வெள்ளி, 29 மே, 2020

 பல நயங்களைப் பாராட்டாது ஒரு குற்றத்தை மட்டும் பேசல் இழிவு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்

நூற்பா: 62   
     
பலவகை நயங்களும் பாராது ஒருவிதக் 
குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு 
இழிந்த பான்மை என்று  இயம்பிடல் இசைவே  62.

இதன்பொருள்: ஒரு நூல் அல்லது செய்யுளில் இடம்பெற்றுள்ள பல சொல் நயம், பொருள் நயங்களைப் பொருட்படுத்தாமல் ஏதோ ஒரு குற்றத்தை நினைத்து அந் நூல் அல்லது பாடல் முற்றுமே பிழையென்று வாதிடுதல் சிறந்த அறிவுடைமைக்கு ஏற்ற செயலாகாது எனக் கூறுதல் பொருந்தும் என்றவாறு

விளக்கம்: குற்றம் கருதி என்ற சொல்லாற்றலானே அழுக்காறு அல்லது வேறு காரணம்பற்றிக் குற்றம் கூறவேண்டும் என நினைந்து குறைகூறுஞ் செயல் பெறப்பட்டது. இச்செயல் “இலக்கணக் கவிஞர்சொல் இன்பந் தேடுவர் மலக்குசொற்றேடுவர் வன்க ணாளர்கள்”1 என முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது. சிவப்பிரகாசர், “உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ் கொண்டு புகல்வது அவர் குற்றமே”(தனிப்பாடல்) என்பதைச் செய்யுட்கும் கொள்ளலாம்.

நன்றி: பதிவு புலவர்
ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக