தவத்திரு. இராமானந்த சுவாமிகள்
#கௌமார_மடாலயம் #சிரவையாதீன_ஆதிகுருமுதல்வர்
வரலாற்றுச் சுருக்கம்: செந்தமிழ் நாட்டின் திருமுகம் போன்ற கொங்கு நாட்டில், திருப்பேரூருக்கு வடகீழ் திசையில் குமரவேள் எழுந்தருளியுள்ள இரத்தினாசலம் என்னும் மலையைச் சார்ந்ததாய் அமைந்துள்ளது #சிரவணம்பட்டி என வழங்கும் #சிரவணபுரம். அவ்வூரில் திருமிகு. வேலப்பகவுண்டர் தம் துணைவியாராகிய ஆண்டாளம்மையுடன் இல்லறம் பேணி வந்தார். அவர்களுக்கு நீண்ட நாட்களாக மகப்பேறு வாய்க்காமையினால் இரத்தினாசல #முருகப்_பெருமானிடம் முறையிட்டு விரதம் இருந்தனர். அவர்கள் கனவில் ஆறுமுகன் தோன்றி, “அகத்திய முனிவருடைய கலையாக உங்களுக்கு ஆண்மகவு கிடைக்கும் என்று அருள்பாலித்தார்.
அங்கனமே காளயுக்தி வருடம் புரட்டாசித் திங்கள் 29ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை விசாக நட்சத்திரமும் வளர்பிறை சதுர்த்தியும் கூடிய நன்னாளில் (1858) காலைப் பொழுதில் நம் குருமகாசன்னிதானம் அவர்கள் அவதாரம் செய்தருளினார். தங்கள் கோரிக்கை ஈடேறிய பெற்றோர் மட்டிலா மகிழ்ச்சியடைந்து திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து, பலருக்கு உணவூட்டிப் பேருவகை எய்தினர்.
சீர்வளர்சீர் #இராமானந்த_சுவாமிகள் இளமையிலேயே கடவுள் பக்தியும் கருணையும் மிக்கவராக விளங்கினார். ஐந்தாம் வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளி வாழ்க்கையிலேயே குருநாதரின் சமய நெறி நன்கு வெளிப்படத் தொடங்கியது #சிரவணம்பட்டியில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்தியின் வழிபாட்டில் பெரிதும் ஊக்கமுடையவராக இருந்தார். பள்ளிப்படிப்பு முடிந்ததும் தந்தையாரின் கட்டளைப்படி விவசாயத்தையும் கண்காணித்துக் கொண்டு பூசை, செபம், தியானம் என்னும் சமய நெறியில் ஈடுபட்டிருந்தார்கள்.
தக்க பருவம் வந்தபோது உறவினர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய முயன்றனர். குரு முதல்வர் அவர்களுடைய சொற்களுக்குச் சற்றும் செவிசாய்க்கவில்லை. எனினும் தவிர்க்க முடியாத தந்தையாரின் வற்புறுத்தலுக்கு இணங்கித் தம் இருபதாவது வயதில் ஒருவாறு இசைந்து இல்லறம் ஏற்றார்கள். ஆனாலும் சுவாமிகளுடைய திருவுள்ளம் தாமரையிலைத் தண்ணீர் போல் உலகியலில் ஒட்டாமலேயே இருந்தது. ஒரு நாள் சுவாமிகளின் கனவில் அவரால் வழிபடப் பெற்ற சிவலிங்க மூர்த்தி காட்சியளித்து, “உனக்கு என்ன குறை இருந்தாலும் ஒருமுறை #திருச்செந்தூருக்குச் சென்று வந்தால் நிறைவேறும்” எனக் கூறியருளினார்கள். மறுநாள், “செந்திநகர் தன்னில் வாசனே” என்ற கீர்த்தனையை இயற்றினார்கள். சுவாமிகள் யாரிடமும் கூறாமல் புறப்பட்டுத் #திருச்செந்தூருக்குசென்றடைந்தார்கள். மாலை நேரத்தில் சரியான வழி தெரியாமல் நடந்து கொண்டிருந்தபோது #முருகப்_பெருமான்ஒரு அந்தண வாலிபர் வடிவில் காட்சியளித்து, “என் பெயர் சுப்பையர்; அருகே என் தங்கை வீடு இருக்கிறது” எனக் கூறி உடன்வந்தார். குளியல், வழிபாடு முடிந்து இரவு இருவரும் துயின்றனர். நடு இரவில் நம் சுவாமிகள் கண்விழித்த போது சுப்பையரைக் காணவில்லை. சுவாமிகள் செந்தூரிலேயே சில நாட்கள் தங்கியிருந்தார்கள்.
ஒருநாள் தவத்திரு. சுவாமிகள் செந்தில்நாதனிடம் தன்னை உலக மாயையிலிருந்து விடுவித்தருள வேண்டினார். அன்று செவ்வேள் ஒரு சைவச்சான்றோராகக் காட்சிதந்து அன்புடன் உரையாடினார். நம் சுவாமிகள் அப்பெரியாரிடத்தில், “அடியேனை அறிந்தவர்கள் யாரும் இல்லாத இவ்வூரில் என்னை அறிந்து உரையாடும் தாங்கள் யாரோ” என வினவினார்கள். அதற்கு அவர், நான் எப்போதும் உன்னை விட்டு நீங்காமலேயே இருக்கிறேன்; என் பெயர் சுப்பையா பிள்ளை எனக் கூறி உடனே மறைந்தார். சில நாட்களில் ஊரிலிருந்து நம் சுவாமிகளைத் தேடி சென்றவர்கள் அவரை கண்டுபிடித்து அழைத்ததாலும், திருச்செந்தூர் #மௌன_சுவாமிகள் கட்டளைப்படியும் இவர் சொந்த ஊர் திரும்பினார்கள்.
#சாமக்குளம் என்ற ஊரில் வாழ்ந்திருந்த வெங்கடரமண தாசர் என்ற வேதிய அன்பரின்மூலம் நம் சுவாமிகள் #தவத்திரு_வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகளின் பெருமையைக் கேட்டறிந்தார்கள். உடனே அவரையே தன் ஞான தேசிகராகக் கொள்ள வேண்டும் என நிச்சயித்தார். 1880 ஆம் ஆண்டில் #வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகள்திருப்பழனியில் இருப்பதை அறிந்த நம் குரு முதல்வர் அங்கு சென்று வணங்கித் தம்மை ஆட்கொண்டு அருள்பாலிக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அக் கருணையாளரும் #ஆரெழுத்தருமறையை உபதேசித்துக் கௌமார சமய உண்மைகளை விளக்கியருளினார். சொந்த ஊருக்குத் திரும்பிய நம் குருமுதல்வர் தேசிகர் காட்டிய செந்நெறியில் வெகுவாக முன்னேறினார். பிறகு மற்றுமோர் முறை திருப்பழனியிலேயே தம் ஆசாரியன் பால் கல்லாடை (காவியுடை) முதலிய தவக்கோலம் பெற்றார். தந்தையாரின் மறைவுக்குப் பின் தம் நிலத்தில் தவச்சாலை அமைத்து பூசை செய்து வந்தார். 1890 ஆம் ஆண்டு #ஸ்ரீ_சித்திமகோற்கட_விநாயகர் கோயிலும், #ஸ்ரீ_தண்டபாணிக்_கடவுள் கோயிலும் அமைத்து வழிபடத்தொடங்கினார் அப்போது நடந்த அற்புதங்கள் மிகப்பலவாகும். பலர் நம் குருமுதல்வர் பால் உபதேசம் பெற்று அடியார் ஆயினர்.
தமது ஞானதேசிகராகிய #தவத்திரு_வண்ணச்_சரபம்_தண்டபாணி_சுவாமிகள்சமாதியடைந்த #திருவாமாத்தூரில் ஆலயம் எழுப்பியும், திருமடங்கண்டும், வழிபாடு தொடர்ந்து நடைபெற நிபந்தங்கள் ஏற்படுத்தியும் ஆவன செய்தார்கள். ஆலயத்திற்கு வரும் அன்பர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவே தனியாக மடாலயத்தையும், #கௌமார_சபையையும்தோற்றுவித்தருளினார். பல தோத்திர சாத்திரப் பாடல்களை இயற்றியருளினார்கள். தம் மாணவர்களில் மிகச் சிறந்து விளங்கிய #தவத்திரு_கந்தசாமி_சுவாமிகளை 1923 ஆம் ஆண்டு ஆதீனத் தலைவராக நியமித்தருளினார்கள். கொங்கு நாட்டில் கொலை புலையை அகற்றி ஆன்மநாட்டத்தில் வேட்கை கொண்ட ஒரு பெரிய அடியார் திருக்கூட்டமே நம் குரு முதல்வரால் வளரத் தொடங்கியது.
துன்முகி வருடம் மார்கழி திங்கள் 7 ஆம் தேதி (21-12-1956) ஆயில்ய நட்சத்திரம் கூடிய வெள்ளிக்கிழமையன்று மாலை 5 மணி அளவில் தமது தவசாலையான கனகசபைக் கட்டிடத்தின் ஆசனத்தில் இருந்தபடியே மனம் ஒடுங்கிய நிட்டையிற் கூடி #முருகப்_பெருமான் திருவடிகளில் கலந்தருளினார்கள்.
குருபக்தி, தெய்வபக்தி, ஆலய வழிபாடு, செபம், தியானம் முதலிய சாதனங்களால் மானிடப் பிறவியின் பெறற்கரிய பேறாகிய வீட்டின்பத்தைப் பெற ஊக்கத்துடன் முயலுவதே நாம் நம் குருமுதல்வருக்குச் செய்யும் உண்மையான வழிபாடாகும்.
(29-11-1978 அன்று வெளியிடப்பட்ட சிரவையாதீனம் தவத்திரு. சுந்தர சுவாமிகள் பொன்விழா மலரிலிருந்து இக்கட்டுரை எடுத்துக்கொள்ளப்பட்டது.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக