புதன், 10 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 5


ஜீவநாடி பல உண்மைகளைப் புலப்படுத்தி வைத்துவிடும்.

ஆனால் எதை எங்கு
பயன்படுத்த வேண்டுமோ அங்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இடம், பொருள், ஏவல் அறிந்து குறிப்பறிந்து வெளியிட வேண்டும்.

சித்தர்கள் பலர் சூட்சுமமாக ஜீவ நாடியில் அருள்வாக்கு சொல்லுவதால் அவர்கள்
சம்பந்தமாக ஏற்படும் சகுனங்கள், நிமித்தங்களைக் கவனித்தால்
100% துல்லிய பலன்களைச் சொல்ல முடியும்.

ஜீவ நாடியும் ஜோதிடத்தை விட்டு விலகி எதையும் சொல்வதில்லை.
மனிதனின் ஜாதக ரீதியாகவே பலன்களைச் சொல்லும்.

சித்தர்கள் சொல்வதால் கிரகங்களின் தாக்கங்களிலிருந்து தப்பிக்கின்ற வழிமுறைகளை
ஏராளமாகச் சொல்வார்கள்.

பொதுவாக ஆலய வழிபாடுகளையே
பரிகாரமாகச் சொல்வார்கள்.

ஒரு சில நேரங்களில் சில மூலிகைகளைப் பற்றியும்
அதைப் பயன்படுத்தும் வித்தையும் சொல்வார்கள்.

சில நேரங்கள் யந்திரங்கள் பற்றியும், மந்திர ஜபம் பற்றியும் சொல்வார்கள்.

நமது ஞானஸ்கந்த ஜீவ நாடியின் மணி மகுடமாக நாங்கள் கருதுவது
உபாசனை மார்க்கம்.

நெற்றியில் அடித்தது போல் வருகின்ற உபாசனை முறைகள்
உறுதியான பலன்களைத் தந்து உயர் வாழ்வை பலருக்கு தந்து
கொண்டிருக்கிறது.



கட்டுரையாக்கம்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

செவ்வாய், 9 ஜூன், 2020

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     
  


நூற்பா: 67               

புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யல்  

கோங்குஅரும்பு அன்ன  குவிமுலைக் கோதையர் 
கோங்குஅரும்பு அன்ன குவிமுலைக் கோதையர் 
மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் 
புலவர்க்கு ஆகா தனஎலாம் புலமைக்கு 
உதவா தனஎன்று உணர்வது முறையே    

இதன்பொருள்:

செம்மையான தமிழ்மொழியைக் கோங்கரும்பைப் போன்ற அழகிய தனங்களைப் பெற்ற மங்கையரின் கொஞ்சுமொழிகளை விட இனியதாகச் சில மெய்யறிஞர் தம் மனச்சாட்சியும் கடவுளும் அறியப் போற்றுவர். அத்தகையோருக்கு எவையெவை ஆகாதனவோ அவையனைத்தும் நற்புலமைக்கும் ஏலாதன ஆகும். இந்த அடிப்படையிலேயே ஒவ்வொன்றையும் இது புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யவேண்டும் என்றவாறு

விளக்கம்:

நகிற் குறிப்பால் மங்கைப் பருவமும், தீஞ்சுவைச் சொல் என்றதால் கொஞ்சுமொழியும் பெறப்பட்டன. அரசியல் ஆதாயம், பொருள் வருவாய், எளிதில் செல்வாக்கடைதல் முதலியன கருதிப் போலியாகத் தம் தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதிகளினின்றும் சத்தியமான தமிழன்பர்களைப் பிரித்துக் காட்ட “மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் புலவர்" என்றார்.

புலமை என்பது இத்தன்மைத்து இவ்வளவினது எனத்தூலமாகச் கூற இயலாதவாறு புலவர்களைச் சார்ந்தே அறியப்படுதலின் அவர்களுக்கு ஆகாதன யாவும் புலமைக்கும் ஆகாதன ஆயிற்று. தமிழ் இனிமைக்கு இவர் இதே உவமையை வேறோர் இடத்தில், “சிமிழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம் தமிழ்”என்றார்.

சிரவை ஆதீனம் திருவுளப்படி  பதிவு  புலவர். ஆ. காளியப்பன் அவர்கள், தலைவர்
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 8 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 4


ஜீவ நாடி படிப்பதற்கு எந்தத் தகவலையும் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆனால் சில நேரங்களில் நம் கேள்விக்கு உரிய பதில்களை துல்லியமாக பெற நாடி படிப்பவர் வந்து அமருபவர்களின் கேள்வியை நன்கு உள்வாங்கிக் கொண்டு பிரார்த்தனை செய்தால் 100 % பலன்கள் வருவதை அனுபவத்தில் காண்கின்றோம்.

சுருங்கச் சொல்வதென்றால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் மற்றவர்க்கு ஏற்படுவதில்லை.

அதேபோல் பலன்கள் நடக்கும் விஷயத்தில் நாடியில்
வந்த ஆலய தரிசனங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் பலன்களும் நடப்பதில்லை.

சென்ற ஜென்ம தீவினை அதிகம் உடையவர்கள் பல
ஆண்டுகள் பரிகாரங்கள் செய்கின்ற நிலைகளும் ஏற்படுகின்றன.

இது பொறுமையான
அதே சமயத்தில் உறுதியான வழிமுறை. அவசரம் கூடவே
கூடாது.

நாடி பார்த்து விட்டால் மட்டும் போதும் நாம் சும்மா இருந்தாலே நடக்கும் எனும் கருத்து ஏற்புடையதல்ல.


கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், 
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

வெள்ளி, 5 ஜூன், 2020

பணம் பட்டம் செல்வாக்கு  உள்ளவர் இயற்றியது என்பதற்காக தகுதியற்ற கவிதையை சிறந்தது  என கூறக்கூடாது

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   

நூற்பா: 65    
           
பொருட்குவை குலத்துஉயர்வு அரசு பூண்உடை
பட்டம் ஆதிய பற்றிப் புலமைக்கு 
உயர்ச்சி கூறலும் ஒவ்வா முறையே  65

இதன்பொருள்:

ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம் என்றவாறு

விளக்கம்:

முதல் நூற்பாவில் சிறந்த புலமை பழிக்கப்படுவதைத் தவறு என எடுத்துக்காட்டியவர் இதில் இழிந்த புலமை வேறு பற்பல காரணம் பற்றி வானளாவப் புகழப்படுவதையும் விளக்குகிறார். பூண்உடை உம்மைத்தொகை. இந் நிகழ்ச்சியை நாடோறும் கண்டுவருலின் விரித்தல் மிகை.
விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்;
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்னும் பழம்பாடல் இங்கு நினைவுகூரத் தக்கது.

நன்றி:

சிரவை ஆதீனம் திருவுளப்படி பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 3


ஜீவ நாடி  என்பதற்கு ஜீவனுள்ள எழுத்துக்களைத் தோன்றி மறையச் செய்யும் என்றே
பொருள் உண்டு.

ஆனாலும் எல்லா நேரங்களில் தோன்றுகின்ற எழுத்துக்களைப்
பார்த்தே படிப்பது சுலபமாக இருப்பதில்லை.

பல நேரங்களில் சுவடியைப் பிரித்த உடனேயே சரளமாகப் பாடல் வடிவில் முக்காலமும்
 வந்து விடுகின்றன.

அப்போது  எந்த எழுத்துக்களும் சுவடியில் இருப்பதில்லை.

சில நேரங்களில் வரைபடங்கள் தோன்றும். சங்கு, சக்கரம்,
மற்றும் மந்திரங்கள் போன்றவை தோன்றும். அதை வைத்து
வழிபடும் தெய்வம், செல்கின்ற ஆலயம், பரிகாரம் போன்றவற்றை
அறிந்துக் கொள்ள முடிகிறது.

சில நேரங்களில் மூச்சுவிடவே இடைவெளி தராமல் வேகமாக
பாடல்கள் வருவதும் உண்டு.

இது அத்தனையும் வந்து
அமர்பவரின் கர்ம வினைகளையும், அவர்களது குல தெய்வ அருளையும், அவர்கள் கர்ம வினைகளையும், நம்பிக்கையையும்
பொறுத்தே அமைகிறது.

கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள், 
ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.

செவ்வாய், 2 ஜூன், 2020


நன்றான கவிதையைப் பொறாமை காரணமாக குறைகூறல் தவறு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
     

நூற்பா: 65                 

மற்றோர் புலவன் வாய்த்தமிழ் மனத்திற்கு இனித்தும்
அவன்எதிர் இகழும் பொல்லான் கொடுமையைத் தெய்வம் குறிக்கும் அன்றே. 

இதன்பொருள்:

   ஒருவனின் இலக்கியப் படைப்பு தம் உள்ளத்திற்குப் பிடித்ததாக இருந்தும் அப்படைப்பாளிக்குப் பெருமை சேர்ந்துவிடுமே என்ற அழுக்காறு அல்லது வேறு சில காரணங்களால் அப்படைப்பைக் குறை கூறுகின்ற தீய குணம் படைத்தவர்களின் பொல்லாங்கை உடனே தெய்வம் குறித்துவைத்துக் கொள்ளும் என்றவாறு.

விளக்கம்:

  குறை கூறுபவனின் உள்ளமும் உரையும் தம்முள் மாறுபடுதலின் அவர் பொல்லார் எனவும், அவர்செயல் கொடுமையானது எனவும் கூறப்பட்டது. அவர்செயல் சத்தியத்திற்கு மாறுபட்டதாதலின் செய்யும் நாளிலேயே அது தெய்வத்தால் குறித்துக் கொள்ளப்படும் என்கிறார். கூறவே இதனால் தெய்வதண்டனை நேரும் என்பது பெறப்பட்டது.


நன்றி: பதிவு ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 1 ஜூன், 2020

ஜீவநாடி அருளாடல்கள் பகுதி 2


நாடியை பக்தி இல்லாதவர்க்கு உரைக்கக் கூடாது.

வக்ர புத்தியுடன் சோதித்து பார்ப்பவர்க்கும் உரைக்கக் கூடாது.

உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்க்கும் உரைக்கக் கூடாது.

அவ்விதம் உரைத்தால் உரைத்தவனுக்கும் இழுக்கு.

இங்கு படிக்கும்போது கேட்டு விட்டு வெளியே சென்று வாய்க்கு
வந்தபடி பேசுபவர்கள் எங்களுக்குத் தெரிந்தே
சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள்.

இந்த தொடரை எழுதுவதற்கே
பல முறை உத்தரவு கேட்டு சித்தர்களும், முருகப் பெருமானும் சரி என சம்மதம் தந்ததால்தான் எழுதுகிறோம்.

ஏனெனில் பல பேர் படிப்பதால்
அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள்.

அவர்களின் கசப்பான
அனுபவங்கள் நாடி மீது வெறுப்போடு இருப்பவர்கள், நம்பிக்கை அற்றவர்கள்
இதைப் பழித்துக் கூறி சித்தர்கள் சாபத்தைப் பெற நேரலாம்.

எனவே அடியேன் கேட்டுக் கொள்வது என்னவெனில் நம்பிக்கை
இல்லாதவர்கள்
இந்த தொடரைப் படிக்கவே வேண்டாம்.

நம்பிக்கையுடன் படிக்கும்போது
பல கஷ்டங்கள் தீருவதை உணர்வீர்கள்.

ஏனெனில் இந்தத் தொடரில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் சித்தர்களின் அருளால்
செதுக்கப்படுபவை

எனது அத்துனை கட்டுரைகளும் பூஜை
அறையில் தானாக
எழுதும் முறையில் (AUTO WRITTING) கிடைக்கின்ற
முத்துக்கள். 


பயன்படுத்தினால் நிச்சயம் மேன்மைகளைக் காண்பீர்கள்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!



கட்டுரையாக்கம்:
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள்,    ஸ்ரீ  ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம், அந்தியூர்.