திங்கள், 29 ஜூன், 2020

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்   

74 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்     

 புலமை இலக்கணம் -மரபியல்பு

சங்கம் அமைத்து   தமிழ் வளர்த்த புலவர்கள்.

நூற்பா: 82     
                        
மூவகைக் கழகத்து ஐயா யிரத்து
நானூற்று முப்பத் தொன்பது புலவோர்
வாழ்ந்தனர் எனப்பகர் மாந்தர் பலரே.

பொருள்:
தலைச்சங்கத்தில் 4900 புலவர்களும் இடைச்சங்கத்தில் 490 புலவர்களும் கடைச்சங்கத்தில் 49 புலவர்களும் ஆக மொத்தம் 5439 சங்கப் புலவர்கள் முன்னாளில் தமிழாய்ந்தனர் என்று பலர் கூறுவார்கள் என்றவாறு.

விளக்கம்:
சங்கப் புலவர்களின் தொகை “நாற்பத் தொன்பது நான்கு நூறு அணைந்த தொண்ணூறு மேற்பத் தோடிவை பெருக்கிய தொகையராய் விளங்கி சூற்பட் டார்த்தெழு முகில்உறழ் சொற்றொனிப் புலவோர் ஏற்பட் டார்கண்முச் சங்கமூ டென்னுமிவ் வுலகே”1 என்னும் இவர் கருத்தேபற்றி உரைக்கப்பட்டது. இறையனார் அகப்பொருள் உரையின்படி இத்தொகை முறையே 549,59,49 ஆக மொத்தம் 657 ஆகும்.

இந்நூலாசிரியர் தாம் இதைக் கூறும் இரு இடங்களிலும் “எனப்பகர் மாந்தர் பலர்” எனவும், “என்னும் இவ்வுலகே” எனவும் பிறர் கூற்றாகவே கூறுகிறார். களவியல் உரையாசிரியரும் இச்செய்திகளைக் கூறுமிடத்து ‘என்ப’ ‘என்ப’ என்றே கூறிச் செல்கிறார். இதனால் தொல்லாசிரியர்களுக்கே முச் சங்க வரலாற்றைப்பற்றிய உறுதியானதொரு கொள்கை-தன் கூற்றாகவே ஆணித்தரமாகச் கூறுமளவில்-இல்லை என்பதை உய்த்துணரலாம். பெருந்தொகையின் 1384, 1385, 1386 ஆகிய மூன்று தனிப்பாடல்களையும் காண்க.

பதிவு: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி. சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


1 கருத்து: