வியாழன், 4 பிப்ரவரி, 2016

ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு பகுதி-1

                                                                 அகத்தியர்  
ஜீவ நாடியில் சித்தர்கள் ஒளி வடிவில் தோன்றி அருள்வாக்கு உரைத்து அளப்பரிய அரும் செயல்களை இந்த அவணி மக்கள் அனைவரும் உய்யும் பொருட்டு செய்து வரும் திருவிளையாடல்கள் ஏராளம்......ஏராளம்.... அதில் அகத்தியர் ஜீவ நாடி மிகவும் பிரபலமாக இருக்கின்றது. காரணம் சித்தர்களின் தலைவராக விளங்கும் அகத்தியர் ஓலைச்சுவடியில் தோன்றி வாக்குரைத்து வருவது ஆங்காங்கே நடந்து வருகின்றது. அந்த அகத்தியரின் குரு நாதராக விளங்ககூடிய முருகப்பெருமான் ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பாரா என்ற ஒரு கேள்வி எழுகின்றது. முருகப்பெருமான் பரம்பொருள் அல்லவா இறைவனாக இருக்கும் முருகன் எப்படி ஜீவ நாடியில் தோன்றுவார்? எப்படி வாக்குரைப்பார்? என்றெல்லாம் மக்களுக்கு ஐயம் எழுவது இயற்கையே. ஜீவ நாடி மட்டுமல்ல சங்க காலம் தொட்டே வேலன் வெறியாட்டு எனும் நிகழ்வில் மனிதர்கள் மேல் ஆவேசமாக முருகப்பெருமான் வந்து விளையாடி குறி சொல்லும் நிகழ்வுகள் நடந்ததற்குச் சான்றுகள் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் முருகப்பெருமான் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பொறுத்தவரை முருகப்பெருமாந்தான் வாக்கு உரைக்கின்றார் என்பதை அனைவரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகின்றார்கள். அதே போல் ஜீவ நாடியில் உரைக்கும் வாக்கு அப்படியே 100% பலித்து இறைவனே இதை உரைக்க முடியும் எனும் சாட்சியைத் தந்து விடுகின்றது. மந்திர வித்தைகளோ மாயா ஜாலமோ இல்லாமல் என்ன வருகின்றதோ அதை மட்டுமே நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடி உரைப்பார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டிருந்தால் இந்த ஜீவ நாடி படிப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பார்கள்  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள். ஆனால் பொருளுக்கு ஆசைப்படாமல் அருளுக்காவே தனது வாழ்வின் இளமை காலம் தொட்டே முருகப்பெருமானின் திருவிளையாடல்களைச் சந்தித்து வரும்  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் ஜீவ நாடி அருள்வாக்கு சொல்லும் போதும், சொற்பொழிவாற்றும் போதும், அருள் நிலையில் பேசும்போதும் யாருமே அறிந்திராத பல செய்திகளைச் சொல்லும் போது மக்கள் முருகா...முருகா...என்று பக்தி வெள்ளத்தில் மிதக்கின்றார்கள்.  
                                               
ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களை நெருங்கிப் பழகாமல் அவரிடம் உள்ள சக்தியை யாரும் அறிந்து கொள்ள முடிவதில்லை. எல்லோரிடமும் மிகவும் எளிமையாக எந்தவித தலைக்கணமும் இல்லாமல் தம்மிடம் யார் நம்பி வருகின்றார்களோ அவர்கள் வாழ்வில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தி அனைவருக்கும் நல்லாசியினை இடுகின்றார்கள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். கௌமார சமயத்தின் வழிபாடுகளைச் செய்யும் நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அனைத்து தெய்வ உபாசனைகளையும் தாம் அறியாத பல விஷயங்களைக்கூட ஜீவ நாடியில் அறிந்து எந்தவித ஒளிவு மறைவில்லாமல் உரைத்து வருகின்றார்கள். மிகச் சிறிய வயதிலேயே இறையருள் பெற்றும் பல்வேறு சிறந்த குரு நாதர்களிடம் தீட்சை பெற்றும் இருப்பதால்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் பழகுபவர்கள் ஒரு 90 வயது முதியவரின் ஞானத்தைப் பெறுவதாகச் சொல்கின்றார்கள். பொய் பேசுபவர்களையும் பொய்யையும் வெறுக்கும்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் உண்மையை ஊரறியச் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கின்றார்கள். எனவேதான் மக்கள் பக்தி நெறிக்கு வந்து பக்குவமாக வாழவேண்டுமானால் இறைவன் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்றும் இறைவன் மீது நம்பிக்கை வரவேண்டுமானால் இறைவனின் திருவிளையாடல்களை அனைவரும் உணரவேண்டும் என்றும் ஒரு கொள்கையில் இறைவன் ஜீவ நாடி மூலம் நடத்திய திருவிளையாடல்களை பத்திரிக்கையில் எழுதியும், பேசியும், புத்தகங்களை வெளியிட்டும், இந்த கௌமார பயணத்தில் எழுதியும் ஒரு தெய்வ சேவை செய்து வருகின்றார்கள்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். தனது முதல் உபதேச குரு நாதர் தவத்திரு. வேலுச்சாமி அடிகளார், கௌமார குரு நாதர் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள், வித்யா குரு ஸ்ரீமத் ஜெயவீர தேவா, மீனாட்சி நாடி குரு திரு. ஜோதி அக்பர் சுவாமிகள் என தனது குரு நாதர்களை எப்போதுமே போற்றியும், தனது குரு நாதர்களின் உபதேசங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியும் குருசேவை செய்யவே அவதாரம் எடுத்துள்ளோம் எனும் கொள்கையோடும் செயல்பட்டு வருகின்றார்  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். அவரிடம் ஜீவ நாடி கேட்டவர்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். காரணம் அவ்வளவு எளிதில் யாருக்கும் அவர் ஜீவ நாடி உரைப்பதில்லை. 
                                     
                                                        ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம்
அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஒவ்வொரு மாதமும் நடக்கின்ற அமாவாஸை பூஜையில் சுமார் 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து மது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் ஆசி வாங்கியும், அதில் சுமார் 20 பேர் மட்டுமே முருகன் அருள்வாக்கு கேட்டும் செல்கின்றார்கள். 
                                                           
அதனால் முருகன் அருள் நிரம்பப் பெற்றவர்கள் மட்டுமே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களிடம் ஜீவ நாடி கேட்டு அதன் படி நடந்து கொள்வதை அனுபவத்தில் பார்க்க முடிகின்றது. ஜீவ நாடியில் வந்த வாகின்படி நலம் அடைந்து வருபவர்களைப் பார்க்கும் போது முருகப்பெருமான் நடத்தும் திருவிளையாடல்களைக் கண்டு ஒரு பெரும் வியப்பே மேலிடுகின்றது எனலாம்.
                                                          
 எனவே  நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் ஒரு சாதாரண ஜோதிடரோ அல்லது குறி சொல்பவரோ அல்ல முன் ஜென்மத்தில் கௌமார சமயத்தில் வந்த அடியவர்களில் இவரும் ஒருவர் என மீனாட்சி நாடியில் குறிப்பு இருப்பதால் இவருக்கு நடக்கும் ஜீவ நாடி திருவிளைடாடல்கள் அனைத்தும் முன் ஜென்ம தொடர்பே என அறிந்து கொள்ள முடிகின்றது. சரி ஜீவ நாடி படிக்கும் கலை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் எப்படி பெற்றார்கள், முருகப்பெருமான் சிறு வயது முதலே  ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களுக்கு நடத்திய திருவிளையாடல்கள் என்ன? ஜீவ நாடியின் மூலம் நடந்த அதிசயங்கள் என்ன? ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் உருவான வரலாற்றுப் பிண்ணனி என்ன? என்பது போன்ற பலர் மனதில் உள்ள கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக நமது கௌமார பயணத்தில் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி வரலாறு எனும் ஒரு புதிய தொடர் உதயமாகின்றது. நிச்சயம் இந்த தொடர் முருகப்பெருமானின் விளையாடல்களை உலகம் அறியச்செய்யும் அதேபோல் கௌமார சமயத்தின் பெருமைகளை பறைசாற்றும், கௌமார குரு நாதர்களின் அருள்திறங்களைப் போற்றும், அதே சமயம் 100% முருகன் திருவடி மீது சத்தியமாக, குரு நாதர்கள் மீது நாங்கள் கொண்டுள்ள பக்தியின் மீது சத்தியாமாக இதில் உண்மை மட்டுமே இருக்கும்...உண்மை மட்டுமே நிலைக்கும்.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
எனும் மறைமொழியின் படி சத்தியமான உண்மை வரலாறுகள் மட்டுமே இதில் இடம்பெறும். ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் திருவடியை தூய மனதோடு வணங்கி தூய மனதோடு இதைப் படித்தால் நிச்சயம் ஸ்ரீஞாஸ்கந்த மூர்த்தியின் விளையாடல்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடக்கத் துவங்கும்.ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அனைவருக்கும் தற்சமயம் ஜீவ நாடி உரைப்பதில்லை ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நடக்கும் அமாவாஸைப் பூஜையில் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்ற பின்பு நிச்சயம் ஜீவ நாடி அருள்வாக்கு நீங்களும் கேட்டு உங்கள் வாழ்க்கையை செம்மைப் படுத்திக் கொள்ளலாம். பகவத் கீதையில் கிருஷ்ணர் பக்தியில்லாதவர்களுக்கு இந்த கீதையைச் சொல்லக் கூடாது அர்ச்சுனா என உபதேசிக்கின்றார்.
                                                
 எனவே பக்தியில்லாதவர்கள் இதை படிக்கவும் வேண்டாம் அடுத்தவர்களுக்குச் சொல்லவும் வேண்டாம். பக்தியோடு படித்து பாரினில் இன்புற்று ஸ்ரீஞானஸ்கந்தமூர்த்தியின் இன்னருளோடு இகபர சௌபாக்யம் பெற்று வாழ எல்லாம் வல்ல குரு நாதரின் திருத்தாள் பணிகின்றோம்.
                                                          
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

2 கருத்துகள்:

  1. it really amazing articles about your career. so all devotees are defiantly follow you and get blesses from Shri nanaskanta Murthy.

    பதிலளிநீக்கு
  2. The above article said it's clear truth. Because I know 13 years of the shri Skanda murthi upaskar.all these had done for God's blessed.

    பதிலளிநீக்கு