தைப்பூசம் என்றால் என்ன?
தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது?
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். இதனை உத்ராயண புண்ணிய காலம் என்பர். இவர் இந்த மாதத்தில் மகரராசியில் இருக்கிறார். சக்தியின் அம்சமாக திகழ்பவர் சந்திரன். தைப்பூச நாளில் சந்திரன் ஆட்சி பலத்தோடு கடகராசியில் சஞ்சரிக்கிறார். அன்று, மகரத்தில் இருக்கும் சூரியனும், கடகத்தில் இருக்கும் சந்திரனும் ஒருவருக்கொருவர் பலத்தோடு பார்த்துக்கொள்வர். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? அம்பிகை சிவகாமி கண்டு களிக்க,பரம்பொருளான சிவன், நடராஜராக ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். மார்கழி திருவாதிரையில் இறைவன் தனித்து ஆடுகிறார். தைப்பூசநாளில் சிவபார்வதி இணைந்து ஆடுவதாகவும் சொல்வர். நடனமாடினால் மகிழ்ச்சி பிறக்கும். அந்த மகிழ்ச்சியில் திளைக்கும் இறைவனிடம் நாம் வேண்டியதைப் பெறலாம் என்பதால் இந்நாளை வழிபாட்டுக்குரிய நாளாக நிர்ணயித்தனர். இல்லற வாழ்வில் பெறும் இன்பத்தின் அடையாளம் குழந்தை. அம்மையப்பரான சிவபார்வதி, மகிழ்ந்திருந்து ஈன்றெடுத்த ஞானக்குழந்தை முருகன். அவ்வகையில், பெற்றோருக்குரிய தைப்பூசம் பிள்ளைக்கும் சிறப்பான நாளாக அமைந்தது. தைப்பூசநாளில் சிவபார்வதி, முருகப்பெருமானை தரிசித்து வேண்டிய வரம் பெறுவோம்.
தைப்பூச திருநாளில் சிறப்பு!
தைப்பூசம். பல ஆன்மிக அற்புதங்கள் நிறைந்த புண்ணிய தினம் இது. முதன்முதலாக நீரும், அதிலிருந்து உலகமும் தோன்றியது தைப்பூசத்தன்றுதான் என்கின்றன புராண நூல்கள். சூரபதுமனை அழிக்க ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பிரம்மவித்யா சொரூபமான வேலாயுதத்தை சக்திதேவி தந்ததும் இந்த நாளில்தான். பழநி முதலாக முருகன் திருத்தலங்கள் தைப்பூசம் வெகுவிசேஷம். தாமிரபரணியின் கரையில் தவமிருந்த ஸ்ரீகாந்திமதிக்கு நெல்லையப்பர் அருள்பாலித்த திருநாளும் இதுவே. தைப்பூசத்தன்று நெல்லைப்பர் கோயில் விழாக்கோலம் காணும்.
திருஞானசம்பந்தர் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்தை குறிப்பிட்டு பதிகம் பாடியிருக்கிறார். இங்கு தைப்பூசத்தை ஒட்டிய பவுர்ணமியன்று நடக்கும் தெப்பத்திருவிழாவில் சிவபார்வதியுடன், சிங்காரவேலரும் எழுந்தருளுகின்றார். அன்று கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.தைப்பூச திருநாளில்தான் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்பித்ததாக விவரிக்கிறது மயிலாப்பூர் தலபுராணம்.
பூச நட்சத்தரத்தின் பிரதான தேவதை குரு பகவான். ஆகவே, தைப்பூசத்தன்று புனித தீர்த்தங்களில் நீராடி குருவை வழிபட கல்வி ஞானம் பெருகும். 1872ல், தைப்பூசத்தன்று வள்ளலார் வடலூரில் ஜோதி தரிசனத்தை துவக்கினார். அன்றிலிருந்து தற்போது வரையில் இவ்விழா இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வள்ளாலர் ஜோதியில் கலந்தும் ஒரு தைப்பூசத்தில்தான். தைப்பூசத்தன்று மட்டுமே ஞான சபையில் ஏழு திரைகள் விலகிய நிலையில், ஜோதி தரிசனம் காண முடியும். அன்று காலை 6.30 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மற்றும் 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி என ஆறு நேரங்களில் ஏழு திரைகளும் நீக்கப்படும். மாத பூசம் நட்சத்திர நாட்களில் இரவு 8 மணிக்கு, ஆறுதிரைகளை மட்டும் விலக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டுவர்.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ்ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக