செவ்வாய், 2 டிசம்பர், 2014

குரு பக்தி !


குரு பிரம்மா, குரு விஷ்ணு; குரு தேவோ மகேஸ்வர…’ என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மற்ற தெய்வங்களைவிட, குருவுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம். இதில், குருவுக்கு மூன்றாவது இடம் உள்ளது. காரணம், ஒருவனது பிறவிக்கு மாதா, பிதாக்களே காரணம் என்பதால் இவர்களுக்கு முதலிடம்.
ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. மனிதன் பிறந்த பின், அவனது அறிவுக் கண்களை திறந்து விடுபவர் ஆசான் அல்லது குரு. குருவுக்கு நிறைய பெருமைகள் சொல்லப்பட்டுள்ளன. "குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!’ என்றுள்ளது. அதனால், பிறவி எடுத்தவர்கள் ஒரு சத்குருவை அடைந்து, கல்வி, வேத சாஸ்திரங்கள் பயின்று, தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். குரு பக்தி, மிகவும் முக்கியமானது.
ஒரு நல்ல குரு கிடைப்பதற்காக தேடி அலைய வேண்டும் சீடன். ஒரு நல்ல சீடன் கிடைக்க வேண்டுமென்று, குரு தேடிக் கொண்டேயிருக்க வேண்டும். யார் கிடைத்தாலும் அவர் குரு என்றோ, அவன் சீடன் என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது. குருவுக்குப் பணிவிடை செய்து, அவரை திருப்திப்படுத்தினால், கற்ற வித்தைகள் நல்ல பலன் தரும்; குருவை அவமதித்தால் குரு சாபம் ஏற்படும்.
குரு சாபத்தை போக்கவோ, மாற்றவோ பகவானால் கூட முடியாது. அதனால், குரு என்றால் பக்தி, விசுவாசத்துடன் இருந்து பணிவிடை செய்து அவர் சந்தோஷப்பட்டால், அவர் ஆசீர்வதிப்பார். பல சீடர்களுக்கு, "நீ படிக்காமலே சகல வேத சாஸ்திரங்களும் உனக்கு சித்தியாகும்’ என்று, குரு ஆசீர்வதித்ததாகவும், அதே போல, அந்த சீடர்கள் சகல வித்தைகளிலும் சிறந்து விளங்கினர் என்றும் பல சரித்திரங்கள் உள்ளன.
கீதையை உபதேசிக்க விரும்பினான் கண்ணன். யாருக்கு உபதேசம் செய்வது என்று யோசித்தான். அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன் தான் என்று தீர்மானித்தான். அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான். கீதை, உயர்ந்த போதனை, தத்துவங்கள் கொண்டது. அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை, உயர்ந்த இடத்தில் தானே வைக்க வேண்டும்! ஏன் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தான் என்பதற்கான காரணங்கள், பகவத் கீதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளன.
நல்ல பாலை, தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பது தான் உயர்வு. அதை தாமிரப் பாத்திரத்திலோ, சுரைக் குடுவையிலோ வைப்பரா? தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் வைத்தால் தான் பாலுக்குப் பெருமை. வைரத்தோடை நகைப்பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பரா அல்லது சமையலறை அஞ்சறைப் பெட்டியில் கடுகு, உளுத்தம் பருப்போடு போட்டு வைப்பரா?
பொருளின் உயர்வுக்குத் தகுந்தபடி இடம் தேடி வைப்பர். அதுபோல், ஒரு குருவானவர் உயர்ந்த உபதேசங்களை, தகுதி உள்ள மாணவர், சீடர்களுக்கு தான் உபதேசிப்பார். மாணவனின் அறிவு, பணிவு இவைகளை கணக்கிட்டு, அதற்கு தக்கபடி ஆசிர்வதிப்பார். அப்படி அவர் ஆசிர்வதித்து விட்டால், அந்த சீடனும் சீரும் சிறப்புமாக வாழ்வான்; குருவுக்கும் பெருமை சேர்ப்பான். நான் இன்னாருடைய சீடன் என்று பெருமையாகப் பேசுவான். அது, குருவுக்குப் பெருமை.
அப்படியில்லாமல், "குருவா… அவரா… அவருக்கு என்ன சார் தெரியும்? ஏதோ பெயர்தான் குரு! அவர் என்ன சொல்லிக் கொடுத்தார்? எல்லாம் நானே கற்றுக் கொண்டேன்…’ என்று சொல்லும் சீடர்களும் உண்டு. அதனால், விவரம் தெரிந்த குரு, ஆரம்பத்திலேயே நல்ல சீடனை தேர்ந்தெடுக்க வேண்டும். தன்னிடம் பயில்பவனின் நலன் கருதும் குருவை, சீடனும் அடைய வேண்டும். இரண்டும் நன்றாக அமைந்து விட்டால், இருவருக்குமே பெருமை தான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக