பணம் பட்டம் செல்வாக்கு உள்ளவர் இயற்றியது என்பதற்காக தகுதியற்ற கவிதையை சிறந்தது என கூறக்கூடாது
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
நூற்பா: 65
பொருட்குவை குலத்துஉயர்வு அரசு பூண்உடை
பட்டம் ஆதிய பற்றிப் புலமைக்கு
உயர்ச்சி கூறலும் ஒவ்வா முறையே 65
இதன்பொருள்:
ஒருவன் பெற்றுள்ள செல்வவளம், தோன்றிய குடும்பத்தின் சிறப்பு, வசிக்கும் அதிகாரமுள்ள பதவி, அணிந்துள்ள ஆடையணிகளின் ஆடம்பரம், பெற்றுள்ள விருதுகள் முதலியனவற்றில் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ மட்டுங்கருதி அவனுடைய புலமையைத் தகுதியற்றபோதும் புகழ்ந்துரைத்தல் உண்மைப் புலவனுக்குப் பொருந்தாத செயலாம் என்றவாறு
விளக்கம்:
முதல் நூற்பாவில் சிறந்த புலமை பழிக்கப்படுவதைத் தவறு என எடுத்துக்காட்டியவர் இதில் இழிந்த புலமை வேறு பற்பல காரணம் பற்றி வானளாவப் புகழப்படுவதையும் விளக்குகிறார். பூண்உடை உம்மைத்தொகை. இந் நிகழ்ச்சியை நாடோறும் கண்டுவருலின் விரித்தல் மிகை.
விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்;
விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும்; அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்; அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று” என்னும் பழம்பாடல் இங்கு நினைவுகூரத் தக்கது.
நன்றி:
சிரவை ஆதீனம் திருவுளப்படி பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக