திருப்பூர் மாவட்டம்
காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்தப்பகுதி மக்களின் குலதெய்வமாக
இந்த சிவன்மலை முருகன் போற்றப்படுகிறார். இந்த முருகனின் சிறப்பு என்னவென்றால்
தன்னை வணங்கும் பக்தர் யாராவது ஒருவரின் கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை சூட்சுமமாக
சொல்லிவிட்டு மறைந்துவிடுவார். முருகப்பெருமான் சொன்ன பொருளை கோவிலின் அலுவலகத்தில் சென்று சொல்லவேண்டும்.
அவர்கள் சுவாமியிடம் உத்தரவு கேட்டு பூக்கட்டி போட்டு பார்ப்பார்கள். சொன்னவருக்கு
சாதகமாக உத்தரவு வந்தால் அவர் சொன்ன பொருளை அங்குள்ள உத்தரவு பெட்டி என்னும்
கண்ணாடி பெட்டியில் வைத்து தினமும் பூஜை நடக்கும். சுனாமி வந்தபோது தண்ணீரை வைத்து
பூஜை நடந்தது.
மஞ்சள் விலை ஏறிய சமயத்தில்
மஞ்சளை வைத்து பூஜை நடந்தது. பாலை வைத்து பூஜை நடந்த போது பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இப்போது இரும்பை வைத்துப் பூஜை ஆகின்றது. இப்படியாக
வைத்து பூஜை செய்வதால் குறிப்பிட்ட பொருட்கள் அழிந்து போவது, பொருட்கள் விலையேறுவது, சில விஷயங்களால் மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள்
போன்றவற்றை முன்பே உணர்த்தி உலக மக்களை பெருமளவு துயரங்களில் இருந்து காக்கிறார்
என்பது நம்பிக்கை. அடுத்த பொருள் பக்தரின் கனவில் வந்து உணர்த்தும் வரை முன்பு
இருந்த பொருளே தொடர்ந்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
அகத்திய முனிவர், மெய்யான சன்மார்க்க நெறியை உபதேசிக்கும்படி முருக
பெருமானிடம் வேண்டினார். அகத்தியரை சிவன்மலைக்கு அழைத்து சென்று இங்கு இருந்த
அத்திமரத்தின் கீழ் உபதேசம் செய்து அந்த இடத்திலேயெ நிரந்தரமாக அமர்ந்தார் முருகப்
பெருமான்.
முசுகுந்தன் என்ற அரசன் தீராத
நோயால் அவதிப்பட்டார்.
இதற்கு பல மருந்துகள் உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.
அதனால் கௌதமகரிஷி முனிவரிடம் சென்ற முசுகுந்தன், தன் உடல் உபாதையை தீர்க்கும்படி வேண்டினார். “சிவன்மலை முருகனை வணங்கினால் உன் வியாதி நீங்கும்.” என்றார் கௌதமகரிஷி. முனிவர் கூறியது போல்
முசுகுந்தன் சிவன்மலை முருகனை தரிசித்து பின் முசுகுந்தனை வதைத்த நோய் விலகியது.
இப்படி பல பெருமைகளை உடைய காங்கேயத்தில் இருக்கும் சிவன் மலை முருகன் மீது பாடிய திருப்புகழே இன்றைய தினம் ஒரு திருப்புகழ்.
சிவன்மலை திருப்புகழ்
இருகுழை யிடறிக் காது மோதுவ
பரிமள நளினத் தோடு சீறுவ
இணையறு வினையைத் தாவி மீளுவ
...... வதிசூர
அமுதுடன் விடமொத் தாளை யீருவ
ரதிபதி கலைதப் பாது சூழுவ
...... முநிவோரும்
பொருளது திருடற் காசை கூறுவ
யுகமுடி விதெனப் பூச லாடுவ
...... வடிவேல்போல்
மயல்தரு கமரிற் போய்வி ழாவகை
உனதடி நிழலிற் சேர வாழ்வது
...... மொருநாளே
மரகத கிரணப் பீலி மாமயில்
முதுரவி கிரணச் சோதி போல்வய
...... லியில்வாழ்வே
சரணெனு மவர்பற் றான சாதகி
முடுகிய கடினத் தாளி வாகினி
...... மதுபானம்
அரகர வெனும்வித் தாரி யாமளி
பரிபுர சரணக் காளி கூளிகள்
...... நடமாடும்
இறையொடு மிடமிட் டாடு காரணி
பயிரவி யருள்பட் டாலி
யூர்வரு ...... பெருமாளே.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்
கட்டுரையாக்கம்
ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்
ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், அந்தியூர்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக