புதன், 19 ஆகஸ்ட், 2020

கொலை புலையை தனது புலமை ஆற்றலால் போக்குபவன் கடவுளுக்குச்சமம்

126 வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 126   கொலை புலையை தனது புலமை ஆற்றலால் போக்குபவன் கடவுளுக்குச்சமம்

நூற்பா: 130                               

கொலைபுலை எனும்இரு கோதும் கொதுகுறழ்

சிறிதும் இன்றித் தீர்தரப் புலமை

நடவு வானை நரன்எனற்கு இசையாப்

புந்தி யாளரும் பூதலத்து உளரே

இதன்பொருள்: பிற உயிர்களைக் கொல்லல், புலால் உண்ணல் எனப்படும் இரு பெரிய பாவங்களும் இந்நிலவுலகில் ஒரு கொசுவளவு கூட மீதமில்லாமல் முற்றிலும் அழிந்தொழியும்படித் தன் புலமை ஆற்றலால் செய்பவனைக் கடவுளுக்கு இணையானவன் எனக்கூறும் கருணைமிக்க அறிஞர்களும் இருப்பர் என்றவாறு.

விளக்கம்: நரன் எனற்கு இசையா என்றதால் கடவுள் என்பது பெறப்பட்டது. “கல்விப் பெரும்பயன் கருணை என்னும் நல்விற்பனனே நாவலர்க்கு இறையே” என்பார். இவர். எதிர்காலத்தில் இத்தகையதோர் புலவன் தோன்ற வேண்டும் என்னும் தம் ஆழமான ஆசையை இந் நூற்பாவில் வெளியிடுகிறார். இக்கருத்து இவரால் “எந்தநலம் இல்லார் எனினும் இரக்கம் என்னும் செந்தகை ஒன்று எய்தில் அவர் தேவர்க்கும் முந்தறிஞர். என்னத் தெளிந்தோன் எவனோ அவன்கொடுங்கோன். மன்னர்க்கு எமன்ஆகு வான்”1 என வேறோரிடத்தும் கூறப்பட்டுள்ளது, 

நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.


நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,  கௌமாரமடாலயம், கோவை.

  

1 கருத்து: