செவ்வாய், 9 ஜூன், 2020

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     
  


நூற்பா: 67               

புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யல்  

கோங்குஅரும்பு அன்ன  குவிமுலைக் கோதையர் 
கோங்குஅரும்பு அன்ன குவிமுலைக் கோதையர் 
மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் 
புலவர்க்கு ஆகா தனஎலாம் புலமைக்கு 
உதவா தனஎன்று உணர்வது முறையே    

இதன்பொருள்:

செம்மையான தமிழ்மொழியைக் கோங்கரும்பைப் போன்ற அழகிய தனங்களைப் பெற்ற மங்கையரின் கொஞ்சுமொழிகளை விட இனியதாகச் சில மெய்யறிஞர் தம் மனச்சாட்சியும் கடவுளும் அறியப் போற்றுவர். அத்தகையோருக்கு எவையெவை ஆகாதனவோ அவையனைத்தும் நற்புலமைக்கும் ஏலாதன ஆகும். இந்த அடிப்படையிலேயே ஒவ்வொன்றையும் இது புலமைக்குத் தக்கதா அன்றா என முடிவு செய்யவேண்டும் என்றவாறு

விளக்கம்:

நகிற் குறிப்பால் மங்கைப் பருவமும், தீஞ்சுவைச் சொல் என்றதால் கொஞ்சுமொழியும் பெறப்பட்டன. அரசியல் ஆதாயம், பொருள் வருவாய், எளிதில் செல்வாக்கடைதல் முதலியன கருதிப் போலியாகத் தம் தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதிகளினின்றும் சத்தியமான தமிழன்பர்களைப் பிரித்துக் காட்ட “மனமும் தெய்வமும் அறிய வாழ்த்தும் புலவர்" என்றார்.

புலமை என்பது இத்தன்மைத்து இவ்வளவினது எனத்தூலமாகச் கூற இயலாதவாறு புலவர்களைச் சார்ந்தே அறியப்படுதலின் அவர்களுக்கு ஆகாதன யாவும் புலமைக்கும் ஆகாதன ஆயிற்று. தமிழ் இனிமைக்கு இவர் இதே உவமையை வேறோர் இடத்தில், “சிமிழலங்கார முலையார் மொழியினும் தித்திப்பதாம் தமிழ்”என்றார்.

சிரவை ஆதீனம் திருவுளப்படி  பதிவு  புலவர். ஆ. காளியப்பன் அவர்கள், தலைவர்
தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக