருள் விளக்கத்திற்காக அனைவரும் நன்கு அறிந்த செய்திகளை எடுத்துக் காட்டுவதாலேயே ஒரு நூல் நடுநிலைமையற்று ஒரு சார்புடையதாக ஆகிவிடாது. எடுத்துக்காட்டாகச் செங்கோன்மைக்கு மநுநீதிச் சோழனை எடுத்துக்காட்டும் ஒரு நூல் சேர நாட்டில் பயன் தராமற் போய்விடுமா? அடியார்கள் இறைவனின் திருநாமத்தை நாத் தழும்பேறச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள் என்னும் பொதுக் கருத்தை ஏதாவது ஓரடியாரின் நிலையைக் காட்டி விளக்கினால் பிற சமயத்தார் மறுத்தல் சரியா? மாறாக அனைவரும் அறிந்த கதையைக் கொண்டு பொருள்விளக்கம் செய்யப்பட்டடிருப்பதாலேயே அது அனைவராலும் எளிதில் உணரப்பட்டுச் சிறந்த பொதுநூலாக மிளிரும்.
நன்றி: பதிவு .புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம், தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை
நன்றி: பதிவு .புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம், தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக