வியாழன், 2 ஜூலை, 2020


ஔவைப்பிராட்டியின்  சிறப்பு

79 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

புலமை இலக்கண- மரபியல்பு 

  79 ஔவைப்பிராட்டின்  சிறப்பு

நூற்பா: 84                                
படுபலா உருள்பனை பழம்தரப் பைந்தமிழ்
பாடிய கிழவியும் பழுதுஇலா தவளே
வெட்டப்பட்ட பலா மரமும், துண்டிக்கப்பட்டு உருளும்  84

இதன்பொருள்:
பனங்கட்டையும் தளிர்த்துக் கனி தருமாறு தமிழிசைத்த ஒளவையாரும் குற்றமற்ற புலமைச் சிறப்புடையவள் ஆவாள் என்றவாறு.

விளக்கம்:
இந்நூற்பா ஒளவையார் பாடல்களாக வழங்கப்படும், “கூரிய வாளால் குறைத்திட்ட கூன்பலா”, “கூழைப் பலாத் தழைக்க”, “திங்கட்குடையுடைச் சேரனும் சோழனும் பாண்டியனும்” என்னும் தனிப்பாடல்களைப் பற்றிய வரலாறுகளை ஒட்டி எழுந்தது.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.




நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


செவ்வாய், 30 ஜூன், 2020

கந்தன் மீது கவியமுது - 1


ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

ஆறுமுக வேலவனே வானவர்க்கு மேலவனே

வண்ண மயில் வாகனனே
பக்தஜன காவலனே

சரணம் சரணம் வேல் முருகா சரணம்
சரணம் சரணம் வேல் முருகா சரணம்

ஜோதி வடிவானவனே
சுடர் ஒளி வேலவனே

கண் கண்ட தெய்வமே கலியுக கந்தனே.. சரணம் சரணம் வேல் முருகா சரணம் வேல்முருகா

அவனியில் அவனின்றி எதுவுமில்லை
அவனின்றி எதுவுமே நடப்பதில்லை

திருப்புகழ் கூறிடுமே அவன் புகழை அவனை தொழுதிட எய்திடலாம் பெரும் புகழை

பன்னிரு கைகளும் காத்தருள வேணுமய்யா
பதிணென் கண்களும் பார்த்தருள வேணுமய்யா

வேல்முருகா சரணம் வேல்முருகா
வேல் முருகா சரணம் வேல்முருகா.

சிவாயநம!


நன்றி: 
ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

திங்கள், 29 ஜூன், 2020

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்   

74 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     

 புலமை இலக்கணம் -மரபியல்பு

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்.

நூற்பா: 82     
                        
மூவகைக் கழகத்து ஐயா யிரத்து
நானூற்று முப்பத் தொன்பது புலவோர்
வாழ்ந்தனர் எனப்பகர் மாந்தர் பலரே.

பொருள்:
தலைச்சங்கத்தில் 4900 புலவர்களும் இடைச்சங்கத்தில் 490 புலவர்களும் கடைச்சங்கத்தில் 49 புலவர்களும் ஆக மொத்தம் 5439 சங்கப் புலவர்கள் முன்னாளில் தமிழாய்ந்தனர் என்று பலர் கூறுவார்கள் என்றவாறு.

விளக்கம்:
சங்கப் புலவர்களின் தொகை “நாற்பத் தொன்பது நான்கு நூறு அணைந்த தொண்ணூறு மேற்பத் தோடிவை பெருக்கிய தொகையராய் விளங்கி சூற்பட் டார்த்தெழு முகில்உறழ் சொற்றொனிப் புலவோர் ஏற்பட் டார்கண்முச் சங்கமூ டென்னுமிவ் வுலகே”1 என்னும் இவர் கருத்தேபற்றி உரைக்கப்பட்டது. இறையனார் அகப்பொருள் உரையின்படி இத்தொகை முறையே 549,59,49 ஆக மொத்தம் 657 ஆகும்.

இந்நூலாசிரியர் தாம் இதைக் கூறும் இரு இடங்களிலும் “எனப்பகர் மாந்தர் பலர்” எனவும், “என்னும் இவ்வுலகே” எனவும் பிறர் கூற்றாகவே கூறுகிறார். களவியல் உரையாசிரியரும் இச்செய்திகளைக் கூறுமிடத்து ‘என்ப’ ‘என்ப’ என்றே கூறிச் செல்கிறார். இதனால் தொல்லாசிரியர்களுக்கே முச் சங்க வரலாற்றைப்பற்றிய உறுதியானதொரு கொள்கை-தன் கூற்றாகவே ஆணித்தரமாகச் கூறுமளவில்-இல்லை என்பதை உய்த்துணரலாம். பெருந்தொகையின் 1384, 1385, 1386 ஆகிய மூன்று தனிப்பாடல்களையும் காண்க.

பதிவு: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி. சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


வெள்ளி, 26 ஜூன், 2020

  மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் 
    அருளியவர் சிவபெருமானே

73 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  


 
புலமை இலக்கணம் -மரபியல்பு     
மாணிக்க வாசகர் எழுதும்படி திருவாசகத்தையும் திருக்கோவையாரையும்
அருளியவர் சிவபெருமானே.

நூற்பா: 79     

பல்நாடு உடையவன் பாண்டி நாடே
உடையேன் என்னவந்து உரிமையோடு எழுதவும்
வாதபூர்ப் புலவன் வழங்கினன் தமிழே.

திருவாதவூரராகிய மாணிக்கவாசகர் எந்நாட்டவர்க்கும் இறைவராகிய சிவபெருமானே தென்னாடுடையவராக வந்து தாமே உரிமையோடு ஓலையில் எழுதும்படித் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார் என்றவாறு.


நன்றி: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

வியாழன், 25 ஜூன், 2020


உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

72வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   
  

புலமை இலக்கணம் - மரபியல்பு

 உயிர்ப்பதும் மடிய வைப்பதும் தமிழே

நூற்பா: 78   
                         
என்பு பெண்ணாகவும், ஈனச் சமணர்
வன்கழு ஏறவும், மறைக்கதவு அடைக்கவும்
காழியூர்ப் புலவன் கழறினன் தமிழே.

இதன்பொருள்:

சீகாழியில் தோன்றிய திருஞான சம்பந்தப் பெருமான் மயிலப்பூரில் பூம்பாவையின் எலும்புகளை மீட்டும் உயிருள்ள பெண்ணாகுமாறும், மதுரையில் எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறுமாறும், திருமறைக்காட்டில் ஆலயக்கதவு அடைபடுமாறும் தேவாரப் பதிகங்களை அருளினார் என்றவாறு.



புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம், நெறியாளர், உலகத்தொல்காப்பிய மன்றம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 24 ஜூன், 2020


தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்


 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 
  
புலமை இலக்கணம் -  மரபியல்பு

நூற்பா: 74     
            
     68. தேவர்கள் தங்களைப் புலவர் என அழைத்துக் கொண்டனர்.

பொருவரும் தமிழ்ப்பாப் புகலாப் புத்தே- ளினரும் புலவோர் 
எனும்பெயர்க்கு இச்சித்து 
அணிந்து கொண்டமை அறிவும்அம் புவியே     74

இதன்பொருள் : இணையற்ற தமிழ்க்கவிகளை இயற்றாத தேவர்களும் தாங்களும் புலவர்கள் என அழைக்கப்பட வேண்டும் என்னும் விருப்பத்தால் அப்பெயரைப் புனைந்து கொண்டார்கள் என்று அறிஞர்கள் அறிவார்கள் என்றவாறு.

விளக்கம்: புலம் என்ற சொல் அறிவு, ஐம்புலன் முதலிய பலவற்றை உணர்த்தும் ஒரு பலபொருள் ஒரு சொல் ஆகும். புலவர் என்ற சொல் அறிவை உடையவர்கள் என்ற பொருளில் கவிஞர்களையும், ஐம்புல இன்பங்களையும் ஆரத் துய்ப்பவர்கள் என்ற பொருளில் தேவர்களையும் சுட்டும். பாப் புனைதலாகிய புலமை இல்லாதபோதும் அவர்கள் அப் பெயரை அணிந்து கொண்டனர்; இது அத்தொழிலின் சிறப்பைப் காட்டுகிறது என்பது இவர் கருத்து. இது யுத்தி வாதம்.


புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி:சிரவையாதீனம்  தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

திங்கள், 22 ஜூன், 2020


வாணியும் தமிழ்ப் புலவரே

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்   

புலமை இலக்கணம்-மரபியல்பு

 நூற்பா: 73 

67.வாணியும்  தமிழ்ப் புலவரே 
வெண்மலர்க் கமல மீதுவீற் 
றிருந்து எவர் எவர் கவிகளும்
என்னது என்னும் வெண்பா
வொன்று விளம்பினள் அன்றே 
நாவின் கிழத்தியும் “நாடா முதல்” என.

இதன்பொருள்:

வெள்ளைத்தாமரையில் இருந்துகொண்டு இவ்வுலகில் யாரெல்லாம் கவிதை புனைந்தாலும் அவை யாவும் என்னுடையதே எனக்கூறும் கலைமகளும், “நாடா முதல்” எனத் தொடங்கும் வெண்பாவைப் பாடினாள் என்றவாறு.


விளக்கம்:
“நாடா முதல்நான் மறைநான் முகன்நாவிற்
பாடா இடைப்பா ரதம்பகர்ந்தேன் --கூடாரை
எள்ளுவன் மீன்உயர்த்த ஏந்துஇலைவேல் வேந்தனே
வள்ளுவன் வாயதுஎன் வாக்கு” 

எனும் வெண்பாவை நினைந்து கூறியது இது. இதில் வேதம், பாரதம், திருக்குறள் யாவும் யான் பாடினேன் என வாணி கூறுவதாக அமைந்துள்ளமை காண்க.

நன்றி பதிவு: ஆ.காளியப்பன் தலைவர், தொல்காப்பியர் தமிழ்சங்கம்.



நன்றி : சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.