ஞாயிறு, 30 மார்ச், 2014

அம்பிகை அந்தாதி


32. பசுங்கிளியாய் நேசமாகும் பராசக்திஓம் அம்மையள்!
அன்னையே! அருள்ஞான அமுதூட்டும் 
அகிலாண்ட அம்மையே!
தன்னையே அறிந்தார்க்கு தந்தையும்
தம்மையும் தெரிக்காட்டும்
முன்னையே! முக்திதரும் முழுமுதற்
மெய்மையே! மும்மையே!
நின்னையே சரணானோம் நின்மலி!
நிறைவுதருவாய் அருவுருவே!
ஆருயிர் அன்னையே! கருணை மிகு இறை ஞானத்தினை ஊட்டுகின்ற, அகிலத்தை எப்போதும் ஆளுகின்ற அம்மைப் பார்வதியே! தன்னையே உணர்ந்து தெளிந்து அறிந்தாருக்கு, யாவருக்கும் தந்தையாகிய இறையோனையும், தாயாகிய தன்னையும் வெளிப்படுத்திப் புலப்படுத்தும் முந்தைப் பொருளே! வீடுபேற்று முக்தியினைத் தருகின்ற முழுமுதல் இறையாகிய உண்மைப் பொருண்மைப் பொருளே! உம்மை, இம்மை, மறுமை எனும் எக்காலமும் முக்காலமும் ஆகின்ற மூவகை நிலைப்பேறே! நின்னையே சரண் புகுந்தோம் மாசற்ற நிருமலி, நிமலை, நீலி, சிவசங்கரி, மாதேவி, மலைமகளே! நிறைவெனும் முழுமைப் பூரணத்தை அருளுவாய் அருவுருவான அன்னைப் பராசக்தியே!
தன்னை அறிந்து நடுநிலை தவறாது ஒழுகி, தேடலில் முனையும் தவ சீலருக்கு, முன்னைப் பொருளை, தந்தையை உணரக் காட்டும் ஞானாம்பிகை அன்னையாய், ஞானத்துள் பரம்பொருளைச் (ஈசனைச்) சுட்டும் தெய்வத்தின் தெய்வமாய், மூலப்பொருளாக, காலங்களைக் கடந்து காலமாகவே இலங்கும் பராசக்தியே! வையத்துள் கிடந்துழலும் வாழ்வு நிறைவுற்று, மோட்சம் பெற, பரி பூரணத்தை, முழுமையை, நிறைவினை நல்குவாயாக! என்பதாம்.
இனிமை மிகுத்துக் கண் கவரும் பச்சைக் கிளியாகப் பாசமும் நேசமும் ஆகின்ற அன்பின் உருவம், பராசக்தி ஓம் அம்மையள், அன்னை அம்பிகையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக