சாதாரண மாக்களாகிய நாம் அனைவருமே 'ஜாக்ரத்' எனும் விழிப்பு, 'ஸ்வப்ன' எனும் கனவு, 'ஸுஷுப்தி' எனும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய நிலைகளிலேயே உழல்கிறோம். இவை மூன்றையும் கடந்த உயரிய நான்காவது நிலையே 'துரிய' எனப்படும் 'தெய்வநிலை'. இந்த நிலையினை தம் வாழ்நாளிலேயே அனுபவிப்பர் இன்று யாருமில்லை. ஆதி சங்கரர் போன்ற மஹா புருஷர்கள் இத்தகைய தெய்வநிலையினை அனுபவித்தவர்கள். ஆனால் இதுவே ஹிந்து தர்மம் போதிக்கும், மனிதனின் உண்மையான, அடிமுடிவற்ற ஸ்வரூபம். இந்த துரிய நிலையினையே முருகனின் திருவுருவம் உணர்த்துகிறது.
முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.
முருகனின் வாகனம் மயில். மயிலானது தன்னுடைய அழகிய தோற்றத்தில் மற்றவரின் மதி மயங்கச்செய்யவல்லது. தன்னுடைய தோகை விரித்து ஆடி, அவ்வழகின் மூலம் ஒருவனை மோகம் கொள்ளச்செய்யவல்லது. மனிதன் தன்னுடைய உடல் அழகு, புத்திசாலித்தனம், மற்றும் அலைபாயும் மனது ஆகியவற்றின் மீதே மோகம் கொண்டுள்ளான் என்பதை மயில் உணர்த்துகிறது. அவன் தன்னைச் சுற்றியுள்ள கண்ணுக்குத் தெரியும், புரியும் விடயங்களையே சிந்தித்து தன்னை ஒரு மனித எல்கைக்குள் அடைத்துக் கொள்கிறான். மயிலின் கழுத்தின் உண்மையான நிறம் நீலம். நீல நிறம் 'எல்லையற்ற' தன்மையை உருவகப் படுத்துகிறது. எப்படி மயில் தோகை விரித்து ஆடுகையில், நம் கவனம் அதனுடைய அழகில் மயங்கி, உண்மையான நீல நிறம் புலப்படுவதில்லையோ, அதே போல் மனிதன் புற அழகினில் மயங்கி, எல்லையற்றதாகிய, தன்னுள் உறையும் ஆத்மா எனும் இறைவனை உணர முடிவதில்லை. தன்னுடைய உடல், மன, புத்தியினால் ஏற்பட்டிருக்கும் அகந்தையை அகற்றி நீல நிறமாகிய மயில் மேல் முருகன் செல்வதைப் போல தன் கவனத்தை உள்திரும்பி ஆன்மாவில் நிலைக்கச் செய்ய வேண்டிய கடமையை உணர்த்துவதே மயில் வாகனத்தின் தத்துவம்.
முருகனின் மயில் வாகனத்தின் காலடியில் கருநாகம் பிடிபட்டிருக்கும். நாகம் கொல்லப்படுவதில்லை ஆனால் காலடியில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். கருநாகம் உணர்ந்துவது ஒருவனுடைய 'அகந்தை'. நாகத்தின் விஷம் நாகத்தினை எதுவும் செய்வதில்லை. ஆனால் அது வெளிப்பட்டாலோ அதனால் ஏற்படும் ஆபத்து பேரபாயம். அதே போல் ஒருவனுடைய அகந்தை உள்ளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் அதனால் ஏதும் துன்பம் இல்லை. ஆனால் அதையே வெளிக்காட்டினால், அதனால் ஆசைகள் ஏற்பட்டு பல கெட்ட விளைவுகள் ஏற்படும். ஆகவே விஷ ஜந்துவாகிய அகந்தையை காலடியில் போட்டுக் கட்டுப்படுத்தி, புற அழகினிலிருந்து கவனத்தை உட்திருப்பினால் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்கிற தத்துவத்தினை உணர்த்துவதே மயில் வாகனம்.
முருகனின் மற்றொரு உருவம், ஷண்முகன் எனப்படும் ஆறுமுகம். இறைவன் பஞ்ச பூதங்கள் (அல்லது ஐந்து புரிதல் உறுப்புகள் (five sense organs)) மற்றும் ஒரு மனதின் வாயிலாக காட்சியளிக்கிறான். உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு எந்தவிதமான் உருவகப்படுத்துதலும் கிடையாது. மனமானது ஐந்து புரிதல் உறுப்புக்கள் மூலம் தன்னை ஒரு மனிதனாக வெளிப்படுத்துகிறது. அதனை அடக்கியாள்பவனே தன்னில் இறைவனை உணர்வான்.
இத்தகைய மேலான முருகனின் திருவுருவம் உணர்த்தும் தத்துவதினை உணர்ந்து அவன் பாதம் பணிந்து நாம் உண்மையினை உணர்வோமாக
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
கௌமார நெறி ஓங்கி வளரட்டும்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக