#தவத்திரு. வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களுட் சிறந்தவர். தவச்சிறப்பிலும், உபாசனையிலும் உயர்ந்தவர். தமிழ்ப் பாக்களை இயற்றும் ஆற்றலை எட்டாவது வயதிலேயே கைவரப் பெற்றவர். இளமை முதல் வேற்பூசை ஆறெழுத்தருமறை செபித்தல். தியானம் இவைகளில் மூழ்கியவர்.
#செந்தமிழ் பாண்டி நாட்டில் திருநெல்வேலியிற் சைவ வேளாளர் மரபில் 28-11-1839 இல் தோன்றியவர். இவருடைய பெற்றோர்கள் செந்தினாயகம் பிள்ளை, பேச்சிமுத்தம்மாள் என்பவர்கள் ஆவர். நீண்ட நாளாக மகப்பேறின்றியிருந்த தந்தையாரின் நான்காவது மனைவியரிடம் காந்திமதியம்மையின் திருவருளால் இவர் தோன்றிய பிறகு திரு. சித்திரபுத்திரர் என்ற தம்பியும் பிறந்தார்.
#நம் சுவாமிகள் எட்டு வயதளவில் சுரண்டை என்ற ஊரில் இருந்தபோது அவ்வூர் பூமிகாத்தாள் திருக்கோயிலில் திருவிழா நடந்தது. பலருக்கும் தெரியாமல் இருந்த அத்தேவியின் பெயர் காரணத்தை கூறும் வகையில்,
அமுதம் கடையும் நாள் ஆலம் வெடித்துத்
திமுதமெனத் தியெறித்துச் சென்றது - அமுதமெனத்
தீக்கடவுள் உண்டார் திருக்கண்டத் தைப்பிடித்துக்
காத்ததனால் பூமிகாத் தாள்.
என்ற வெண்பாவை முதன்முதலாக இயற்றினார். முருகன் அருளால் அது முதலாகவே புதிய கவிகளை இயற்றவும், ஓலைச்சுவடிகளில் அவைகளை எழுதவும் தொடங்கினார். இங்கனம் நம் சுவாமிகள் இயற்றியவை சுமார் ஒரு லட்சமாகும். முருகன் மீதெழுந்த ஊடல் காரணமாக நீரிலும், நெருப்பிலும் இட்டு அளித்தவை போக இன்று சுமார் ஐம்பதாயிரம் பாடல்கள் எஞ்சியுள்ளன.
#சூரியன், சிவன், சக்தி, திருமால், விநாயகன், முருகன் ஆகிய அறுசமய மூர்த்திகளுக்கும், சமயாதீதமான பொதுக் கடவுளுக்கும் பரத்துவம் கூறும் முறையில் பற்பல நூல்களை இயற்றியருளியுள்ளார். சந்தப்பாடல் முதல் எந்தபாடல் ஆனாலும் ஒரே தடவையில் பாடி ஓலைச்சுவடியில் எழுதுவது இவர் வழக்கம். வரிவடிவம் கோணாமல் தனித்தனி எழுத்தாக அடித்தல் திருத்தலின்றிப் பனையோலைச் சுவடிகளில் நம் சுவாமிகள் அழகுற எழுதி வைத்திருப்பது வியப்பிற்குரியதாகும்.
#வண்ணம் என்பது அகப்பொருள் துறையில் சந்தக் குழிப்புடன் இயற்றப்படும் கவிதையாகும். இந்தயாப்பு எளிதில் இயற்ற முடியாதது. இத்தகைய அரிய வண்ணங்களை நம் சுவாமிகள் ஓசை நயத்துடன் சொற்சிதைவின்றி எளிமையாகப் பாடும் சிறப்பு நோக்கி அக்காலப் பெரும்புலவர்கள் இவரை "வண்ணச்சரபம்" என வழங்கினர். கணக்கற்ற திருப்புகழ் பாக்களை இயற்றியதால் "திருப்புகழ்ச் சுவாமிகள்" என்றும் இளமை முதலே முருகனின் தொண்டராக விளங்கியதால் முருகதாச சுவாமிகள் என்றும், முழுநீறு பூசி, காவிச் சிற்றுடையணிந்து, விரித்த சிகை, கைத்தண்டு, உருத்திராக்க மாலை முதலியவற்றோடு விளங்கியதால் தண்டபாணி சுவாமிகள் என்றும் இவர் வழங்கப்பட்டார். பெற்றோர்களால் சூட்டப்பெற்ற இவர் இயற்பெயர் சங்கரலிங்கம் என்பதாகும்.
#வண்ணத்திற்கெனத் தனி இலக்கண நூல் முன்னோரால் இயற்றப்படாமை கண்டு அதற்காக “வண்ணத்தியல்பு” என்ற சிறந்த புதிய இலக்கண நூலை இயற்றினார். எழுத்து முதலாகிய ஐந்திலக்கணங்களையும் கற்பதால் உண்டாகும் புலமை எங்கனம் இருக்க வேண்டும் என்னும் புலமைஇலக்கணத்தையும் இணைத்து “அறுவகை இலக்கணம்” என்னும் நூலை இயற்றினார். திருவாமாத்தூர்த் தலபுராணத்தை வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்தருளினார்.
#தெய்வீக அருளும் புலமைச் சிறப்புமிக்க தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைத் தொகுத்து 72 சருக்கங்களில் சுமார் 3,000 பாடல் கொண்ட “புலவர் புராணம்” என்னும் காவியத்தையும் பாடியருளினார். பிள்ளைத் தமிழ், கலம்பகம், அந்தாதி, விஜயம், மாலை முதலிய எல்லா வகையான பிரபந்தங்களையும் இயற்றியவர் நம் சுவாமிகள். மருத்துவ முறையை விளக்கும் முறையில் “வாகடப் பிள்ளைத் தமிழ்” ஒன்றும் அருளிச் செய்துள்ளார்.
#யாமகம், திரிபு, சிலேடை, ஏகபாதம், நீரோட்டகம் போன்ற சித்திரக் கவிகளையும் மிகப் பலவாக அருளியுள்ளார். நிரோட்டகம் என்னும் வடசொல் இதழ் குவியும் தன்மை உடையதாக இருப்பதால் அதனை இதழகல் எனப் புதுப் பெயரிட்டு அழைத்தார். இதற்கு நேர் மாறாக உதடுகள் ஒட்டியும் குவிந்தும் பிறக்கும் எழுத்துக்களை மட்டுமே கொண்ட “குவிபா” எனப்புதிய ஒரு வகை மிறைக்கவியை உண்டாக்கினார்.
#முருகப் பெருமானைக் கண்ணெதிரே தரிசிக்க விளைந்த சுவாமிகள் பாண்டிநாட்டுத் திருமலை என்னும் தலத்தில் வேண்டினார். வேண்டுகோள் நிறைவேற பெறாத ஊடலால் அங்கு மலை மேலிருந்து கீழே உருண்டார். எனினும் உடலில் சற்றும் ஊனம் இன்றித் திருவருளால் காக்கப்பட்டார். ஒரு முறை வண்ணச்சரபம் சுவாமிகள் பாண்டிச்சேரியில் இருந்த போது ஒரு திருப்புகழ் பாடினார். அன்று இரவு கந்தப்பெருமான் இவர் மனவெளியில் தோன்றி, “உன் கவிதையால் என் முகங்களில் ஒன்றே மகிழ்ந்தது; மேலும் ஐந்து நூல்கள் இயற்றாவிட்டால் விடமாட்டேன்” என்றருளிச் செய்தார். அவ்வாணையைச் சிரமேற் கொண்டு கலம்பகம் முதலிய வேறு ஐந்து பிரபந்தங்களை இயற்றினார். முருகப் பெருமானின் ஆணைப்படியே சுந்தரத்தம்மை என்ற மாதிரிசியை உருத்திராக்க மாலை அணிவித்து மனைவியாக ஏற்றார்.
#கௌமார சமயத்திற்கு உரிய பற்பல சாத்திர நூல்களையும் அருளிச் செய்தார். தன் வாழ்க்கை வரலாற்றைக் “குருபர தத்துவம்” என்ற பெயரில் பாடியிருக்கிறார். பல இசைத்தமிழ்ப் பாடல்களும், முசுகுந்த நாடகமும் இவருடைய படைப்புகளில் உள்ளன. இவ்விதம் முத்தமிழிழும் இலக்கணம், சாத்திரம், தோத்திரம், சித்திர கவி, காவியம் மொழி பெயர்ப்பு, சுயசரிதை, மருத்துவம் முதலிய பல துறைகளிலும் பற்பல நூல்களை அருளியிருக்கிறார். தவத்திரு. சுவாமிகள் தாமே பாடிய ஏகபாத அந்தாதிகளுக்கு உறை வகுத்து ஒரு சிறந்த உரையாசிரியராகவும் விளங்குகிறார்.
#உயிர்கொலை, புலால் உணவு எவ்வகையிலும் கூடாதென்று தீவிரக் கொள்கையை உடையவராகிய சுவாமிகள் நடுநாட்டுச் சிவத்தலமான திருவாமாத்தூரில் இறையருளாணையின் வண்ணம் எல்லை தாண்ட விரதத்துடன் தங்கித் தவம் புரிந்து 05-07-1898 இல் அருட்சமாதி கொண்டார். தவத்திரு. தண்டபாணி சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர்களில் தலை சிறந்து விளங்கியவர் சிரவையாதீன முதல்வராகிய தவத்திரு. இராமானந்த சுவாமிகள் ஆவார்கள்.
(இக்கட்டுரை 9-12-2001 அன்று வெளியிடப்பட்ட சிரவையாதீனம் கௌமார மடாலயம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அருளாட்சி விழா சிறப்பு மலரில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக