திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம்
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
புலமை இலக்கணம் - செயல்வகை இயல்பு.( அருள்நிலை)
131 திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம்
நூற்பா134
பற்பலர் செவிகவர் பாவலன் தன்கைக்
கொடுவாள் அருணைக் கோபுரத்து இழந்து
தன்செவி ஒருவன் தரப்பெற் றானே,
இதன்பொருள்: பல புலவர்களை வாதத்தில் வென்று அவர் காதுகளை அரிந்த வில்லிபுத்தூராழ்வார், பின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரிடம் தோல்வியுற்றுத் தம் வாளையும் இழந்து மாற்றானின் கருணையினால் தம் செவிகளை இழக்காமல் தப்பினார் என்றவாறு,
விளக்கம்: இவ் வரலாறு முன்னரே உரைக்கப்பட்டது. இங்கு வில்லிபுத்தூராரின் தோல்வியைச் சுட்டிச் கூறுவதைக் கொண்டு இவ் வாசிரியருக்கு அருணகிரிநாதரிடமுள்ள அபிமான மிகுதியால் மற்றவரை இழிவாகக் கருதுகிறார் என எண்ணலாகாது, இவரைப்பற்றிப் புலவர் புராணத்தில் கூறுங்கால், “வரைதொறும் நடம்செய் வானை வழிபடும் அருணை நாதன் கரையில்சித் திரமாச் சொல்லும் கந்தன்அந் தாதிப் பாடற்கு உரைஉடன் அவன்சொல் மாட்சி ஒண்டமிழ்ப் புலவர் ஓர்வார்; திரைஉறு கரிய சிந்தைச் சிறியவர் தேறிடாரே”1 எனவே கூறுகின்றார்
அருணகிரியாரிடத்தில் வில்லிபுத்தூரார் தோற்றது தம் புலமைக் குறையாலன்று; ஆனால் சற்றும் கருணையின்றிப் பல புலவர்களின் செவிகளை அறுத்த பாவத்தால்தான் என்ற கருத்தை, “அந்தகன்போற் பற்பலர்காது அறுத்த பாவம் அமைந்தது இந்நாள் எனக்கு எனச்சொற்று ஆண்மை தீர்ந்தான்”2 எனவும் விளக்குகிறார்
திருவருள் துணை இல்லாதபோது எவ்வளவு பெரியவர்களுக்கும் துன்பம் நேரலாம் என்பதற்குச் சான்றாகவே இந்நிகழ்ச்சியும் இப் பிரிவில் இடம்பெறும் வேறு சிலவும் கூறப்படுகின்றன.
நன்றி: பதிவு புலவர் ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர், உலகத் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.