ஒரு 70 வயதான பெரியவர் தனது பேரனுக்கு நாடி கேட்டதை சென்ற
இதழில் எழுதியிருந்தேன். தனது பேரனுக்கு மிகப் பிரமாதமான முறையில்
ஜீவ நாடியில் அருள்வாக்கு 100% அப்படியே துல்லியமாக வந்ததால்
தனக்கும் படிக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார் பெரியவர். சரி
முருகனது விருப்பம் என்று சுவடியைப் பூஜித்துப் பிரித்தேன். பின்வரும்
பாடல் வந்தது.
முன் ஜென்ம தொடர்புடைய
முருகனது பக்தன்
முருகனுக்கு ஆலயம்
முழு அளவில் அமைக்க
முழுத் திட்டம் வெற்றியாகும்
முன்னவன் மூத்தவன்
முந்தி பூஜை கொள்பவன்
முழுமுதற் கடவுளாம்
மூஷிக வாகனன் தனக்கு
முதன்மையாய் ஆலயம்
முதலிலே கொண்டாய்
முன்னர் மூஷிகமும் உண்டு
முள்செடியில் நீலநிறப் பூ உண்டு
முக்கியமாய் நீர்த்தேக்கம் உண்டு
மூவான திசையிலும்
முதன்மையாய் குருவுண்டு
முக்கிய துர்க்கை உண்டு
முந்தி வழிபடும் குந்தத்திற்கு
முன்னே வழியில்லையே ஏன்?”
இதைப் படித்த பின்பு அதிர்ந்து போனேன். வயதில் மூத்தவராக
இருந்தாலும் கண்ணீர் மல்கினார். போற்றினார். புளங்காயிதம் அடைந்து
புத்துணர்ச்சி கொண்டு குதூகலித்தார். இப்படியும் நடக்குமா? என்று
எண்ணி எண்ணி உவகைக் கொண்டார்.
காரணம் இவர் ஒரு ஆலயம் கட்டியிருக்கிறார். அதிலும் குறிப்பாக
முருகன் ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்து
வந்திருக்கிறார். ஆனால் அதற்கு வழி கிட்டவே இல்லை. எனவே முதலில்
விநாயகருக்கு அதுவும் வலம்புரி விநாயகருக்கு ஆலயம் கட்டி அதற்கு
முன்பு மூஷிக வாகனம் பிரதிஷ்டை செய்து வலப்புறம் தட்சிணாமூர்த்தி,
பின்புறம் விஷ்ணு, இடப்புறம் துர்க்கை என கோஷ்ட தெய்வங்களை
வைத்து பூஜித்து வருகிறார்.
இந்த விஷயம் எதுவுமே எனக்குத் தெரியாது. இவர் யார் எந்த ஊர்
என்று கூடத் தெரியாது. ஆனால் நீல நிறப் பூ பூக்கும், அருகில்
நீர்த்தேக்கம் உண்டு. வலம்புரி கணபதி உண்டு என்று நேரில் சென்று
பார்த்தது போல் 100க்கு 100 துல்லியமாக உரைத்ததால் அவரை
அவராலேயே நம்ப முடியாமல் திக்கு முக்காடி அந்த கந்தவடிவேலன் தன்
மீது காட்டிய கருணையைக் கண்டு மெய்சிலிர்த்தார்.
எனது அண்ணனான கணபதிக்கு கோவில் எழுப்பிவிட்டாய். நானும்
அருகில் கோவில் கொள்ள விரும்புகிறேன் என்று முருகன் உரைத்த
உடனேயே இன்னும் மெய்சிலிர்த்தார். நடு நடுங்கிப் போய்விட்டார். இது
எப்படி சாத்தியம் என்று எண்ணி முருகா முருகா என்று கூக்குரல் இட்டு
அழுதார். தொழுதார். இவரது மனைவி இவரை தேற்றினார். உடன்
இருந்தவர்களும் ஏதோ ஒரு சக்தி ஆட்கொள்வதை உணர்ந்து உவகையிலும்,
உள்ளப் பூரிப்பிலும் உற்ற துணை நீயே உமைபாலனே, கந்தனே, வேலனே
என்று துதித்தார்கள். இவர்கள் துதித்த துதியில் மகிழ்ந்த முருகப்பெருமான்
ஜீவ நாடியில் மேலும் உரைத்தார்.
“சங்கடம் நீக்கும்
சதுர்த்தியது தோறும்
சரியான பூஜை
சாயுங்காலம் கொள்”
என்று உரைத்தார் முருகப் பெருமான். அதாவது அந்த விநாயகர்
கோவிலில் சங்கடஹர சதுர்த்தி தோறும் அந்தி சாயுங்காலமான மாலை
வேளையில் பூஜை செய்து வா என்றார் முருகப் பெருமான். சுவாமி,
எனக்கு விபரம் தெரிந்தது முதல் சங்கடஹர சதுர்த்தி பூஜையை மட்டுமே
மிகச் சிறப்பாக அன்னதானத்துடன் செய்து வருகிறோம். வேறு எந்த
நாளிலும் பூஜையில்லை என்றனர். மிகச் சரி அதுவே போதும் என்று
உரைத்தேன்.
அந்த ஆலயத்தில் இந்த பூஜை மட்டுமே நடப்பதை முருகப் பெருமான்
நாடியில் துல்லியமாக உரைத்ததால் சந்தோஷம் இன்னும் இரட்டிப்பானது.
மேலும் உரைத்தார் முருகப் பெருமான்.
“குந்தமென ஆயுதம்
குமரனவன் என்கையில்
குதூகலமது தரும் ஆயுதம்
குவலயத்தில் இதற்கு மேலாயுதமில்லை
குந்தமெனும் வேலாயுதம் தனை
குறைவில்லா மூவிரண்டு அடியாக
கணபதிக்கு பின்புறம்
கச்சிதமாய் பிரதிஷ்டை செய்
குராவடிக் குமரனைத் தொழுது
இளையனார் வேலூர் என்ற ஊர்
உண்டங்கு சென்று அதிகார வேல் உண்டு
அர்ச்சித்து வா போதுமே
குடும்பத்தை யாம் காப்போம்
குறை நீக்குவோம் விரைவில்
கோவிலது கொள்ளுவேமே ஆசி!”
இப்போது கந்த வடிவேலன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். ஆறு
அடியில் வேல் செய்து கணபதிக்கு அதற்கு முன் அந்த வேலை
இளையனார் வேலூரில் உள்ள அதிகார வேலிடம் இட்டு பூஜித்து பின்பு
ஸ்தாபிதம் செய்ய வேண்டும். அவ்விதம் ஸ்தாபிதம் செய்து பூஜித்து
வந்தால் விரைவில் முருகப் பெருமான் கோவில் கட்ட வழி பிறக்கும்
இதைக் கேட்டதும் அந்தப் பெரியவர் முருகா உனக்குக் கோவில்
கட்டவே யாம் உயிருடன் இருக்கிறேன். எனக்கு ஆயுளையும்,
அதிசக்தியையும் தந்து நீயே உடனிருந்து நடத்த வேண்டும் என்ற
கோரிக்கையை வைத்தார். முருகப் பெருமான் ஆசி என்றார்.
யாரோ ஒருவர் வந்து அமர்கிறார் உனக்கு அது நடக்கும், இது
நடக்கும் என்று சொல்லாமல் உள்ளது உள்ளபடி கூறி உமைபாலன் கந்தன்
ஜீவ நாடியில் நெற்றியடி அடித்துவிட்டார். ஜாதகம் பார்க்கவில்லை, இராசி,
நட்சத்திரம் கேட்க வில்லை. நவ கிரங்களையும் ஆய்வு செய்யவில்லை.
திசா, புத்தி கணிக்கவில்லை. காரணம் இதில் எனது ஜோதிடத் திறமை
எதையும் நான் கையாளவில்லை. ஒரு மீடியமாக அமர்ந்து சுவடியில்
என்ன வருகிறதோ அதை மட்டுமே படித்தேன். ஜாதக ஆராய்ச்சி
செய்திருந்தால் கூட இவ்வளவு துல்லியமாக வருமா? என்பது சந்தேகமே.
எனவேதான் மனித சக்திக்கு மேற்பட்ட அமானுஷ்ய சக்திகளை மக்கள்
பெரிதும் விரும்புகின்றனர். பெரியவர் பூரிப்புடன் மரியாதை செய்து
வணங்கி விடைபெற்றார்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”
Arputham, Miga Arputham.
பதிலளிநீக்குஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!
பதிலளிநீக்குதங்களுடைய விலாசம், கைபேசி எண் தெரிவிக்கவேண்டுகின்றேன்.
பதிலளிநீக்குVanakkam, will you please provide your contact details.
பதிலளிநீக்கு