ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-4

·          

  • தவத்திரு வேலுச்சாமி அடிகளார் எனும் முருக பக்தர் தனது சிறு வயது முதலாகவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து முருகனைப் பூஜித்து அருள்வாக்கு சொல்லி வந்தார். அடிகளார் அவர்கள் 45 ஆண்டுகளாக வெள்ளிக்கிழமை இரவில் தூங்காத விரதத்தைத் தவறாமல் கடைபிடித்து வருவதோடு தைப்பூசத்திற்கு காவடி எடுத்துக் கொண்டு சென்னிமலை, சிவன்மலை, பழனி மலை எனும் மூன்று மலைகளில் சென்று வழிபடுவார். பழனியில் சண்முக நதியில் நீராடி காவடியைப் பூசித்து மலைமேல் சென்று வணங்கி வரும் வழக்கத்தைக் கொண்டவராக இருப்பவர் அடிகளார் அவர்கள்.
  • ·         தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மூலம் முருகப்பெருமான் நடத்திய அதிசயங்கள் ஏராளம்...ஏராளம்…
  • ·         இப்படி ஒரு அடிகளார் இருப்பதைக் கேள்விப்பட்ட ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது கால் வலியுடனே சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் தனது வீட்டில் இருந்து நடந்தே வெள்ளிதோறும் சென்று தவத்திரு வேலுச்சாமி அடிகளார் செய்யும் முருக பூஜையைத் தரிசனம் செய்து வந்தார்.
  • ·         அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் அந்தியூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்கள். தனது பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு மாலையில் வெள்ளிதோறும் தனது பாட்டி செல்லும் முருகன் கோவிலுக்கு இவரும் சென்று விடுவார்.
  • ·         சிறிய வயது பையனாக இருந்தாலும் தன்னடக்கம் பணிவு ஆகியவை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் இருப்பது கண்டு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் அருள்வாக்கு சொல்லும் போது அவருக்கு அருகிலேயே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களை அமர வைத்து வந்தார்கள்.
                                              
  • ·         தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் அருள்வாக்கு சொல்வது புரியாத பாடல் வடிவில் வருவது வழக்கம். அதற்கு விளக்கம் புரியாமல் அருள்வாக்கு கேட்பவர்கள் திகைக்கும்போது அதற்குரிய விளக்கங்களை மிகச்சரியாக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் உரைப்பார். 13 வயது சிறுவன் தனது பாடலுக்குப் பொருள் சொல்வது கண்டு  தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மகிழ்ந்து ஆசியிடுவார்கள்.
  • ·         ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தவறாமல் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்களுக்கு இப்படி சேவை செய்து வந்தார்.
  • ·         மற்ற பக்தர்களுக்கு வாக்கு உரைக்கும் போதே ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு விளையாட்டாக சில உபதேசங்களை தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் உரைத்து வந்தார்கள்.
  • ·         ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் உரைத்த உபதேசங்கள் பசு மரத்து ஆணி போல இளவயதிலேயே பதிந்தது.
  • ·         பண்ணாரி அம்மனைப் பூஜித்து வந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் தவத்திரு வேலுச்சாமி அடிகளார் அவர்கள் மீது ஏற்பட்ட ஈடுபாட்டினால் முருக பக்தராக மாறினார்.
  • ·         முருகனும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் உண்மை பக்தியைக் கண்டு விளையாடல்களை ஆரம்பித்தார்.
  • ·         ஒரு முறை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் தனது பேனா தொலைந்து போனது. வீட்டில் சொன்னால் திட்டுவார்களோ எனப் பயந்த ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் முருகனைப் பிரார்த்தனை செய்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துவிட்டார்.

                                                                                                                                      தொடரும்...
         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 6 பிப்ரவரி, 2016

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-3


                                              
  • ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி  பூஜிக்கும் பண்ணாரி அம்மன் சிலையை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களும் அவர்களின் தம்பியும் ஆர்வமுடன் தாங்களும் பூஜிக்கத் தொடங்கினார்கள்.
  • அந்த சிலையை ஒரு சிறு தேர் போல் கட்டி ஊர்வலம் கொண்டு செல்தல், பூக்கட்டிப் போடுதல், ஊதுபத்தி, சூடம் காட்டி பூஜித்தல் என சிறுவர்கள் இருவருமே மிகுந்த ஆர்வத்தோடு பண்ணாரி அம்மனைப் பூஜித்தனர்
                                              
                                         .
  • பூஜிக்க பூஜிக்க இரண்டு சிறுவர்களுக்குமே பண்ணாரி செல்ல வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. திருமதி.குருவாயம்மாள் அவர்கள் இருவரையும் பண்ணாரி கூட்டிச் சென்றார்கள். பூஜை மணி ஒன்றையும் இன்னும் சில மண் சிலைகளையும் வாங்கிக் கொடுத்தார்கள்.
                                                     
                                               
  • இப்படி இன்றும் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் வீட்டில் பண்ணாரி மாரியம்மன் அருள் பாலித்து வருகின்றார்.
  • சிறு வயது முதலாகவே பூஜை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு தனது பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்கள் மூலம் வந்தது
  • அடிக்கடி தான் கண்ட தெய்வீகக் காட்சிகளையும் கனவுகளையும் திருமதி.குருவாயம்மாள் அவர்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் உரைப்பார்கள். அவர் கண்ட கனவு போலவே எதிர்கால நிகழ்ச்சிகள் நடப்பது கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைவர். அத்தகய ஒரு தெய்வீக சக்தியை திருமதி.குருவாயம்மாள் அவர்கள் பெற்றிருந்தார்கள்.
                                      
  •  திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு சில வருடங்கள் கழித்து மீண்டும் அந்த குதிகால் வலி வர ஆரம்பித்தது. மருத்துவர்கள் எலும்பு வளர்வதாகவும் மறுபடியும் அறுவை சிகிச்சைதான் அதற்கு தீர்வு எனவும் உரைத்தனர்.
  • திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு இந்த முறை மருத்துவத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இறைவனே தனது கால் வலியைக் குணமாக்குவார் என்று தீவிரமாக பண்ணாரி அம்மனைப் பிரார்த்தனை செய்து வந்தார்.                                                    தொடரும்...

                                           ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-26


                                            
ஒரு மனிதன் குருவின் மீது பக்தி செலுத்த ஆரம்பிக்கும் போதுதான் குரு மொழியைக் கடைபிடிக்க ஆரம்பிக்கின்றான். குரு மொழியைக் கடைபிடிக்க அந்த கடவுளை உணர்ந்து கொள்கிறான். அந்தக் கடவுளை உணர்ந்து கொள்பவன் நிச்சயம் முதலில் ஒரு நல்ல மனிதனாக வாழ ஆரம்பிக்கின்றான். ஆன்மீகமே மனிதனை விலங்கு நிலையில் இருந்து பிரித்து மனித நிலைக்கு வாழ வைத்து பின் தெய்வ நிலைக்கு உயர்த்தும் சாதனமாகத் திகழ்ந்து வருகின்றது. நமது பாரம்பரியமே குரு சீடன் பாரம்பரியம்தான். நாளடைவில் இந்த குரு சிஷ்யப் பாரம்பரியமானது கைவிடப்பட்டுவிட்டதால்தான் இன்று இத்தனை துன்பங்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருகின்றன. ஒரு மன்னனாக இருந்தாலும் தனது குலகுருவை மதித்துப் போற்றி ஒரு நல்ல நிலையிலே குரு பக்தி செய்து வந்ததை வரலாற்றில் காண முடிகின்றது. சூரியனோ சிவனோ திருமாலோ கணேசனோ அம்பிகையோ முருகப்பெருமானே இப்படி எந்த தெய்வத்தின் மீதும் பக்தி செலுத்தலாம். அவை அனைத்தும் பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்களே என்பதில் எந்த விதமான சந்தேகமில்லை ஆனால் எந்த ஒரு சமயமாக இருந்தாலும் அதற்கு வழிகாட்டும் குரு என்பவர் வேண்டும் என்கிறார் நமது கௌமார குரு வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள். 
                                                          
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள்தான் கௌமார மடாலய ஸ்தாபகர் திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் குரு நாதர்.

 திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களே தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் குரு நாதர். தவத்திரு கந்தசாமி சுவாமிகளின் குரு பக்திக்கு எல்லையே இல்லை என்று சொல்லலாம். 
                                                    
எந்த ஒரு நூல் இயற்றினாலும் எல்லாப் புலவர்களும் இறைவனைக் காப்பாக வைத்தே காப்புச் செய்யுள் பாடுவார்கள். ஆனால் நமது கௌமார குரு தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் மருதமலை அலங்காரத்தில் தனது குருவான திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களைக் காப்பாக வைத்து இராமானந்தன் பொன்னடிகள் காப்பு என்று பாடி இருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல பக்தமான்மியம் முழுவதும் திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் பெயரை ஒவ்வொரு இறுதியிலும் மகுடமாக வைத்துப் பாடி குரு பக்திக்கும் ஒரு நல்ல சீடனுக்கும் உரிய இலக்கணமாகத் திகழ்ந்திருக்கின்றார்கள். 
                                             
இப்படி குருவாக இருக்கும் போதும், சீடனாக இருக்கும்போதும், அந்த சீடர்களின் சீடனாக இருக்கும்போதும், பெரிய யோகியாக இருக்கும் போதும் எப்போதும் உன்னை வழிபடும் நல்ல அடியார்களின் கூட்டத்தில் இருந்து அவர்கள் நம்மை ஒரு நல்வழிப்படுத்துதல் அவர்களைப் போற்றுதல், அவர்களைக் கண்டவுடன் விழுந்து வணங்குதல்,
                                               
 அவர்கள் மீது உள்ள பக்தியால் அழுதல் என இருப்பது ஒரு பக்தனின் இலக்கணம் ஆகும். அருணகிரிநாத சுவாமிகள் நான் அப்படியெல்லாம் இருக்கவில்லையே முருகா...நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன் என்றெல்லாம் இந்த்த் திருப்புகழில் பாடுகின்றார்.
அப்படி நல்ல அடியார்களின் கூட்டத்தில் சேராமல் வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகர மீன்களைப் போல் காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத் தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன் என்று பாடுகின்றார்.
                                                  
உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி வெளிப்பட,  இடுப்பில் கட்டிய மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட
                                                  
 இளமை அழகையும், வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய கோவர்த்தன மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும்
                                          
நிலைதடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், தேவகி -வசுதேவருக்காக விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒப்பற்ற நூறு துரியோதனன் முதலியஅரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய,அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய அடியார்க்கு உதவும் எளிமையையும் பற்றி நிஎல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் திருமாலின் இனிய மருகனே,
                                                         
ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும்,மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே.
இப்படியெல்லாம் கௌமார நெறியான குரு நெறியைக் காட்டும் அருணகிரி நாத சுவாமிகள் அவர்கள் கரூர் அருகில் உள்ள நெரூர் திருப்புகழில் பாடி இருக்கின்றார். அந்த நெரூர் திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக அமைகின்றது.
நெரூர் திருப்புகழ்
குருவு மடியவ ரடியவ ரடிமையு
     மருண மணியணி கணபண விதகர
          குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
     அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி
          குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியும்
     அளக மெனவள ரடவியில் மறுகியு
          மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
     யுதவு பரிமள மதுகர வெகுவித
          வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
     மருது நெறிபட முறைபட வரைதனில்
          உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
     கவிகை யிடவல மதுகையு நிலைகெட
          வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு
நிருப ரணமுக வரசர்கள் வலிதப
     விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு
          நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
     குடக தமனியு நளினமு மருவிய

          நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
                                  
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள் 
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-2

                       
  பண்ணாரி மாரியம்மன்
  • ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களின் பாட்டி திருமதி.குருவாயம்மாள் அவர்களுக்கு தீராத குதிகால் வலி ஒன்று நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஒருமுறை காலில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டு அதேபோல் செய்ய ஏற்பாடு ஆனது. அப்போது மருத்துவ மனையில் ஒரு பெண்மணி இங்கு பண்ணாரி அம்மன் படம் உள்ளது அதை வணங்கினால் உனக்கு அறுவை சிகிச்சை செய்யும் பயம் போய்விடும் என்று சொல்ல பாட்டியும் அவ்விதமே வணங்க கனவில் ஒரு பெண் சத்யமங்கலத்தில் இருந்து வருவதாகக் கூறி காதில் துளசி இலைச் சாறு விட்டு செல்வதாகவும் காட்சி கண்டார்.அதன் பின்பு பயம் ஏதும் இல்லாமல் அறுவை சிகிச்சை முடித்து பின் பூரண குணத்துடன் வீடு திரும்பினார்.
  • ·         பண்ணாரி அம்மன் அருளால்தான் தமக்குக் குணம் கண்டது எனக் கருதி ஒருமுறை அந்த பண்ணாரி சென்று அம்மனைத் தரிசிக்க வேண்டும் எனக்கருதி தனியாகச் செல்ல வேண்டுமே என்று துணைக்கு எல்லோரையும் கூப்பிட்டார். யாரும் வர வில்லை என்பதால் தாமே தனியாகவே செல்வோம் என்று புறப்பட்டு விட்டார்.
  • ·         அந்தியூரில் இருந்து சத்தியமங்கலத்திற்கு பேருந்தில் ஏறி அமர்ந்த சில நிமிடங்களிலேயே வெள்ளைப் புடவை கட்டிய ஒரு பெண்மணி முன் பின் அறிமுகம் இல்லாதவர் இவர் அருகில் வந்து அமர்ந்தார்.
  • ·         பேருந்தில் பயணச்சீட்டு எடுக்கும்போது அருகில் இருந்த அம்மையாரும் இந்த அம்மையாரும் சத்யமங்கலத்திற்கு சீட்டு எடுத்தனர்.
  • ·         பின்பு சத்யமங்கலம் வந்த பின்பு பாட்டி அவர்கள் பண்ணாரி செல்லும் பேருந்தில் ஏறி அமர அவர் இருக்கைக்கு அந்தியூரில் ஏறிய அதே அம்மையார் வந்து அமர்ந்தார். அப்போதுதான் குருவாயம்மாள் அவர்கள் அந்த பெண்ணிடம் தாங்கள் பண்ணாரிதான் செல்கிறீர்களா? என்க் கேட்க ஆம் என்று மட்டும் பதில் வந்தது வேறு பேச்சு எதுவும் இல்லை.
  • ·         பண்ணாரி சென்றவுடன் அந்த அம்மையார் பேருந்தை விட்டு வேகமாகச் சென்று விட்டார். சரி தரிசனம் செய்வோம் என்று குருவாயம்மாள் அவர்கள் சிறப்பாக அம்மனை தரிசனம் செய்து வீட்டிற்கு 5 ரூபாயில் பண்ணாரி மாரியம்மனைப் போலவே  உள்ள ஒரு சிறிய மண் சிலையை ஆன்மார்த்த வழிபாட்டிற்காக வாங்கி தன் பையில் வைத்துக் கொண்டார்.
  • ·         மீண்டும் பேருந்து ஏறி சத்யமங்கலத்திற்கு பயணச்சீட்டு வாங்கி அமர்ந்தார். பேருந்து எடுக்கும் நேரத்தில் அதே வெள்ளைப் புடவைப் பெண்மணி வேகமாக வந்து இவரது இருக்கைக்கு அருகே அமர்ந்து அந்தியூர் வரை வந்துவிட்டு அந்தியூரில் வேகமாக இறங்கிச் சென்று விட்டார். வந்தது யார் என்ற குழப்பம் நீடித்து எப்படியோ துணை இல்லை என்று தடுமாறும் போது அந்த பண்ணாரி அம்மனே இப்படி பெண் ரூபத்தில் வந்ததோ என்று கண்ணீர் மல்கி அந்த அம்மன் சிலையைக் கண்களில் ஒத்திக்கொண்டு வீட்டில் வைத்துப் பூஜித்து வந்தார் குருவாயம்மாள் அவர்கள்.                                     தொடரும்....
பண்ணாரி கோவில்

                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-25

                                                   சிவன்மலை ஆண்டவர்
இன்றைய நாகரீகமான உலகில் காம வயப்படுவதற்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி மகிழ்கின்றது கலியுகம். மண வாழ்க்கையில் முறையான காமத்தை மறுக்காத தர்ம சாத்திரங்கள் முறையற்ற காமத்தை பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக வைத்திருக்கின்றது. அருணகிரிநாத சுவாமிகள் தனது இள வயதில் தனது குரு நாதனாகிய முருகப்பெருமானை உணராமல் பெண்களின் காம வெறியில் விதியின் பயனால் உழன்றதால் இந்த சிவன் மலைத் திருப்புகழில் இப்படிப் பாடுகின்றார்.
 நறுமணப் பொருட்களாகிய கஸ்தூரிஅகில்கஸ்தூரி மஞ்சள்நிறையச் சந்தனம்,பன்னீர், பச்சைக் கற்பூரம், கலவைச் சாந்து இவைகளை அணிந்துள்ளதாய், அழகிய ரத்தினங்களுடன் சேர்க்கப்பட்டுக் கட்டப்பட்ட முத்து மாலையும் நெருங்கியதாய், கொடிய கலகங்களை விளைவிப்பதாய், ரவிக்கையுடன் முட்டி நிமிர்வதாய் உள்ள மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூங்கொத்திலிருந்து வடிகின்ற தேன் என்று சொல்லும்படி உள்ள வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களுடன் கொல்லன் சேரியில் உள்ள மெழுகு போல் உருகி அழியாமல் என்று பாடுகின்றார். மெழுகு உருகும் தன்மை கொண்டது. 
                                                           
அது கொல்லன் உலையில் உள்ள நெருப்பின் சூட்டால் உருகி தனது வாழ் நாளை வீணடித்துக் கொள்வது போல் காமமாகிய நெருப்பில் உருகி நமது வாழ் நாளை வீணடித்துக் கொள்ளக்கூடாது என்கின்றார் அருணகிரிநாத சுவாமிகள். சரி அப்படியே காலத்தை வீணடித்து நமது வாழ்வைக் கெடுத்துக் கொண்டால் என்ன ஆகும். அடுத்த வரியில் சொல்கிறார் பாருங்கள்.

கொக்குப் போல வெண்ணிறமாக முடிகள் நரைக்கும் முன்புஇந்த உடலில் இளம் பருவம் இருக்கும் போதே முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேனாகிய நான் செய்யும் வழியை எனக்கு அருள் செய்யக் கூடாதோ?
                                                           
வயது ஏற ஏற முடி நரைக்க ஆரம்பித்துவிடும். முடி நரைப்பது, பல் விழுவது என்பது எமன் விடுகின்ற வக்கீல் நோட்டீஸ் என்று நகைச்சுவையாகச் சொல்வார்கள் திருமுருக வாரியார் சுவாமிகள் அவர்கள். அப்படி வயதாகி முடி நரைத்த பின்னே ஆன்மீகம் வந்தால் போதும் என்கிறது ஒரு கூட்டம். ஆனால் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது பழமொழி. ஒரு மனிதன் ஞானம் பெற சரியான வயது ஐந்து என்கிறது பாகவதம்.
                                                        
 ஐந்திலேயே ஞானம் பெற்று பழநியில் நின்றவர் நமது முருகபெருமான்.
                                                      
 எனவே இளவயதில் இல்லாத எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு வயது முதிர்ந்த பின்னே கடவுளுக்குக் கண்ணில்லை என்று சொன்னால் என்ன செய்வது? சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே வயது இருக்கும் போதே இளைமை காலத்திலேயே குரு சேவை செய்யப் பழகிக் கொண்டால் அடுத்த ஜென்மத்திலும் நமக்கு குரு சேவை செய்யும் பாக்கியம் கிட்டும். ஏன் குரு சேவை? அதை நான் சொல்லவில்லை அருணகிரி நாத சுவாமிகள் சொல்கின்றார். என்ன வென்று. தொடர்ந்து படியுங்கள். இதோ அடுத்த வரியின் விளக்கம்.
 அந்தத் தூர பூமியிலிருந்தே தரிசனத்தை நிச்சயமாகத் தருவதான பொன் நெடு மதிலை அடையாளமாகக் கொண்ட வயலூர் என்ற திருப்பதியில் வீற்றிருக்கும் வேலனே, 
                                               
                                                                              வயலூர்
இது என்ன அதிசயம் என்று உலகோர் சொல்லும்படி, தன் வசம் இழந்த மகிழ்ச்சியில் விரகத்தால் உள்ளம் சோர்வு அடைந்த பரவை நாச்சியார் மீது கண்ணும் கருத்துமாய், பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை நீங்க, இந்தப் பூமியில் அடியார்க்கு உரிய பத்து இலக்கணங்களும் பொருந்திய சுந்தரர் பரவிப் போற்ற, வேகமாகப் போய் உண்மையான தூதுவராக, உள்ளம் தழைக்க அருளைப் பொழிந்தவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமானுக்கு, 
                                          
                                                 சுந்தரரும் பரவை நாச்சியாரும்
புருஷ தத்துவம் மிக நிறைந்த, மேலான குருவே,
                                            
சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குருநாதா
 இந்த வரிகளில் முருகப்பெருமான் சிவனுக்கு செய்த உபதேசத்தை கௌமார நெறியாகிய குரு நெறியை நினைவு கூர்கின்றார். பரவை நாச்சியாரிடம் சுந்தரருக்காக தூது சென்ற சிவனுக்கு உபதேசம் செய்த முருகா  நான் உனக்கு சேவை செய்து இந்த காம நோயில் இருந்து விடுதலையாகும் வரத்தை அருள்வாயாக என்று வேண்டுகிறார் அருணகிரிநாத சுவாமிகள்.
                                                       
                                         இளமை காலத்திலேயே குரு சேவை செய்தல்
 இதை பட்டாலியூர் என்ற ஊரில் உள்ள சிவன் மலை முருகனிடம் வேண்டுகின்றார். அடுத்த வரியைப் பாருங்கள்.                                          பசுமையான ஓலைகளைக் கொண்டு விளங்கும் பனை மரங்கள் வளர்ந்துள்ள இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் புரியும் பட்டாலியூர் (சிவன் மலை) என்னும் நகரில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. இதோ அந்த திருப்புகழ்.
சிவன் மலை திருப்புகழ்
கத்தூரி யகரு ம்ருகமத வித்தார படிர இமசல
     கற்பூர களப மணிவன ...... மணிசேரக்
 கட்டார வடமு மடர்வன நிட்டூர கலக மிடுவன
     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்
 கொத்தூரு நறவ மெனவத ரத்தூறல் பருகி யவரொடு
     கொற்சேரி யுலையில் மெழுகென ...... வுருகாமே
 கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல்
     குற்றேவல் அடிமை செயும்வகை ...... யருளாதோ
 அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதி
     லச்சான வயலி நகரியி ...... லுறைவேலா
 அச்சோவெ னவச வுவகையி லுட்சோர்த லுடைய பரவையொ
     டக்காகி விரக பரிபவ ...... மறவேபார்
 பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ வருடரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா
 பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
     பட்டாலி மருவு மமரர்கள் ...... பெருமாளே.

 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-1

                                                                 அகத்தியர்  
ஜீவ நாடியில் சித்தர்கள் ஒளி வடிவில் தோன்றி அருள்வாக்கு உரைத்து அளப்பரிய அரும் செயல்களை இந்த அவணி மக்கள் அனைவரும் உய்யும் பொருட்டு செய்து வரும் திருவிளையாடல்கள் ஏராளம்......ஏராளம்.... அதில் அகத்தியர் ஜீவ நாடி மிகவும் பிரபலமாக இருக்கின்றது. காரணம் சித்தர்களின் தலைவராக விளங்கும் அகத்தியர் ஓலைச்சுவடியில் தோன்றி வாக்குரைத்து வருவது ஆங்காங்கே நடந்து வருகின்றது. அந்த அகத்தியரின் குரு நாதராக விளங்ககூடிய முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பாரா என்ற ஒரு கேள்வி எழுகின்றது. முருகப்பெருமான் பரம்பொருள் அல்லவா இறைவனாக இருக்கும் முருகன் எப்படி ஜீவ நாடியில் தோன்றுவார்? எப்படி வாக்குரைப்பார்? என்றெல்லாம் மக்களுக்கு ஐயம் எழுவது இயற்கையே. ஜீவ நாடி மட்டுமல்ல சங்க காலம் தொட்டே வேலன் வெறியாட்டு எனும் நிகழ்வில் மனிதர்கள் மேல் ஆவேசமாக முருகப்பெருமான் வந்து விளையாடி குறி சொல்லும் நிகழ்வுகள் நடந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் முருகப்பெருமான் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பொறுத்தவரை முருகப்பெருமாந்தான் வாக்கு உரைக்கின்றார் என்பதை அனைவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகின்றார்கள். அதே போல் ஜீவ நாடியில் உரைக்கும் வாக்கு அப்படியே 100% பலித்து இறைவனே இதை உரைக்க முடியும் எனும் சாட்சியைத் தந்து விடுகின்றது. மந்திர வித்தைகளோ மாயா ஜாலமோ இல்லாமல் என்ன வருகின்றதோ அதை மட்டுமே நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடி உரைப்பார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் இந்த ஜீவ நாடி படிப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள்  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள். ஆனால் பொருளுக்கு ஆசைப்படாமல் அருளுக்காவே தனது வாழ்வின் இளமை காலம் தொட்டே முருகப்பெருமானின் திருவிளையாடல்களைச் சந்தித்து வரும்  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடி அருள்வாக்கு சொல்லும் போதும், சொற்பொழிவாற்றும் போதும், அருள் நிலையில் பேசும்போதும் யாருமே அறிந்திராத பல செய்திகளைச் சொல்லும் போது மக்கள் முருகா...முருகா...என்று பக்தி வெள்ளத்தில் மிதக்கின்றார்கள்.  
                                               
ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை நெருங்கிப் பழகாமல் அவரிடம் உள்ள சக்தியை யாரும் அறிந்து கொள்ள முடிவதில்லை. எல்லோரிடமும் மிகவும் எளிமையாக எந்தவித தலைக்கணமும் இல்லாமல் தம்மிடம் யார் நம்பி வருகின்றார்களோ அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி அனைவருக்கும் நல்லாசியினை இடுகின்றார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். கௌமார சமயத்தின் வழிபாடுகளைச் செய்யும் நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அனைத்து தெய்வ உபாசனைகளையும் தாம் அறியாத பல விஷயங்களைக்கூட ஜீவ நாடியில் அறிந்து எந்தவித ஒளிவு மறைவில்லாமல் உரைத்து வருகின்றார்கள். மிகச் சிறிய வயதிலேயே இறையருள் பெற்றும் பல்வேறு சிறந்த குரு நாதர்களிடம் தீட்சை பெற்றும் இருப்பதால்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் பழகுபவர்கள் ஒரு 90 வயது முதியவரின் ஞானத்தைப் பெறுவதாகச் சொல்கின்றார்கள். பொய் பேசுபவர்களையும் பொய்யையும் வெறுக்கும்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் உண்மையை ஊரறியச் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கின்றார்கள். எனவேதான் மக்கள் பக்தி நெறிக்கு வந்து பக்குவமாக வாழவேண்டுமானால் இறைவன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் இறைவன் மீது நம்பிக்கை வரவேண்டுமானால் இறைவனின் திருவிளையாடல்களை அனைவரும் உணரவேண்டும் என்றும் ஒரு கொள்கையில் இறைவன் ஜீவ நாடி மூலம் நடத்திய திருவிளையாடல்களை பத்திரிக்கையில் எழுதியும், பேசியும், புத்தகங்களை வெளியிட்டும், இந்த கௌமார பயணத்தில் எழுதியும் ஒரு தெய்வ சேவை செய்து வருகின்றார்கள்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். தனது முதல் உபதேச குரு நாதர் தவத்திரு. வேலுச்சாமி அடிகளார், கௌமார குரு நாதர் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள், வித்யா குரு ஸ்ரீமத் ஜெயவீர தேவா, மீனாட்சி நாடி குரு திரு. ஜோதி அக்பர் சுவாமிகள் என தனது குரு நாதர்களை எப்போதுமே போற்றியும், தனது குரு நாதர்களின் உபதேசங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியும் குருசேவை செய்யவே அவதாரம் எடுத்துள்ளோம் எனும் கொள்கையோடும் செயல்பட்டு வருகின்றார்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். அவரிடம் ஜீவ நாடி கேட்டவர்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் அவ்வளவு எளிதில் யாருக்கும் அவர் ஜீவ நாடி உரைப்பதில்லை. 
                                     
                                                        ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்
அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கின்ற அமாவாஸை பூஜையில் சுமார் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் ஆசி வாங்கியும், அதில் சுமார் 20 பேர் மட்டுமே முருகன் அருள்வாக்கு கேட்டும் செல்கின்றார்கள். 
                                                           
அதனால் முருகன் அருள் நிரம்பப் பெற்றவர்கள் மட்டுமே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் ஜீவ நாடி கேட்டு அதன் படி நடந்து கொள்வதை அனுபவத்தில் பார்க்க முடிகின்றது. ஜீவ நாடியில் வந்த வாகின்படி நலம் அடைந்து வருபவர்களைப் பார்க்கும் போது முருகப்பெருமான் நடத்தும் திருவிளையாடல்களைக் கண்டு ஒரு பெரும் வியப்பே மேலிடுகின்றது எனலாம்.
                                                          
 எனவே  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் ஒரு சாதாரண ஜோதிடரோ அல்லது குறி சொல்பவரோ அல்ல முன் ஜென்மத்தில் கௌமார சமயத்தில் வந்த அடியவர்களில் இவரும் ஒருவர் என மீனாட்சி நாடியில் குறிப்பு இருப்பதால் இவருக்கு நடக்கும் ஜீவ நாடி திருவிளைடாடல்கள் அனைத்தும் முன் ஜென்ம தொடர்பே என அறிந்து கொள்ள முடிகின்றது. சரி ஜீவ நாடி படிக்கும் கலை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் எப்படி பெற்றார்கள், முருகப்பெருமான் சிறு வயது முதலே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களுக்கு நடத்திய திருவிளையாடல்கள் என்ன? ஜீவ நாடியின் மூலம் நடந்த அதிசயங்கள் என்ன? ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் உருவான வரலாற்றுப் பிண்ணனி என்ன? என்பது போன்ற பலர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக நமது கௌமார பயணத்தில் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு எனும் ஒரு புதிய தொடர் உதயமாகின்றது. நிச்சயம் இந்த தொடர் முருகப்பெருமானின் விளையாடல்களை உலகம் அறியச்செய்யும் அதேபோல் கௌமார சமயத்தின் பெருமைகளை பறைசாற்றும், கௌமார குரு நாதர்களின் அருள்திறங்களைப் போற்றும், அதே சமயம் 100% முருகன் திருவடி மீது சத்தியமாக, குரு நாதர்கள் மீது நாங்கள் கொண்டுள்ள பக்தியின் மீது சத்தியாமாக இதில் உண்மை மட்டுமே இருக்கும்...உண்மை மட்டுமே நிலைக்கும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
எனும் மறைமொழியின் படி சத்தியமான உண்மை வரலாறுகள் மட்டுமே இதில் இடம்பெறும். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் திருவடியை தூய மனதோடு வணங்கி தூய மனதோடு இதைப் படித்தால் நிச்சயம் ஸ்ரீஞாஸ்கந்த மூர்த்தியின் விளையாடல்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கத் துவங்கும்.ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அனைவருக்கும் தற்சமயம் ஜீவ நாடி உரைப்பதில்லை ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நடக்கும் அமாவாஸைப் பூஜையில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்ற பின்பு நிச்சயம் ஜீவ நாடி அருள்வாக்கு நீங்களும் கேட்டு உங்கள் வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ளலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் பக்தியில்லாதவர்களுக்கு இந்த கீதையைச் சொல்லக் கூடாது அர்ச்சுனா என உபதேசிக்கின்றார்.
                                                
 எனவே பக்தியில்லாதவர்கள் இதை படிக்கவும் வேண்டாம் அடுத்தவர்களுக்குச் சொல்லவும் வேண்டாம். பக்தியோடு படித்து பாரினில் இன்புற்று ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தியின் இன்னருளோடு இகபர சௌபாக்யம் பெற்று வாழ எல்லாம் வல்ல குரு நாதரின் திருத்தாள் பணிகின்றோம்.
                                                          
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

தினம் ஒரு திருப்புகழ் பகுதி-24


                                                                  சிவன்மலை
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்தப்பகுதி மக்களின் குலதெய்வமாக இந்த சிவன்மலை முருகன் போற்றப்படுகிறார். இந்த முருகனின் சிறப்பு என்னவென்றால் தன்னை வணங்கும் பக்தர் யாராவது ஒருவரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை சூட்சுமமாக சொல்லிவிட்டு மறைந்துவிடுவார். முருகப்பெருமான்  சொன்ன பொருளை  கோவிலின் அலுவலகத்தில் சென்று சொல்லவேண்டும். 
                                                 
அவர்கள் சுவாமியிடம் உத்தரவு கேட்டு பூக்கட்டி போட்டு பார்ப்பார்கள். சொன்னவருக்கு சாதகமாக உத்தரவு வந்தால் அவர் சொன்ன பொருளை அங்குள்ள உத்தரவு பெட்டி என்னும் கண்ணாடி பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடக்கும்.  சுனாமி வந்தபோது தண்ணீரை வைத்து பூஜை நடந்தது.
                                      
மஞ்சள் விலை ஏறிய சமயத்தில் மஞ்சளை வைத்து பூஜை நடந்தது.  பாலை வைத்து பூஜை நடந்த போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. 
                                                   
இப்போது இரும்பை வைத்துப் பூஜை ஆகின்றது. இப்படியாக வைத்து பூஜை செய்வதால் குறிப்பிட்ட பொருட்கள் அழிந்து போவது, பொருட்கள் விலையேறுவது, சில விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் போன்றவற்றை முன்பே உணர்த்தி உலக மக்களை பெருமளவு துயரங்களில் இருந்து காக்கிறார் என்பது நம்பிக்கை. அடுத்த பொருள் பக்தரின் கனவில் வந்து உணர்த்தும் வரை முன்பு இருந்த பொருளே தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. 

அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப் பெருமான். 
                                                    

முசுகுந்தன் என்ற அரசன் தீராத நோயால் அவதிப்பட்டார். 
                                       
இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல் முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது. 
                                                     
இப்படி பல பெருமைகளை உடைய காங்கேயத்தில் இருக்கும் சிவன் மலை முருகன் மீது பாடிய திருப்புகழே இன்றைய தினம் ஒரு திருப்புகழ்.
சிவன்மலை திருப்புகழ்
இருகுழை யிடறிக் காது மோதுவ
     பரிமள நளினத் தோடு சீறுவ
          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... வதிசூர
 எமபடர் படைகெட் டோட நாடுவ
     அமுதுடன் விடமொத் தாளை யீருவ
          ரதிபதி கலைதப் பாது சூழுவ ...... முநிவோரும்
 உருகிட விரகிற் பார்வை மேவுவ
     பொருளது திருடற் காசை கூறுவ
          யுகமுடி விதெனப் பூச லாடுவ ...... வடிவேல்போல்
 உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
     மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
          உனதடி நிழலிற் சேர வாழ்வது ...... மொருநாளே
 முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
     மரகத கிரணப் பீலி மாமயில்
          முதுரவி கிரணச் சோதி போல்வய ...... லியில்வாழ்வே
 முரண்முடி யிரணச் சூலி மாலினி
     சரணெனு மவர்பற் றான சாதகி
          முடுகிய கடினத் தாளி வாகினி ...... மதுபானம்
 பருகினர் பரமப் போக மோகினி
     அரகர வெனும்வித் தாரி யாமளி
          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்
 பறையறை சுடலைக் கோயில் நாயகி
     இறையொடு மிடமிட் டாடு காரணி
          பயிரவி யருள்பட் டாலி யூர்வரு ...... பெருமாளே.
 விளக்கம்
 காதிலுள்ள இரண்டு குண்டலங்களையும் மீறி காதுகளை மோதுவன. மணம் மிகுந்த தாமரை மலர்களை சீறிக் கோபிப்பன. நிகர் இல்லாத முந்தை வினைகளையும் தாவி மீள்வன. மிக்க சூரத்தனம் உடைய யமனுடைய தூதர்களாகிய சேனை அஞ்சிப் பின்னடைந்து ஓடும்படி வழி தேடுவன. அமுதமும் விஷமும் கலந்தன போன்று ஆளையே அறுத்துத் தள்ளுவன. ரதியின் கணவனான மன்மதனுடைய காம சாஸ்திர நூலிலிருந்து சிறிதும் பிறழாத வண்ணம் எவரையும் சூழ்வன. முனிவர்களும் காமத்தால் உருகும்படியாக, தந்திரத்துடன் கூடிய பார்வையை உடையன. பொருளைக் கவரும் பொருட்டு ஆசை மொழிகளைப் பேசுவன. யுக முடிவு தானோ என்று சொல்லும்படி சில சமயம் போர் விளைவிப்பன. வேலாயுதத்தைப் போல உயிரை வதைக்கும் இத்தகைய கண்களை உடைய ஆசை மாதர்களின்  காம மயக்கம் தருகின்ற பெரும் பள்ளத்தில் போய் விழாமல் இருக்கும் பொருட்டு, உனது திருவடியின் நிழலில் பொருந்தி வாழும் வாழ்க்கை என்றொரு நாளாவது கிடைக்குமோ?
  நறு மணம் வீசும் மாலையை அணிந்து, உனக்கு வாகனம் ஆகும்படி விரும்பின பச்சை ஒளி வீசும் தோகையைக் கொண்ட சிறந்த மயிலின் மேல்முற்றின ஒளி கொண்ட சூரியனுடைய ஒளியைப் போல் விளங்கி வயலூரில் வாழும் செல்வமேவலிமை வாய்ந்த முடியை உடைய, போர்க்கு உற்ற சூலாயுதத்தை ஏந்தியவள், மாலையை அணிந்தவள்உனக்கு அடைக்கலம் என்று நிற்கும் அடியார்களுக்கு பற்றாக இருக்கும் குணத்தினள், வேகமாகச் செல்லும் கடினமான பெண்சிங்க வாகனம் உடையவள் கள்ளுணவை உண்பவர்களுக்கு மேலான போகத்தை அளிக்கும் அழகிஅரகர என்று நிரம்ப ஒலி செய்பவள், சியாமளப் பச்சை நிறத்தை உடையவள்சிலம்பு அணிந்த கால்களை உடைய காளி, பேய்கள் நடனமாடும், பறைகள் ஒலிப்பதுமான, சுடு காட்டுக் கோயிலின் தலைவி சிவ பெருமானோடுஅவரது இடப்பாகத்தில் இருந்துகொண்டே, காரணமாக நடனம் செய்பவள்அத்தகைய பைரவியாம் பார்வதி தேவி பெற்றருளியவனும், பட்டாலியூரில்(சிவன்மலையில்)வீற்றிருப்பவனுமான, பெருமாளே.
                                            
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.

ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!