வெள்ளி, 14 மார்ச், 2014

வராகி பூஜித்த தலம்

.

 பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி,

சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர். அந்தகாசுரன்

என்பவனை அழிக்க, சிவன் தனக்கு உதவியாக சப்தமாதர்களைத்

தோற்றுவித்ததாக மத்ஸ்யபுராணம் சொல்கிறது. சும்பன், நிசும்பன்

என்ற அரக்கர்கள் வதத்தின்போது, தனக்கு உதவியாக சப்தமாதர்களை

சக்திதேவி தோற்றுவித்ததாக மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.



சப்தமாதர்களில் வாராஹியை தனிதெய்வமாக வழிபடும் முறை

பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இவள் கருப்பு

நிறம், பன்றி முகம், பெருவயிறுடன், ஆறு கைகளுடன் இருப்பதாக

ஸ்ரீதத்வநிதி என்றநூல் வர்ணிக்கிறது. வராஹியின் வரத,

அபயஹஸ்தம் தவிர மற்ற கைகளில் சூலம், கபாலம், உலக்கை, நாகம்

தாங்கியிக்கிறாள். சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, தசமி, துவாதசி, அமாவாசை

திதிகள் வாராஹி வழிபாட்டிற்கு உகந்தவை. சோழ அரசர்களின் இஷ்ட

தெய்வமாக விளங்கிய வாராஹிக்கு தஞ்சை பெரியகோயிலில் சந்நிதி

உள்ளது. வாராஹி மாலை என்னும் நூலை எழுதிய சுந்தரேசர், சோழ

மன்னரான குலோத்துங்கனின் படையில் குதிரைப்படைக்குத் தலைமை

வகித்தவர். வாராஹியை வழிபடுபவருக்கு எதிரிகளின் தொல்லை நீங்கி,

வளமான வாழ்வு உண்டாகும்.


இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று

சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் வராகி வழிபட்ட 

தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வழுவூர் அருள்மிகு இளங்கிளை நாயகி 

சமேத வீரட்டேசுரர் திருக்கோயில் ஆகும். இவருக்கு கிருத்திவாசர்

என்ற பெயரும் உண்டு. அஷ்டவீரட்டத் தலங்களில் கஜசம்காரம் நிகழ்ந்த

தலம். கஜசம்ஹார மூர்த்தி திருவுருவம் மிக்க சிறப்புடையது. இவர்

எழுந்தருளிய சபை ஞானசபை எனப்பெறும். தேவார வைப்புத் தலம்.

வராகி பூஜித்த தலம்.


திருமாலின் வராக அவதார அம்சம் உடையவள். கறுப்புப் பட்டாடை

உடுத்தியவள். பன்றி முகம் உடையவள். மிக்க செல்வமும் அணிகலன்

பூண்ட அழகிய மார்பும் உடையவள். பாதங்களில் நூபுரம் அணிந்தவள்.

கலப்பை, முசலம், வரதம், அபயம் அமைந்த நாற்கரத்தினள். கருநிறம்

உடையவள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக