செவ்வாய், 31 ஜூலை, 2018

சிரவையாதீனம் இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம்-3

#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் மூன்றாம் நாளான நேற்று கீரிமலை ஆதீன குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள் நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள். அதன்பின் அன்பர்களோடு யாழ்பாணம், நல்லூர் கந்தசாமி கோயில், கீரிமலை நகுசலசுவரர் கோயில், மாவிட்டம் கந்தசாமி கோயில், நயனார் கோயில், நாகபூசணியம்மன் கோயில் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் முள்ளிவாய்கள் புதுக்குடி இருப்பு, திருகோணமலை போன்ற தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று தமிழர்களைச் சந்தித்தார்கள்...



                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                      கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

சிரவையாதீனம் இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் -2

#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் இரண்டாம் நாளில் நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள், தமிழகத்தைச் சேர்ந்த 27 அன்பர்களுடன் யாழ்பானம் நல்லை ஆதின குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள், பின்பு திருவாசக அரண்மனை, மன்னார் மாவட்டத்திலுள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் (தற்பொழுது இந்திய அரசால் திருப்பணி செய்யப்பெற்று வருகின்றது) அனுராதபுரம் புத்தர் விகாரம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டார்கள்.






                                          சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                          கௌமாரநெறி ஓங்கி வளரட்டும்!!

சிரவையாதீனம் இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம்-1


#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் (சூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4 ஆம் தேதி வரை)

வருகின்ற ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவிருக்கும், 4 ஆவது அனைத்துலக முருக பக்தர்கள் மாநாட்டிலும் இன்னும் சில ஆன்மீக நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்க #சிரவை_ஆதீன குருமகா சன்னிதானங்களின் தலைமையில் அன்பர்பெருமக்கள் இலங்கை சென்றடைந்தார்கள்


                                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                         கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

வெள்ளி, 27 ஜூலை, 2018

ஆன்மீகச் சுற்றுப்பயணம்


#ஆன்மீகச்_சுற்றுப்பயணம் (சூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4 ஆம் தேதி வரை)
வருகின்ற 2018 ஆகஸ்டு மாதம் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவிருக்கும், முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கும் #கௌமார அன்பர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம், 22.07.2018 அன்று நமது மடாலயத்தில் #சிரவை_ஆதீனகுருமகா சன்னிதானங்களின் தலைமையில் நடைபெற்றது. இந்தச் சுற்றுப்பயணதிற்கான ஏற்பாடுகளைச் செய்துவரும் #மதுரை_குமரன்_டிராவல்ஸ்_செந்தில்குமார் அவர்கள் கலந்துகொண்டு பயணத் திட்டங்கள் குறித்தும் இலங்கையில் செல்லவிருக்கும் ஆன்மீக தளங்கள் குறித்தும் விரித்துரைத்தார்.
                                      சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                      கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

வருக்கக்குறள்


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

ஞானப்பழம்


 ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.
                                           
படம்:  சூன்-5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை கெளமார மடாலய ஆதினம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் திருமடத்தின் வளாகத்தில் மடாலய பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று கள் நடவு செய்தார்.
                                                   சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                                   கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

முருகனே முதல்வன்!

பிரணவ சொரூபியான முருகப்பெருமானிடத்தில்மும்மூர்த்திகளின்
அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும்கடவுளான முகுந்தன்,
அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன்
ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள்
ஒன்றிணைந்ததே "முருகா' என்னும் திருநாமம்.
1.இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு
திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக
விளங்குகிறது.
2.அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து
அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.
3.வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை
மிகுந்த மூன்றாவது திருமுகம்.
4.நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம்
பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.
5.துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின்
ஐந்தாவது திருமுகம்.
6.தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக்
கொஞ்சிமகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.
இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு
திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.
நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள்
கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று
மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.
"சரவணபவ' என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, "குகாய நம
ஓம்' என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.
முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே மனம்ஆறும். நமது உடலில்
ஆறு விதமான ஆதாரங்கள்உண்டு. முருகப்பெருமான்இந்த ஆறுபடை
வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.
திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.
திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.
பழனி- மணிபூரகம்.
சுவாமிமலை- அநாகதம்.
திருத்தணி- விசுத்தி.
பழமுதிர்சோலை- ஆக்ஞை.
"முருகா முருகா' என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம்
அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.
முருகா சரணம்!
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.
                                    சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                    கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

முருகன் திருவுருவம் - ஒரு புரிதல்

சாதாரண மாக்களாகிய நாம் அனைவருமே 'ஜாக்ரத்' எனும் விழிப்பு, 'ஸ்வப்ன' எனும் கனவு, 'ஸுஷுப்தி' எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம். இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே 'துரிய' எனப்படும் 'தெய்வநிலை'. இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை. ஆதி சங்கரர் போன்ற மஹா புருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள். ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும், மனிதனின் உண்மையான, அடிமுடிவற்ற ஸ்வரூபம். இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது.
முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.
முருகனின் வாகனம் மயில். மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மற்றவரின் மதி மயங்கச்செய்யவல்லது. தன்னுடைய தோகை விரித்து ஆடி, அவ்வழகின் மூலம் ஒருவனை மோகம் கொள்ளச்செய்யவல்லது. மனிதன் தன்னுடைய உடல் அழகு, புத்திசாலித்தனம், மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது. அவன் தன்னைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும், புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்கைக்குள் அடைத்துக் கொள்கிறான். மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம். நீல நிறம் 'எல்லையற்ற' தன்மையை உருவகப் படுத்துகிறது. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை. தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.
முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய 'அகந்தை'. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.
முருகனின் மற்றொரு உருவம், ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம். இறைவன் பஞ்ச பூதங்கள் (அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் (five sense organs)) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான். உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான் உருவகப்படுத்துதலும் கிடையாது. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகிறது. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான்.
இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவதினை உணர்ந்து அவன் பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக
 நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.
                                         சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
                                         கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

செவ்வாய், 24 ஜூலை, 2018

சிரவையாதீனம் 49ம் ஆண்டு நாண்மங்கல விழா!


06.08.2018 தவத்திரு குமரகுருபர சுவாமிகள் 
49ம் ஆண்டு அவதார நாள் விழா!
சிரவணபுரம், #கௌமார_மடாலயம்,

அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் #ஆடிக்கிருத்திகை விழா மற்றும் நமது குருமகாசன்னிதானங்கள் முனைவர் #தவத்திரு_குமரகுருபர_சுவாமிகளின் 49 ஆம் ஆண்டு நாண் மங்கல விழா,
*இடம்: உலகப் பெருவேள்வி மண்டபம்,
#கௌமார_மடாலயம்,
*காலை 7.30 மணிக்கு குரு வழிபாடு,
*காலை 8.00 மணிக்கு திருக்கோயில் வழிபாடு
*காலை 9.30 மணிக்கு கொழு வழிபாடு
*காலை 10.00 மணிக்கு ஆடிக்கிருத்திகை சிறப்பு மகா அபிடேகம்
*மதியம் 1.00 மணிக்கு பேரொளி வழிபாடு திருவீதி உலா
அன்னம் பாலிப்பு
*இரவு 7.00மணிக்கு இந்திர விமானத் தெப்பத்திருவிழா
குருவருளும் திருவருளும் பெற அன்புடன் அழைக்கின்றோம்

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!

முருகபக்தர்கள் 4வது மாநில மாநாடு

முருகபக்தர்கள் 4வது மாநில மாநாடு
தேதி: 20-10-2018 சனிக்கிழமை மற்றும் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை
இடம்: திருநெல்வேலி




சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமார சமயம் ஓங்கி வளரட்டும்!!

வணங்குகின்றோம்!!!வரவேற்கின்றோம்!!!

ஐரோப்பிய நாடுகளில் 10 நாட்கள் ஆன்மீகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நமது சிரவை ஆதீன தவத்திரு. குருமகா சன்னிதானங்கள், குருவருளாலும், திருவருளாலும் பயணத்தை இனிதே நிறைவு செய்து  (19-07-2018) அன்று மடாலயம் திரும்பினார்கள்
                                     


சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!!

வண்ணச்சரபம் தவத்திரு. தண்டபாணி சுவாமிகள்

#தவத்திரு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுட் சிறந்தவர். தவச்சிறப்பிலும், உபாசனையிலும் உயர்ந்தவர். தமிழ்ப் பாக்களை இயற்றும் ஆற்றலை எட்டாவது வயதிலேயே கைவரப் பெற்றவர். இளமை முதல் வேற்பூசை ஆறெழுத்தருமறை செபித்தல். தியானம் இவைகளில் மூழ்கியவர்.

#செந்தமிழ் பாண்டி நாட்டில் திருநெல்வேலியிற் சைவ வேளாளர் மரபில் 28-11-1839 இல் தோன்றியவர். இவருடைய பெற்றோர்கள் செந்தினாயகம் பிள்ளை, பேச்சிமுத்தம்மாள் என்பவர்கள் ஆவர். நீண்ட நாளாக மகப்பேறின்றியிருந்த தந்தையாரின் நான்காவது மனைவியரிடம் காந்திமதியம்மையின் திருவருளால் இவர் தோன்றிய பிறகு திரு. சித்திரபுத்திரர் என்ற தம்பியும் பிறந்தார்.


#நம் சுவாமிகள் எட்டு வயதளவில் சுரண்டை என்ற ஊரில் இருந்தபோது அவ்வூர் பூமிகாத்தாள் திருக்கோயிலில் திருவிழா நடந்தது. பலருக்கும் தெரியாமல் இருந்த அத்தேவியின் பெயர் காரணத்தை கூறும் வகையில்,

அமுதம் கடையும் நாள் ஆலம் வெடித்துத்

திமுதமெனத் தியெறித்துச் சென்றது - அமுதமெனத்

தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக்

காத்ததனால் பூமிகாத் தாள்.

என்ற வெண்பாவை முதன்முதலாக இயற்றினார். முருகன் அருளால் அது முதலாகவே புதிய கவிகளை இயற்றவும், ஓலைச்சுவடிகளில் அவைகளை எழுதவும் தொடங்கினார். இங்கனம் நம் சுவாமிகள் இயற்றியவை சுமார் ஒரு லட்சமாகும். முருகன் மீதெழுந்த ஊடல் காரணமாக நீரிலும், நெருப்பிலும் இட்டு அளித்தவை போக இன்று சுமார் ஐம்பதாயிரம் பாடல்கள் எஞ்சியுள்ளன.

#சூரியன், சிவன், சக்தி, திருமால், விநாயகன், முருகன் ஆகிய அறுசமய மூர்த்திகளுக்கும், சமயாதீதமான பொதுக் கடவுளுக்கும் பரத்துவம் கூறும் முறையில் பற்பல நூல்களை இயற்றியருளியுள்ளார். சந்தப்பாடல் முதல் எந்தபாடல் ஆனாலும் ஒரே தடவையில் பாடி ஓலைச்சுவடியில் எழுதுவது இவர் வழக்கம். வரிவடிவம் கோணாமல் தனித்தனி எழுத்தாக அடித்தல் திருத்தலின்றிப் பனையோலைச் சுவடிகளில் நம் சுவாமிகள் அழகுற எழுதி வைத்திருப்பது வியப்பிற்குரியதாகும்.

#வண்ணம் என்பது அகப்பொருள் துறையில் சந்தக் குழிப்புடன் இயற்றப்படும் கவிதையாகும். இந்தயாப்பு எளிதில் இயற்ற முடியாதது. இத்தகைய அரிய வண்ணங்களை நம் சுவாமிகள் ஓசை நயத்துடன் சொற்சிதைவின்றி எளிமையாகப் பாடும் சிறப்பு நோக்கி அக்காலப் பெரும்புலவர்கள் இவரை "வண்ணச்சரபம்" என வழங்கினர். கணக்கற்ற திருப்புகழ் பாக்களை இயற்றியதால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் இளமை முதலே முருகனின் தொண்டராக விளங்கியதால் முருகதாச சுவாமிகள் என்றும், முழுநீறு பூசி, காவிச் சிற்றுடையணிந்து, விரித்த சிகை, கைத்தண்டு, உருத்திராக்க மாலை முதலியவற்றோடு விளங்கியதால் தண்டபாணி சுவாமிகள் என்றும் இவர் வழங்கப்பட்டார். பெற்றோர்களால் சூட்டப்பெற்ற இவர் இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதாகும்.
#வண்ணத்திற்கெனத் தனி இலக்கண நூல் முன்னோரால் இயற்றப்படாமை கண்டு அதற்காக “வண்ணத்தியல்பு” என்ற சிறந்த புதிய இலக்கண நூலை இயற்றினார். எழுத்து முதலாகிய ஐந்திலக்கணங்களையும் கற்பதால் உண்டாகும் புலமை எங்கனம் இருக்க வேண்டும் என்னும் புலமைஇலக்கணத்தையும் இணைத்து “அறுவகை இலக்கணம்” என்னும் நூலை இயற்றினார். திருவாமாத்தூர்த் தலபுராணத்தை வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்தருளினார்.
#தெய்வீக அருளும் புலமைச் சிறப்புமிக்க தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து 72 சருக்கங்களில் சுமார் 3,000 பாடல் கொண்ட “புலவர் புராணம்” என்னும் காவியத்தையும் பாடியருளினார். பிள்ளைத் தமிழ், கலம்பகம், அந்தாதி, விஜயம், மாலை முதலிய எல்லா வகையான பிரபந்தங்களையும் இயற்றியவர் நம் சுவாமிகள். மருத்துவ முறையை விளக்கும் முறையில் “வாகடப் பிள்ளைத் தமிழ்” ஒன்றும் அருளிச் செய்துள்ளார்.
#யாமகம், திரிபு, சிலேடை, ஏகபாதம், நீரோட்டகம் போன்ற சித்திரக் கவிகளையும் மிகப் பலவாக அருளியுள்ளார். நிரோட்டகம் என்னும் வடசொல் இதழ் குவியும் தன்மை உடையதாக இருப்பதால் அதனை இதழகல் எனப் புதுப் பெயரிட்டு அழைத்தார். இதற்கு நேர் மாறாக உதடுகள் ஒட்டியும் குவிந்தும் பிறக்கும் எழுத்துக்களை மட்டுமே கொண்ட “குவிபா” எனப்புதிய ஒரு வகை மிறைக்கவியை உண்டாக்கினார்.
#முருகப் பெருமானைக் கண்ணெதிரே தரிசிக்க விளைந்த சுவாமிகள் பாண்டிநாட்டுத் திருமலை என்னும் தலத்தில் வேண்டினார். வேண்டுகோள் நிறைவேற பெறாத ஊடலால் அங்கு மலை மேலிருந்து கீழே உருண்டார். எனினும் உடலில் சற்றும் ஊனம் இன்றித் திருவருளால் காக்கப்பட்டார். ஒரு முறை வண்ணச்சரபம் சுவாமிகள் பாண்டிச்சேரியில் இருந்த போது ஒரு திருப்புகழ் பாடினார். அன்று இரவு கந்தப்பெருமான் இவர் மனவெளியில் தோன்றி, “உன் கவிதையால் என் முகங்களில் ஒன்றே மகிழ்ந்தது; மேலும் ஐந்து நூல்கள் இயற்றாவிட்டால் விடமாட்டேன்” என்றருளிச் செய்தார். அவ்வாணையைச் சிரமேற் கொண்டு கலம்பகம் முதலிய வேறு ஐந்து பிரபந்தங்களை இயற்றினார். முருகப் பெருமானின் ஆணைப்படியே சுந்தரத்தம்மை என்ற மாதிரிசியை உருத்திராக்க மாலை அணிவித்து மனைவியாக ஏற்றார்.
#கௌமார சமயத்திற்கு உரிய பற்பல சாத்திர நூல்களையும் அருளிச் செய்தார். தன் வாழ்க்கை வரலாற்றைக் “குருபர தத்துவம்” என்ற பெயரில் பாடியிருக்கிறார். பல இசைத்தமிழ்ப் பாடல்களும், முசுகுந்த நாடகமும் இவருடைய படைப்புகளில் உள்ளன. இவ்விதம் முத்தமிழிழும் இலக்கணம், சாத்திரம், தோத்திரம், சித்திர கவி, காவியம் மொழி பெயர்ப்பு, சுயசரிதை, மருத்துவம் முதலிய பல துறைகளிலும் பற்பல நூல்களை அருளியிருக்கிறார். தவத்திரு. சுவாமிகள் தாமே பாடிய ஏகபாத அந்தாதிகளுக்கு உறை வகுத்து ஒரு சிறந்த உரையாசிரியராகவும் விளங்குகிறார்.
#உயிர்கொலை, புலால் உணவு எவ்வகையிலும் கூடாதென்று தீவிரக் கொள்கையை உடையவராகிய சுவாமிகள் நடுநாட்டுச் சிவத்தலமான திருவாமாத்தூரில் இறையருளாணையின் வண்ணம் எல்லை தாண்ட விரதத்துடன் தங்கித் தவம் புரிந்து 05-07-1898 இல் அருட்சமாதி கொண்டார். தவத்திரு. தண்டபாணி சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்களில் தலை சிறந்து விளங்கியவர் சிரவையாதீன முதல்வராகிய தவத்திரு. இராமானந்த சுவாமிகள் ஆவார்கள்.
(இக்கட்டுரை 9-12-2001 அன்று வெளியிடப்பட்ட சிரவையாதீனம் கௌமார மடாலயம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அருளாட்சி விழா சிறப்பு மலரில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது)

முருகப்பெருமானின் திருநாமங்களும் பலன்களும்

ஆறுமுகன் - கேட்டதைக் கொடுப்பார்
குகன் - ஞானத்தை நல்குவார்
குருபரன் - குருவருளை சேர்ப்பார்
குணதரன் - நற்சிந்தனையை வளர்ப்பார்
குழகன் - நல் உச்சரிப்பை நல்குவார்
குக்குடி கொடியோன் - அதிகாரம் அளிப்பார்
குறிஞ்சிக்கிழவன் - ஈகையை அளிப்பார்
கந்தன் - கருணையை நல்குவார்
கடம்பன் - நல்வாழ்க்கைத் துணையை அளிப்பார்
கார்த்திகேயன் - பாசத்தைக் கொடுப்பார்
கதிர்வேலன் - காரிய சித்தி அளிப்பார்
காங்கேயன் - பிறப்பை ஒழிப்பார்கங்கை மைந்தன் - பாவம் ஒழிப்பார்
கலையறி புலவன் - கலைஞானம் கொடுப்பார்
கௌரி புத்ரன் - புண்ணியம் நல்குவார்
சரவணபவன் - தஞ்சம் அளிப்பார்
சண்முகன் - சித்திகள் அளிப்பார்
சக்திதாசன் - சிவஞானம் கொடுப்பார்
சக்தி வேலவன் - பெற்றோரைப் பேணிடச் செய்வார்

தவத்திரு. இராமானந்த சுவாமிகள்

தவத்திரு. இராமானந்த சுவாமிகள்

#கௌமார_மடாலயம் #சிரவையாதீன_ஆதிகுருமுதல்வர்


வரலாற்றுச் சுருக்கம்:      செந்தமிழ் நாட்டின் திருமுகம் போன்ற கொங்கு நாட்டில், திருப்பேரூருக்கு வடகீழ் திசையில் குமரவேள் எழுந்தருளியுள்ள இரத்தினாசலம் என்னும் மலையைச் சார்ந்ததாய் அமைந்துள்ளது #சிரவணம்பட்டி என வழங்கும் #சிரவணபுரம்அவ்வூரில் திருமிகு. வேலப்பகவுண்டர் தம் துணைவியாராகிய ஆண்டாளம்மையுடன் இல்லறம் பேணி வந்தார். அவர்களுக்கு நீண்ட நாட்களாக மகப்பேறு வாய்க்காமையினால் இரத்தினாசல #முருகப்_பெருமானிடம் முறையிட்டு விரதம் இருந்தனர். அவர்கள் கனவில் ஆறுமுகன் தோன்றி, “அகத்திய முனிவருடைய கலையாக உங்களுக்கு ஆண்மகவு கிடைக்கும் என்று அருள்பாலித்தார்.
      அங்கனமே காளயுக்தி வருடம் புரட்டாசித் திங்கள் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை விசாக நட்சத்திரமும் வளர்பிறை சதுர்த்தியும் கூடிய நன்னாளில் (1858) காலைப் பொழுதில் நம் குருமகாசன்னிதானம் அவர்கள் அவதாரம் செய்தருளினார். தங்கள் கோரிக்கை ஈடேறிய பெற்றோர் மட்டிலா மகிழ்ச்சியடைந்து திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, பலருக்கு உணவூட்டிப் பேருவகை எய்தினர்.

       சீர்வளர்சீர் #இராமானந்த_சுவாமிகள் இளமையிலேயே கடவுள் பக்தியும் கருணையும் மிக்கவராக விளங்கினார். ஐந்தாம் வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி வாழ்க்கையிலேயே குருநாதரின் சமய நெறி நன்கு வெளிப்படத் தொடங்கியது #சிரவணம்பட்டியில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்தியின் வழிபாட்டில் பெரிதும் ஊக்கமுடையவராக இருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் தந்தையாரின் கட்டளைப்படி விவசாயத்தையும் கண்காணித்துக் கொண்டு பூசை, செபம், தியானம் என்னும் சமய நெறியில் ஈடுபட்டிருந்தார்கள்.
       தக்க பருவம் வந்தபோது உறவினர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முயன்றனர். குரு முதல்வர் அவர்களுடைய சொற்களுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை. எனினும் தவிர்க்க முடியாத தந்தையாரின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தம் இருபதாவது வயதில் ஒருவாறு இசைந்து இல்லறம் ஏற்றார்கள். ஆனாலும் சுவாமிகளுடைய திருவுள்ளம் தாமரையிலைத் தண்ணீர் போல் உலகியலில் ஒட்டாமலேயே இருந்தது.
       ஒரு நாள் சுவாமிகளின் கனவில் அவரால் வழிபடப் பெற்ற சிவலிங்க மூர்த்தி காட்சியளித்து, “உனக்கு என்ன குறை இருந்தாலும் ஒருமுறை #திருச்செந்தூருக்குச் சென்று வந்தால் நிறைவேறும்” எனக் கூறியருளினார்கள். மறுநாள், “செந்திநகர் தன்னில் வாசனே” என்ற கீர்த்தனையை இயற்றினார்கள். சுவாமிகள் யாரிடமும் கூறாமல் புறப்பட்டுத் #திருச்செந்தூருக்குசென்றடைந்தார்கள். மாலை நேரத்தில் சரியான வழி தெரியாமல் நடந்து கொண்டிருந்தபோது #முருகப்_பெருமான்ஒரு அந்தண வாலிபர் வடிவில் காட்சியளித்து, “என் பெயர் சுப்பையர்; அருகே என் தங்கை வீடு இருக்கிறது” எனக் கூறி உடன்வந்தார். குளியல், வழிபாடு முடிந்து இரவு இருவரும் துயின்றனர். நடு இரவில் நம் சுவாமிகள் கண்விழித்த போது சுப்பையரைக் காணவில்லை. சுவாமிகள் செந்தூரிலேயே சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.
       ஒருநாள் தவத்திரு. சுவாமிகள் செந்தில்நாதனிடம் தன்னை உலக மாயையிலிருந்து விடுவித்தருள வேண்டினார். அன்று செவ்வேள் ஒரு சைவச்சான்றோராகக் காட்சிதந்து அன்புடன் உரையாடினார். நம் சுவாமிகள் அப்பெரியாரிடத்தில், “அடியேனை அறிந்தவர்கள் யாரும் இல்லாத இவ்வூரில் என்னை அறிந்து உரையாடும் தாங்கள் யாரோ” என வினவினார்கள். அதற்கு அவர், நான் எப்போதும் உன்னை விட்டு நீங்காமலேயே இருக்கிறேன்; என் பெயர் சுப்பையா பிள்ளை எனக் கூறி உடனே மறைந்தார். சில நாட்களில் ஊரிலிருந்து நம் சுவாமிகளைத் தேடி சென்றவர்கள் அவரை கண்டுபிடித்து அழைத்ததாலும், திருச்செந்தூர் 
#மௌன_சுவாமிகள் கட்டளைப்படியும் இவர் சொந்த ஊர் திரும்பினார்கள்.
       #சாமக்குளம் என்ற ஊரில் வாழ்ந்திருந்த வெங்கடரமண தாசர் என்ற வேதிய அன்பரின்மூலம் நம் சுவாமிகள்  #தவத்திரு_வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகளின் பெருமையைக் கேட்டறிந்தார்கள். உடனே அவரையே தன் ஞான தேசிகராகக் கொள்ள வேண்டும் என நிச்சயித்தார். 1880 ஆம் ஆண்டில் #வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகள்திருப்பழனியில் இருப்பதை அறிந்த நம் குரு முதல்வர் அங்கு சென்று வணங்கித் தம்மை ஆட்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அக் கருணையாளரும் #ஆரெழுத்தருமறையை உபதேசித்துக் கௌமார சமய உண்மைகளை விளக்கியருளினார். சொந்த ஊருக்குத் திரும்பிய நம் குருமுதல்வர் தேசிகர் காட்டிய செந்நெறியில் வெகுவாக முன்னேறினார். பிறகு மற்றுமோர் முறை திருப்பழனியிலேயே தம் ஆசாரியன் பால் கல்லாடை (காவியுடை) முதலிய தவக்கோலம் பெற்றார்.        தந்தையாரின் மறைவுக்குப் பின் தம் நிலத்தில் தவச்சாலை அமைத்து பூசை செய்து வந்தார். 1890 ஆம் ஆண்டு #ஸ்ரீ_சித்திமகோற்கட_விநாயகர் கோயிலும்#ஸ்ரீ_தண்டபாணிக்_கடவுள் கோயிலும் அமைத்து வழிபடத்தொடங்கினார் அப்போது நடந்த அற்புதங்கள் மிகப்பலவாகும். பலர் நம் குருமுதல்வர் பால் உபதேசம் பெற்று அடியார் ஆயினர்.
        தமது ஞானதேசிகராகிய #தவத்திரு_வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகள்சமாதியடைந்த #திருவாமாத்தூரில் ஆலயம் எழுப்பியும், திருமடங்கண்டும், வழிபாடு தொடர்ந்து நடைபெற நிபந்தங்கள் ஏற்படுத்தியும் ஆவன செய்தார்கள். ஆலயத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே தனியாக மடாலயத்தையும், #கௌமார_சபையையும்தோற்றுவித்தருளினார். பல தோத்திர சாத்திரப் பாடல்களை இயற்றியருளினார்கள்.         தம் மாணவர்களில் மிகச் சிறந்து விளங்கிய #தவத்திரு_கந்தசாமி_சுவாமிகளை 1923 ஆம் ஆண்டு ஆதீனத் தலைவராக நியமித்தருளினார்கள். கொங்கு நாட்டில் கொலை புலையை அகற்றி ஆன்மநாட்டத்தில் வேட்கை கொண்ட ஒரு பெரிய அடியார் திருக்கூட்டமே நம் குரு முதல்வரால் வளரத் தொடங்கியது.
        துன்முகி வருடம் மார்கழி திங்கள் 7 ஆம் தேதி (21-12-1956) ஆயில்ய நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் தமது தவசாலையான கனகசபைக் கட்டிடத்தின் ஆசனத்தில் இருந்தபடியே மனம் ஒடுங்கிய நிட்டையிற் கூடி #முருகப்_பெருமான் திருவடிகளில் கலந்தருளினார்கள்.
       குருபக்தி, தெய்வபக்தி, ஆலய வழிபாடு, செபம், தியானம் முதலிய சாதனங்களால் மானிடப் பிறவியின் பெறற்கரிய பேறாகிய வீட்டின்பத்தைப் பெற ஊக்கத்துடன் முயலுவதே நாம் நம் குருமுதல்வருக்குச் செய்யும் உண்மையான வழிபாடாகும்.
          (29-11-1978 அன்று வெளியிடப்பட்ட சிரவையாதீனம் தவத்திரு. சுந்தர சுவாமிகள் பொன்விழா மலரிலிருந்து இக்கட்டுரை எடுத்துக்கொள்ளப்பட்டது.)