ஒரு மனிதன் குருவின் மீது பக்தி செலுத்த ஆரம்பிக்கும்
போதுதான் குரு மொழியைக் கடைபிடிக்க ஆரம்பிக்கின்றான். குரு மொழியைக் கடைபிடிக்க
அந்த கடவுளை உணர்ந்து கொள்கிறான். அந்தக் கடவுளை உணர்ந்து கொள்பவன் நிச்சயம்
முதலில் ஒரு நல்ல மனிதனாக வாழ ஆரம்பிக்கின்றான். ஆன்மீகமே மனிதனை விலங்கு நிலையில்
இருந்து பிரித்து மனித நிலைக்கு வாழ வைத்து பின் தெய்வ நிலைக்கு உயர்த்தும்
சாதனமாகத் திகழ்ந்து வருகின்றது. நமது பாரம்பரியமே குரு சீடன் பாரம்பரியம்தான். நாளடைவில்
இந்த குரு சிஷ்யப் பாரம்பரியமானது கைவிடப்பட்டுவிட்டதால்தான் இன்று இத்தனை
துன்பங்கள் நம்மைத் துரத்திக் கொண்டே வருகின்றன. ஒரு மன்னனாக இருந்தாலும் தனது
குலகுருவை மதித்துப் போற்றி ஒரு நல்ல நிலையிலே குரு பக்தி செய்து வந்ததை வரலாற்றில்
காண முடிகின்றது. சூரியனோ சிவனோ திருமாலோ கணேசனோ அம்பிகையோ முருகப்பெருமானே இப்படி
எந்த தெய்வத்தின் மீதும் பக்தி செலுத்தலாம். அவை அனைத்தும் பரம்பொருளின் வெவ்வேறு
வடிவங்களே என்பதில் எந்த விதமான சந்தேகமில்லை ஆனால் எந்த ஒரு சமயமாக இருந்தாலும்
அதற்கு வழிகாட்டும் குரு என்பவர் வேண்டும் என்கிறார் நமது கௌமார குரு வண்ணச்சரபம்
தண்டபாணி சுவாமிகள் அவர்கள்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அவர்கள்தான் கௌமார
மடாலய ஸ்தாபகர் திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களின் குரு நாதர்.
எந்த ஒரு நூல்
இயற்றினாலும் எல்லாப் புலவர்களும் இறைவனைக் காப்பாக வைத்தே காப்புச் செய்யுள்
பாடுவார்கள். ஆனால் நமது கௌமார குரு தவத்திரு கந்தசாமி சுவாமிகள் அவர்கள் மருதமலை
அலங்காரத்தில் தனது குருவான திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள் அவர்களைக்
காப்பாக வைத்து இராமானந்தன் பொன்னடிகள் காப்பு என்று பாடி இருக்கின்றார்கள்.
அதுமட்டுமல்ல பக்தமான்மியம் முழுவதும் திருப்பெருந்திரு.இராமானந்த சுவாமிகள்
அவர்களின் பெயரை ஒவ்வொரு இறுதியிலும் மகுடமாக வைத்துப் பாடி குரு பக்திக்கும் ஒரு
நல்ல சீடனுக்கும் உரிய இலக்கணமாகத் திகழ்ந்திருக்கின்றார்கள்.
இப்படி குருவாக
இருக்கும் போதும், சீடனாக இருக்கும்போதும், அந்த சீடர்களின் சீடனாக இருக்கும்போதும்,
பெரிய யோகியாக இருக்கும் போதும் எப்போதும் உன்னை வழிபடும் நல்ல அடியார்களின் கூட்டத்தில்
இருந்து அவர்கள் நம்மை ஒரு நல்வழிப்படுத்துதல் அவர்களைப் போற்றுதல், அவர்களைக்
கண்டவுடன் விழுந்து வணங்குதல்,
அவர்கள் மீது உள்ள பக்தியால் அழுதல் என இருப்பது
ஒரு பக்தனின் இலக்கணம் ஆகும். அருணகிரிநாத சுவாமிகள் நான் அப்படியெல்லாம்
இருக்கவில்லையே முருகா...நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக்
கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன் என்றெல்லாம் இந்த்த்
திருப்புகழில் பாடுகின்றார்.
அப்படி நல்ல அடியார்களின் கூட்டத்தில் சேராமல் வேசியர்களின்
மலை போன்ற மார்பகங்களில் இடறி
விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம்
மயக்கமுற்றுத் திரிந்தும், மகர மீன்களைப் போல் காது வரை
நீண்டு அங்குள்ள குண்டலங்களைத் தாக்கும்
இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலூர்ப் பதியில்
அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை
கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன் என்று
பாடுகின்றார்.
உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ,
அதனால் நீதி வெளிப்பட, இடுப்பில் கட்டிய மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட
இளமை அழகையும், வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க,
நெருங்கிய கோவர்த்தன
மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும்,
நிலைதடுமாற, உலவுவதற்கு இடமில்லாத
பாதாள அறையில், தேவகி -வசுதேவருக்காக விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒப்பற்ற நூறு துரியோதனன்
முதலியஅரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய,அர்ச்சுனனுடைய தேரை முன்பு
செலுத்திய அடியார்க்கு உதவும் எளிமையையும் பற்றி நிஎல்லா பூமிகளும்
புகழ்ந்து உரைக்கும் திருமாலின் இனிய மருகனே,
ஒளி வீசும் சங்குகளும்
வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும்,மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே.
இப்படியெல்லாம் கௌமார நெறியான குரு நெறியைக் காட்டும்
அருணகிரி நாத சுவாமிகள் அவர்கள் கரூர் அருகில் உள்ள நெரூர் திருப்புகழில் பாடி
இருக்கின்றார். அந்த நெரூர் திருப்புகழே இன்றைய பாராயணத்திருப்புகழாக அமைகின்றது.
நெரூர் திருப்புகழ்
குருவு மடியவ ரடியவ ரடிமையு
மருண
மணியணி கணபண விதகர
குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர்
குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகு
தலுமிலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர்
மருவு முலையெனு மலையினி லிடறியும்
அளக
மெனவள ரடவியில் மறுகியு
மகர
மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே
வயலி நகரியி லருள்பெற மயில்மிசை
யுதவு
பரிமள மதுகர வெகுவித
வனச
மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு
மருது
நெறிபட முறைபட வரைதனில்
உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி
உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி
கவிகை
யிடவல மதுகையு நிலைகெட
வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு
நிருப ரணமுக வரசர்கள் வலிதப
விசயன்
ரதமுதல் நடவிய வெளிமையு
நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே
நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய
குடக
தமனியு நளினமு மருவிய
நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம்ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக