திங்கள், 17 ஆகஸ்ட், 2020

 தணல் புனலிட்ட நூல்களை மீட்க வல்லார் வணக்கத்திற்கு உரியர்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 125  தணல் புனலிட்ட நூல்களை மீட்க வல்லார் வணக்கத்திற்கு உரியர், 

நூற்பா: 129                               

புணரி ஆதிய புனலினும் கனலினும்

யான்ஓர் நிமித்தத்து இட்ட பாடல்

தரத்தகும் புலவன் யாவன் எனினும்

அவன்பத மலர்த்துணை அமரும் என் சிரத்தே.

இதன் பொருள்: இந்நூலாசிரியனாகிய) யான் முருகப்பெருமான்மீது கொண்ட ஊடல் காரணமாகக் கடல் முதலிய நீர்நிலைகளிலும் தீயிலும் இட்டழித்த என்னுடைய படைப்புகளையும் மீட்டுத் தரவல்ல புலவர் யாரோ அவர் என் வணக்கத்திற்கு உரியவர் என்றவாறு,

விளக்கம்: இவர் தாம் இயற்றிய கவிதைகள் அடங்கிய சுவடிகள் பலவற்றைத் தாமே அழித்து விட்டதை இந்நூற் சிறப்புப் பாயிரத்தும் (செய்யுள் 5) கூறினார். தேவாரம், திருப்புகழ்ப் பாக்களைப் போலவே தன்னாலேயே அழிந்த தன் நூல்களும் மீளவேண்டும் என விழைகிறார். இந்த நூல்களை இவர் குறிப்பிடுவதை மறைந்துபோன ஆயிரக்கணக்கான மற்ற நூல்களுக்கும் பொருத்திக்கொள்ளலாம்.  

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: