வெள்ளி, 16 நவம்பர், 2018

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி-1

 நன்றி: http://tut-temple.blogspot.com

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1

அனைவருக்கும் வணக்கம்.

இன்று சங்கடஹர சதுர்த்தி.

மூத்தோனை வணங்குகின்றோம். எந்த ஒரு புதிய முயற்சிக்கும் ஐங்கரனின்
 ஆசி முக்கியம்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று பாடி, முருகனருள் முன்னிற்கவும், அகத்திய பெருமானின் 
அருளாளாளும் இந்தப் பதிவு அருளப்படுகின்றது.

என்ன ஒற்றுமை..முருகன் புகழ் பாட, அவர் அண்ணன் விநாயகரை வணங்கி
 இந்த தொடர்பதிவை ஆரம்பம் செய்கின்றோம். நாம் ஏற்கனவே கூறியபடி 
ஜீவ நாடி அற்புதங்கள் என்று தொடர்பதிவு அளிக்க நமக்கு குருவருள் 
கூட்டியுள்ளதை தெரிவித்து இருந்தோம். இதோ இன்றைய பதிவில் 
தொடர்கின்றோம். நாடி, ஓலைச்சுவடி,ஏடு பார்த்தல் என்பதெல்லாம் 
நம் நாட்டில் மட்டும் தான் காணக்கிடைக்கும் ஒரு அதிசயம் ஆகும். 
வேறெங்கும் இது போல் நாடி பார்த்தல் என்பது காண இயலாத ஒன்று. 
சரி நாம் ஜீவ நாடி அற்புதம் என்ற அனுபவத்திற்கு செல்வோம்.

அன்பர் ஒருவர் சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய அலுவலக
 தோழன் திருமணத்திற்கு மயிலாதுறை சென்று இருந்தார்.அப்படியே 
வைத்தீஸ்வரன் கோயில் சென்று தரிசித்து, காண்ட நாடி பார்த்துள்ளார். 
திருமண விஷயத்தில் ஆர்வம் இருக்காதே பின்ன. காண்ட நாடிப்படி 
2013 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் நடைபெற்றது. கண்டதே காட்சி..
கொண்டதே 
கோலம் என்பது போல் அவரே எதிர்பார்க்கா வண்ணம் திருமண வாழ்வில்
 புயல் வீசியது. விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் 
வழக்கு தொடுக்கும் நிலை ஏற்பட்டது. வழக்கும் 
2014 ஆண்டில் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு
 ஓட்டமும் நடையுமாக இருந்தார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் நாடி மீதான ஆர்வம் அதிகரித்தது. 
பிரபலமான நாடிகளில் வாசிப்பு நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. அப்போது திருவருள் சக்தி என்ற ஜோதிட மாத இதழில் முருக நாடி பற்றி எழுதி 
இருந்தார்கள். அவனுக்கு நம்பிக்கை போய் விட்டது. இந்நிலையில் நண்பர் 
சித்தர் மார்க்கத்தில் ஈடுபட்டு அகத்தியரை வழிபட தொடங்கி விட்டார். 
அகத்தியர் வழிபாட்டில் கிடைத்த நண்பர்கள் உதவியுடன் மீண்டும் முருக நாடி பற்றி பேச்சு தொடங்கியது.சரி.ஒரு முறை முயற்சி செய்து பாப்போம் என்று எண்ணி அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சரியாக தொடர்பு கிடைக்கவில்லை.

இணையத்தில் நாடி பற்றி தேடிய போது , மகேஸ்வர பூசை பற்றி கண்டு திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் இந்த பூசை செய்வார்கள் என்று கேள்விப்பட்டு, அங்கு திரு.சரவணன் சுவாமிகளை அழைத்து பேசிய போது, பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அன்பரால் மகேஸ்வர பூசையும் 
செய்ய முடியவில்லை. ஒரு புறம் முருக நாடி பார்க்க நமக்கு வழி கிடைக்கவில்லையே என்ற ஏக்கம், மற்றொருபுறம் திருஅண்ணாமலையில்
 தயவு சித்தாஸ்ரமத்தில் மகேஸ்வர பூசை செய்ய முடியவில்லையே என்ற
 ஏக்கம் வேறு.

சரி...முருக நாடி பற்றி பேசிக் கொண்டிருப்பதால் சற்று முருகன் பற்றிய
 செய்திகள் பார்த்து விட்டு, ஜீவா நாடிஅற்புதங்கள் பற்றித் தொடர்வோம்.




நாம் நவராத்திரி  தரிசனங்களைப் பார்த்த போதே, நம் கண்ணில் முருக 
சிந்தனை பற்றிய செய்தி கண்ணில் பட்டது. ஆம்..சஷ்டி விரதம் பற்றி இனி காண்போம்.


 முருகனைத்தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் 
மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில்
 வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார
 சஷ்டி விரதம் எனப்படும்.

கார்த்திகை மாத வளர்பிறைக்கு குமார சஷ்டியைச் `சுப்பிரமணிய சஷ்டி'
என்றும், `ஆனந்த சுப்பிரமணிய பூஜை' என்றும் கூறுவர். ஆனந்த 
சுப்பிரமணிய பூஜை: ஆனந்தன் = நாகம். `சுப்புராயன்' என்ற பெயர் 
முருகனையும், நாகப்பாம்பையும் ஒருங்கே குறிப்பிடுகிற பெயராம்.

திருமணமாகி நீண்ட காலம் மகப்பேறில்லாதவர்கள் ஆனந்த (நாக)
சுப்பிரமணிய பூஜையை நிறைவேற்றினால் மகப்பேறு நிச்சயம் கிடைக்கும்.
முருகனைப் பாம்பு வடிவத்தில் வழிபடலாம்.அல்லது, இணைந்த இருபாம்புகளுக்கிடையில் அமைந்த முருகனையோ, பாம்பின் முடிமீது அமைந்தமுருகனையோ வழிபட்டால் நாக தோஷங்களும், பிற தோஷங்களும்விலகும். நாக சுப்பிரமணியர் வழிபாடு கர்நாடகத்தில் 
அதிகமாக உள்ளது.

இத்தகைய வடிவம் எளிதில் கிடைக்காது.இதற்கு நிகராக இரு தேவியருக்கு இடையில் எழுந்தருளிய முருகனை வழிபடலாம். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்றும்நம்புகின்றனர்.

  கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் 
மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும்
 என்ற பழமொழியாக கூறுவார்கள். அடடா! பதிவின் தலைப்பின் விளக்கம் இப்பொழுது கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றோம்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ 
உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று 
எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். 
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது 
மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும்
 இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், 
நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி 
நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும்.

ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம்
 செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் 
வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, 
குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் 
விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம்
 ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து,
 பூப் போட்டு அலங்கரியுங்கள்.

 பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.

ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

 மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா 
சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். 
முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் 
அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் 
முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். 
பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் 
கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.

அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை 
நிறைவு செய்ய வேண்டும்.

வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை 
நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், 
புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி
 முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் ! ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் 
மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் 
அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய
 விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள்
 சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன்
 தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம்
 நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும்,
 இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் 
குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய 
என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன்
 என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். 
ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது 
அர்த்தஜாம பூஜையாகும்.

ஆறின் மகத்துவம் கண்டு தெளிகின்றோம் முருகா!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் , பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

மீண்டும் அந்த அன்பர் முருக நாடி படிக்க முயற்சி செய்துள்ளார். ஒரு நாள் 
சுமார் 50 முறை கூட அலைபேசியில் அழைத்தும் பலன்கிட்டவில்லை.இந்த சூழ்நிலையில் அவர் பஞ்சேஷ்டி அகத்தியர் சதய பூசைக்கு சென்றுள்ளார்.
அங்கு சில சித்த அடியார்கள் தொடர்பு கிடைத்தது. அதன் மூலம் முருக நாடி 
உறுதி செய்ய அன்பர் அலைபேசி எண் கிடைத்துள்ளது. அடுத்த நாள் காலை 
அவரை தொடர்பு கொண்டபோது, அந்த அன்பர் மீண்டும் அழைப்பதாக 
கூறினார்.

அன்றைய தினம் மதியம் அழைப்பில், தாம் இது போல் சில துன்பங்கள் அனுபவிப்பதாக கூறியுள்ளார் நம் அன்பர். அவர் உடனே பேசி முருக நாடி
 படிக்க உத்திரவு தந்து அதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட செய்தி நம் அன்பருக்கு கிடைத்தது.

பார்த்தீர்களா? ஜீவ நாடியின் மகிமையை. இந்த ஜீவ நாடி படிக்க நமக்கு 
உத்திரவு கிடைக்கவே நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். குருவருள் இருந்தால் தான் இது போன்ற திருவருள் நமக்கு கிடைக்கும். எத்தனை  
நாட்கள் ஜீவ நாடி உத்தரவிற்கு அலைபேசியில் முயற்சி செய்திருப்பார் நம்
 அன்பர். எப்படி ஒரு பயணத்தில் அவருக்கு ஜீவ நாடி படிக்க உத்தரவு கிடைத்துள்ளது.அனைத்தும் முருகன் அருள் தான்.

அன்பர் ஜீவ நாடி படித்தாரா ? அவருடைய திருமண வாழ்வின் துன்பம் 
தீர்ந்ததா? என்பது போன்ற அற்புதங்கள் அடுத்த பதிவில் தொடரும்.
                       ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக