புதன், 19 ஆகஸ்ட், 2020

கொலை புலையை தனது புலமை ஆற்றலால் போக்குபவன் கடவுளுக்குச்சமம்

126 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 126   கொலை புலையை தனது புலமை ஆற்றலால் போக்குபவன் கடவுளுக்குச்சமம்

நூற்பா: 130                               

கொலைபுலை எனும்இரு கோதும் கொதுகுறழ்

சிறிதும் இன்றித் தீர்தரப் புலமை

நடவு வானை நரன்எனற்கு இசையாப்

புந்தி யாளரும் பூதலத்து உளரே

இதன்பொருள்: பிற உயிர்களைக் கொல்லல், புலால் உண்ணல் எனப்படும் இரு பெரிய பாவங்களும் இந்நிலவுலகில் ஒரு கொசுவளவு கூட மீதமில்லாமல் முற்றிலும் அழிந்தொழியும்படித் தன் புலமை ஆற்றலால் செய்பவனைக் கடவுளுக்கு இணையானவன் எனக்கூறும் கருணைமிக்க அறிஞர்களும் இருப்பர் என்றவாறு.

விளக்கம்: “நரன் எனற்கு இசையா” என்றதால் கடவுள் என்பது பெறப்பட்டது. “கல்விப் பெரும்பயன் கருணை என்னும் நல்விற்பனனே நாவலர்க்கு இறையே” என்பார். இவர். எதிர்காலத்தில் இத்தகையதோர் புலவன் தோன்ற வேண்டும் என்னும் தம் ஆழமான ஆசையை இந் நூற்பாவில் வெளியிடுகிறார். இக்கருத்து இவரால் “எந்தநலம் இல்லார் எனினும் இரக்கம் என்னும் செந்தகை ஒன்று எய்தில் அவர் தேவர்க்கும் முந்தறிஞர். என்னத் தெளிந்தோன் எவனோ அவன்கொடுங்கோன். மன்னர்க்கு எமன்ஆகு வான்”1 என வேறோரிடத்தும் கூறப்பட்டுள்ளது, 

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,  கௌமாரமடாலயம், கோவை.

  

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

 தணல் புனலிட்ட நூல்களை மீட்க வல்லார் வணக்கத்திற்கு உரியர்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 125  தணல் புனலிட்ட நூல்களை மீட்க வல்லார் வணக்கத்திற்கு உரியர், 

நூற்பா: 129                               

புணரி ஆதிய புனலினும் கனலினும்

யான்ஓர் நிமித்தத்து இட்ட பாடல்

தரத்தகும் புலவன் யாவன் எனினும்

அவன்பத மலர்த்துணை அமரும் என் சிரத்தே.

இதன் பொருள்: இந்நூலாசிரியனாகிய) யான் முருகப்பெருமான்மீது கொண்ட ஊடல் காரணமாகக் கடல் முதலிய நீர்நிலைகளிலும் தீயிலும் இட்டழித்த என்னுடைய படைப்புகளையும் மீட்டுத் தரவல்ல புலவர் யாரோ அவர் என் வணக்கத்திற்கு உரியவர் என்றவாறு,

விளக்கம்: இவர் தாம் இயற்றிய கவிதைகள் அடங்கிய சுவடிகள் பலவற்றைத் தாமே அழித்து விட்டதை இந்நூற் சிறப்புப் பாயிரத்தும் (செய்யுள் 5) கூறினார். தேவாரம், திருப்புகழ்ப் பாக்களைப் போலவே தன்னாலேயே அழிந்த தன் நூல்களும் மீளவேண்டும் என விழைகிறார். இந்த நூல்களை இவர் குறிப்பிடுவதை மறைந்துபோன ஆயிரக்கணக்கான மற்ற நூல்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம்.  

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 12 ஆகஸ்ட், 2020

ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 124  ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும்

நூற்பா: 128                              

குலவுதென் மதுரைக் கோவில் வாவிப்

பலகைஓர் புலவன் பார்க்கவந் தமையால்

கொள்ளத் தக்கவர் கொளத்தகும் அன்றே.

இதன்பொருள்: மதுரை ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மிகத் தொன்மையான சங்கப் பலகை பொய்யாமொழிப் புலவர் கண்காண நெடுநாள் கழித்து மிதந்து வந்ததுண்டு எனவே தகுதி உடையவர்கள் தோன்றினால் இதேபோல முன்னாளில் அழிந்து விட்டதாகக் கூறப்படும் நூல்களும் மீண்டும் தோன்றலாம் என்றவாறு.

விளக்கம்: ஒரு நூல் இயற்றப்பட்டுவிட்டால் அதன் ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும் என்பது இவர் நம்பிக்கை. சங்க காலத்துச் சங்கப் பலகை பல காலம் கழித்து மீண்டும் பொய்யாமொழிப் புலவருக்குக் காட்சியளித்ததைப்போல இந்நூல்களும் தகுதி மிக்க அடியார் வழியாகத் தோன்றக்கூடும் என்கிறார். பாண்டியன் எதிரில் பொய்யாமொழிப் புலவர், “பூவேந்தர் முன்போல் புரப்பார் இலைஎனினும் பாவேந்தர் உண்டுஎன்னும் பான்மையால் கோவேந்தன் மாறன் அறிய மதுரா புரித்தமிழோர் வீறு அணையே சற்றே மித”2 என்னும் வெண்பாப் பாடினார். ‘அதுவிளம்பலும் அனைவரும் காண அம்மணை மிதந்திட்டது”3 என்பது ஒரு வரலாறு.


நன்றி: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

சனி, 8 ஆகஸ்ட், 2020

 உண்மைப் புலவர்களின் நடுநிலை

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

 புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை) 118

  

நூற்பா: 122                                 

நடுநிலை அனைத்தும் நாமகள் போலும்

கவிஞர்தம் உளத்தில கவின்தரும் அன்றே

ஒருபாற் கோடாமைடாகிய நடுநிலையில் மாண்புகள் யாவும் முற்றிலுமாகக் கலைமகளுக்கு இணையாக உண்மைப் புலவர்களின் மனத்தகத்தே தாமே தோன்றி நிலைபெற்று விளங்கும் என்றவாறு.

 மெய்ப் புலவர்கள் உளத்தில் கவின்தரும் என்றதனானே அருத்தாபத்தியாகப் போலிப்புலவர் நடுநிலைச்சிறப்பை உணரார் என்பது பெறப்பட்டது உளத்தில் கவின்தரும் என்றதனால் அதை வார்த்தைகளால் விரித்துக் கூறவேண்டா என்பதாயிற்று.

இத்துடன் இப்பிரிவு நிறைவு பெறுகிறது.


நன்றி: பதிவு  புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.


வியாழன், 6 ஆகஸ்ட், 2020

    தோற்றவன் காதை அறுத்தல்    
     பழைய வழக்கம்


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை )

116 தோற்றவன் காதை அறுத்தல் பழைய வழக்கம்.
  
நூற்பா: 121    
                         
வெண்பாத் தோல்வியில் விருது இழப்பதுவும்
வண்ணத் தோல்வியில் வார்செவி இழப்பதும்
பழமை யாம்எனல் பல்லோர் வழக்கே.

இதன் பொருள்:

வெண்பாவின் அடிப்படையில் ஏற்பட்ட போட்டியில் தோல்வியடைந்த புலவன் தான் அதுவரை பெற்றிருந்த சிறப்புப் பட்டங்கள், பல்லக்கு முதலிய விருதுகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும், அதேபோல வண்ணப் போட்டியில் ஒருவன் தோல்வியுற்றால் அவன் காதுகள் அரியப்பட்டுவிடும், இது பண்டைய மரபு எனப் பலர் கூறுவர் என்றவாறு.

காது கொய்தல் பற்றி இந்நூல் 684, 685 நூற்பா உரைகளில் கூறப்பட்ட செய்திகளை இங்கும் இணைத்துக் காண்க.  

நன்றி:
புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.




நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

புதன், 5 ஆகஸ்ட், 2020

வீணா தாரிணி ஞான வாகினி

நீலசரஸ்வதி அருளால் மலர்ந்த பாடல்

வீணாதாரிணி ஞானவாகினி
வேதங்கள் புகழ்ந்திடும் கமலவாணி சகலகலாவல்லி (வீணாதாரணி)

உலகுயிர் அனைத்திற்கும் மதி தனை வழங்கிடும்

ஆதிசக்தியின் அம்சமாய் விளங்கிடும்
ஆயகலைகளின் நித்யவாசினி
பரமபவித்ர வித்யாதரி(வீணாதாரனி)

தேவாதி தேவர்கள் போற்றிடும் ஞான ரூபிணி

தவமுனிவர்கள் போற்றிடும்
திரிபுவனதாரிணி

நான்முகன் நாவிலும் தாமரை பூவிலும் அமர்ந்தருளும் அமுதமே

எட்டுத்திக்கிலும் சுடர்ஒளியாக உதித்தருளும் குமுதமே

மலர் திருவடி போற்றி பணிந்திட அருள்மழை பொழியும் ..(வீணா)..

சிவாயநம.

ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கௌமாரபீடம் பக்தர்,
ராஜா@ஈஸ்வர்
தருமபுரி.

சனி, 1 ஆகஸ்ட், 2020

நடுவர் நல்லது கெட்டதை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும்


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்      
            புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( நடுநிலை)

     110  நடுவர் நல்லது கெட்டதை உணர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

நூற்பா : 115                                                                                                                                                                                                                          
நன்றிடை தீதும் தீதிடை நன்மையும் 
ஒன்றுமாறு உணர்வோர்  ஒவ்வோன் புலவனே
எந்த ஒரு நல்ல பொருளிடத்தும் சில தீய பண்புகளும், எத்தகைய தீய பொருளிடத்தும் சில நல்ல குணங்களும் இயல்பாக விரவியே இருக்கும்., ஆனால் இதை உள்ளபடி உணர்வோர் ஒரு சில அறிஞரே என்றவாறு

முற்றிலும் நல்ல பொருள் அல்லது மனிதர் என்றோ, அவ்வாறே அனைத்து வகையாலும் தீயபொருள் அல்லது மனிதர் என்றோ இல்லை, எங்கும் இரண்டும் விரவியே காணப்படும், இது பற்றியே,. “குணம்நாடிக் குற்றமும் நாடிஅவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்” என்றார் வள்ளுவப் பெருந்தகை.

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.