- சரணாகதி முடிவான பலனை முதலிலேயே தரும்.
நாம் ஒரு செயலை மனத்தால் நினைத்து பிறகு அதை கற்று உடலால் செய்கிறோம். மனம் நினைக்கிறது. புத்தகம் வாங்குவது எண்ணமாக மனதில் தோன்றுகிறது. உடல் கடைக்குப் போய் வாங்குகிறது. புத்தகத்தின் மீதுள்ள அக்கறை கடைக்குப் போகும் உற்சாகத்தைத் தருகிறது. இது நாம் செயல்படும் முறை.
மனம் என் எண்ணத்தை உணர்வாலும், உடலாலும் நிறைவேற்றுவதை நான் செயல்படும் முறையாகக் கொண்டுள்ளேன்.
சமர்ப்பணம், சரணாகதி எனில் மனத்தின் எண்ணத்தை ஆன்மாவுக்கும், அன்னைக்கும் தருகிறோம். மௌனமாக ஆன்மா மனத்தின் எண்ணத்தை எடுத்து அன்னையிடம் தருவது சமர்ப்பணம், சரணாகதி. அன்னையின் சக்தி சத்திய ஜீவிய சக்தியாகும். உண்மையில் அதையும் கடந்ததாகும். அங்கு காலம் இல்லை. அது காலத்தைக் கடந்த நிலை. காலத்தைக் கடந்த சக்தி எண்ணத்தை ஏற்று செயல்படுவதால் முடிவான பலன் முதலிலேயே வருகிறது. கடைக்குப் போகும் முன் அப்புத்தகம் வீட்டிற்கு வருவதைக் காண்கிறோம்.
2.அடக்கத்தால் சரணாகதி பலிக்கும், சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
நமக்கு திறமையுள்ள காரியத்தை செய்யப் பிரியப்படுகிறோம். அதை செய்யாமலிருக்க முடியாது. புதியதாக பெற்ற பயிற்சி எதுவானாலும் அதைச் செய்ய கை துடிக்கும். ஒருவர் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலை எவரும் சொல்லாதபொழுது அதைத் தெரிந்தவரால் சொல்லாமலிருக்க முடியாது. மனம் அடங்காது. தன் திறமையை சரணம் செய்வது அருளைப் பொருளாக்கும் என்கிறார் அன்னை. சரணாகதிக்கு அந்த அடக்கம் தேவை. இறைவன் முன் நாம் துரும்பு என்பதே அடக்கவுணர்வு என்பது அன்னை விளக்கம். அந்த அடக்கமில்லாமல் சரணாகதியில்லை. இது எவ்வளவு சிரமம் என்பதை அறிய வேண்டுமானால், ஓர் எண்ணம் யார் கதவைத் தட்டுகிறார்கள் என அறியும் எண்ணம் மனத்தில் எழுந்தபொழுது அதைச் சரணம் செய்ய முயன்றால் சிரமம் தெரியும். அதைச் சரணம் செய்வது யோகத்தில் முதல் அடி எடுத்து வைப்பதாகும்.
3.மனம் எதை ஏற்கிறதோ அதைத் தரவல்லது சரணாகதி.
நாம் எதையும் அதிக சிந்தனையின்றி செய்கிறோம். படிப்பு எனில், நான் SSLC படித்திருக்கிறேன். 15 வருஷமாயிற்று. இனி எனக்கு வராது என்பவர் வராது என்பதை ஏற்கிறார். அவருக்கு அது பலிக்கிறது. Ph.D. எடுத்துவிட வேண்டும் என நினைப்பவருக்கு இது பலிக்கிறது.
சிறிய உத்தியோகம், பெரிய செல்வம், கற்பனைக்கெட்டாத பதவி ஆகியவற்றை எட்டியவர்களை நெருக்கமாகத் தெரியுமானால், அவர் மனம் ஏற்றது அதனால் அவருக்குப் பலித்தது என்பது தெரியும்.
- மனம் ஏற்காவிட்டால் நிச்சயமாகப் பலிக்காது.
- மனம் ஏற்றதால் மட்டும் பலிப்பதில்லை.
- மனம் ஏற்றால், திறமைக்கும், அதிர்ஷ்டத்திற்கும் ஏற்றவாறு பலிக்கும்.
- அன்பரின் மனம் ஏற்றால் திறமையிருந்தால் நிச்சயமாகப் பலிக்கும். திறமை இல்லாதவர்க்கும் பலித்ததுண்டு.
- ஒரு காரியம் பலிக்க மனம் ஏற்பது அவசியம்.
இது முதற் பகுதி. மனம் ஏற்றுப் பலிக்கும் காலத்தில் அதற்குரிய நேரத்தில் பலிக்கும். மனம் ஏற்றபின், சரணாகதியிருந்தால் உடனே பலிக்கும். எதுவானாலும் பலிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. ஸ்ரீ அரவிந்தர் கேட்ட வரம் அளிக்கப்பட்டதால், நாம் கேட்பதெல்லாம் அதற்கு உட்பட்டது என்பதால், எதுவும் பலிக்கும். உடனே பலிக்கும்.
4. திருவுருமாற்றத்தை முதற்பலனாகத் தருவது சரணாகதி, அது அடக்கத்திற்குரியது. நாம் நல்லது வேண்டும். கெட்டது வேண்டாம் என்கிறோம். ஒரு நாணயத்தின் தலை மட்டும் வேண்டும் என்றால் நாணயமில்லை. தங்க சுரங்கத்தில் தங்கம் கனிப்பொருளாக இருக்கிறது. கனிப்பொருளை சுத்தம் செய்து, உருக்கி தங்கம் பெறவேண்டும். தங்கம் வேண்டும், கனிப்பொருள் வேண்டாம், எனில் தங்கமில்லை. ஞானம், அஞ்ஞானமானதால், இனி ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழ வேண்டும். அஞ்ஞானத்தை ஒதுக்கினால் எதிலிருந்து ஞானம் வரும்? ஞானம் வருவது தடைப்படும். ஏழ்மையை ஒதுக்கினால் செல்வம் எப்படி ஒதுக்கப்படும் எனலாம். ஏழை பணக்காரனாகாவிட்டால் நாடு ஏழையாக இருக்கும்.
5. வளராத ஆன்மா, வளரும் ஆன்மாவாக மாறியது. அதுவே சைத்திய புருஷன். சத் என்ற அகம் சத்தியம் என்ற புறமான பொழுது ஆன்மா அவற்றிடையே ஏற்பட்டது. அந்த ஆன்மாவுக்கு ஆதி, அந்தம், மாற்றம், வளர்ச்சியில்லை என்பது இந்திய மரபு. பிறப்பிலேற்பட்ட புத்தி வளராது, கர்மம் அனுபவிக்கப்பட வேண்டியது போன்றவை இவை. சச்சிதானந்தம் உலகமாக மாறி, பரிணாமத்தால் மீண்டும் சச்சிதானந்தமாகும்பொழுது ஆனந்தம் வளர்கிறது (Bliss becomes Delight) ஆன்மா வளர்கிறது என்பது ஸ்ரீ அரவிந்தம். சத், சித், ஆனந்தம் மூன்றும் முதலிலிருந்ததைவிட உயர்ந்ததாகின்றன. சிருஷ்டி, பரிணாமம் என்ற பாதைகளில் சென்ற பின் வளர்ச்சியுண்டு. பரிணாமத்தைப் பற்றி மரபு பேசுவதால் அவர்கள் வளராது என்றனர். பிரம்மம் எண்ணத்தால் உலகை சிருஷ்டித்தது என்பதால் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என்கிறார்.
6.எண்ணமே கெட்டது என்கிறார் அன்னை.
உடல் இருளாலானது. இருள் தீமை. எண்ணம் உடலில் எழுவதால் அது இருளின் வெளிப்பாடு. அதனால் எண்ணமே தீமை என்கிறார். அத்துடன் எண்ணம் பிரம்மத்தை எட்டும் என மரபுக்கு எதிராகவும் பேசுகிறார். சிருஷ்டியில் இரு அம்சங்களுண்டு.
- சத்திய ஜீவியம் சத் என்பதன் எண்ணத்தால் (Real Idea) உலகை சிருஷ்டித்தது.
- பிரம்மம் தன் எண்ணத்தால், இச்சையால் உலகை சிருஷ்டித்தது என்கிறார் (Self-Conception).
- குறைய முடியாததும், வளர முடியாததும் பிரம்மம்.
குறைய முடியாதது பிரம்மம் என்பதை அக்ஷய பாத்திரம் மூலம் அறியலாம். வளர முடியாது என்றால் எப்படிப் புரியும். பூவுலகம் சலனத்திற்கு உட்பட்டது. அது சலனத்தால் எடுப்பதால் குறையும், நிறையும். பிரம்மம் சலனத்தால் பாதிக்கப்படாதது என்பதால் குறைவும், நிறைவும் அதற்கில்லை. பொருத்தமான உதாரணம் சொல்வது சிரமம். மகாத்மா காந்தி, ஐன்ஸ்டீன் போன்றவர்களை உலகம் தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது. குறை சொல்வதால் அவர்கள் குறையப் போவதில்லை. நோபல் பரிசால் உயரப் போவதில்லை. அவர்கள் மனித நிலையைக் கடந்தவர் என்பதுபோல், பிரம்மம் மனித நிலையைக் கடந்தது. பிரம்மம் குறையாது, வளராது என்ற கருத்தை மனம் கணிதத்தில் ஏற்பதுபோல் ஏற்க வேண்டும். மேலும் ஜடத்திலும் அதை ஏற்பது அவசியம். முக்கியமாகப் பணம் செலவு செய்தால் பெருகும் என்ற சொந்த அனுபவம் பிரம்மத்தை ஜடத்தில் அறிய உதவும். பணம் செலவு செய்தால் பெருகும் என்ற அனுபவம் தருவது பணமில்லை, பிரம்மம். பிரம்மத்தை மனிதன் திட்டவட்டமாக, தெளிவாக, ஐயம் திரிபு அற ஜடத்தில் அறிவதற்கு இவ்வனுபவம் உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக