புதன், 12 ஆகஸ்ட், 2020

ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும்

வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்  

   புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.(எதிர்நிலை) 

 124  ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும்

நூற்பா: 128                              

குலவுதென் மதுரைக் கோவில் வாவிப்

பலகைஓர் புலவன் பார்க்கவந் தமையால்

கொள்ளத் தக்கவர் கொளத்தகும் அன்றே.

இதன்பொருள்: மதுரை ஆலயத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மிகத் தொன்மையான சங்கப் பலகை பொய்யாமொழிப் புலவர் கண்காண நெடுநாள் கழித்து மிதந்து வந்ததுண்டு எனவே தகுதி உடையவர்கள் தோன்றினால் இதேபோல முன்னாளில் அழிந்து விட்டதாகக் கூறப்படும் நூல்களும் மீண்டும் தோன்றலாம் என்றவாறு.

விளக்கம்: ஒரு நூல் இயற்றப்பட்டுவிட்டால் அதன் ஏட்டுப் பிரதி அழிந்தாலும் ஒலிவடிவம் நாத தத்துவத்திலே நிலைத்திருக்கும் என்பது இவர் நம்பிக்கை. சங்க காலத்துச் சங்கப் பலகை பல காலம் கழித்து மீண்டும் பொய்யாமொழிப் புலவருக்குக் காட்சியளித்ததைப்போல இந்நூல்களும் தகுதி மிக்க அடியார் வழியாகத் தோன்றக்கூடும் என்கிறார். பாண்டியன் எதிரில் பொய்யாமொழிப் புலவர், “பூவேந்தர் முன்போல் புரப்பார் இலைஎனினும் பாவேந்தர் உண்டுஎன்னும் பான்மையால் கோவேந்தன் மாறன் அறிய மதுரா புரித்தமிழோர் வீறு அணையே சற்றே மித”2 என்னும் வெண்பாப் பாடினார். ‘அதுவிளம்பலும் அனைவரும் காண அம்மணை மிதந்திட்டது”3 என்பது ஒரு வரலாறு.


நன்றி: புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.



நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

1 கருத்து: