செவ்வாய், 2 ஜூன், 2020


நன்றான கவிதையைப் பொறாமை காரணமாக குறைகூறல் தவறு

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
     

நூற்பா: 65                 

மற்றோர் புலவன் வாய்த்தமிழ் மனத்திற்கு இனித்தும்
அவன்எதிர் இகழும் பொல்லான் கொடுமையைத் தெய்வம் குறிக்கும் அன்றே. 

இதன்பொருள்:

   ஒருவனின் இலக்கியப் படைப்பு தம் உள்ளத்திற்குப் பிடித்ததாக இருந்தும் அப்படைப்பாளிக்குப் பெருமை சேர்ந்துவிடுமே என்ற அழுக்காறு அல்லது வேறு சில காரணங்களால் அப்படைப்பைக் குறை கூறுகின்ற தீய குணம் படைத்தவர்களின் பொல்லாங்கை உடனே தெய்வம் குறித்துவைத்துக் கொள்ளும் என்றவாறு.

விளக்கம்:

  குறை கூறுபவனின் உள்ளமும் உரையும் தம்முள் மாறுபடுதலின் அவர் பொல்லார் எனவும், அவர்செயல் கொடுமையானது எனவும் கூறப்பட்டது. அவர்செயல் சத்தியத்திற்கு மாறுபட்டதாதலின் செய்யும் நாளிலேயே அது தெய்வத்தால் குறித்துக் கொள்ளப்படும் என்கிறார். கூறவே இதனால் தெய்வதண்டனை நேரும் என்பது பெறப்பட்டது.


நன்றி: பதிவு ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர்  தமிழ்ச்சங்கம்

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக