வியாழன், 21 மே, 2020

விரிக்க வேண்டியதை சுருக்கியும் சுருங்கக் கூற வேண்டியதை விரித்தும்  கூறுவது குற்றம் . 
                   
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

நூற்பா: 56   

வீணே விரிப்பினும் விரித்தலைச் சுருக்கினும்
மாணார் புலவரோர் மதியார் அன்றே  56

இதன் பொருள்: சுருக்கமாகச் சொல்லத் தக்கனவற்றைப் பயனின்றி மிக நீட்டி விரித்துக் கூறினாலும், விளக்கமாக்கி கூறவேண்டிய இடங்களில் தெளிவு ஏற்படா வண்ணம் மிகவும் சுருக்கமாகக் கூறினாலும் கல்விச்சிறப்புடைய அறிஞர்கள்  போற்ற மாட்டார்கள்.

வீணே விரிப்பின் மிகைபடக்கூறல், வெற்றெனத் தொடுத்தல் நின்று பயனின்மை ஆகிய குற்றங்களுக்கு இடமாகும். விரித்தலைச் சுருக்கின் குன்றக்கூறல்,  மயங்க வைத்தல் என்ற குற்றங்கள்  நேரும். எனவே இக்குற்றங்களை நீக்கிச் சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், விழுமியது பயத்தல், என்னும் குணங்களை உடையனவாக ஏற்ற அளவறிந்து உரைக்க வேண்டும்.

  கீழ்க்கண்ட இவர் வாக்குகள் இங்கே ஒப்பிட்டுப் பார்த்தற்குரியனவாம். “இருந்ததற்கு ஒருபாட்டு அப்பால் எழுந்ததற்கு ஒருபாட்டு ஓதி பெருந்தொகைப் படுத்துவாரைப் பேதையர் வியந்து  கொள்வார்; மருந்துறழ் கவியொன்றாற்பல் வான்பொருள் தெளிவாகச் சொல்லும் திருந்தியற் பாரதச்சீர் திரிபவர் சிலர்தாம் அன்றே”(புலவர் வில்லி17)  “தாரகன் தான்கந்தன் தன்பால் உரைத்ததற்குறைத்தான்; வாரம் உடையாள் ஒரு பெண்மகளுக்கு அழுகை வளர்த்தான்; ஈரம்இலர் ஊன்சமைக்கும் இழிவைப் பெருக்கி இசைத்தான்; ஆரமலையோன் அருள் பெற்றதனைக் குறுக்கியறைந்தான்”(புலவர் கச்சியப்பர் 6) “சுருகிடில் விளங்கிடாது; துணிவொடு செல்லுமட்டும் பெருக்கிடில் இந்நூல் சூடும் பெயரினுக்கு இசைவுறாது ஆங்கு இருக்கவும் இடையிற் காதை யீரண்டு அடக்கிச் சொற்றோம் செருக்குறு புலவர் பல்லோர் தெளிவுறச் செப்ப லாறே”(அருணகிரி நாதர்புராணம் 93)”கற்பனை மொழிந்தனர்கள் கவிப்புலவர் பல்லோர் அம்முறை விரித்திடல் அடுத்தது அல என்றே இம்முறை சுருக்கினம்’(அருணகிரி நாதர்புராணம் 20,21) இதுவரை எடுத்துக் காட்டப் பெற்ற மேற்கோள்களால் இவ்வாசிரியர் எத்தகைய செய்திகளை விரித்துக் கூறவேண்டும்; எத்தகையனவற்றை விரித்துக் கூறக்கூடாது எனக் கருதுகிறார். என்பதை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி :சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக