வெள்ளி, 14 மார்ச், 2014

வள்ளிமலை சுவாமிகள்



கொங்குநாட்டில் பவானி என்ற சிவத்தலம் உண்டு. அதன் அருகிலுள்ள

பூதநாச்சி கிராமத்தில் சிதம்பர ஜோதிடர், லட்சுமி அம்மாள் தம்பதியர்

வசித்தனர். அவர்களுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஒருமுறை

லட்சுமி அம்மாள் முன் ஒரு நாகம் படமெடுத்து ஆடியது. அதற்கு கற்பூரம்

காட்டிய வுடன் மறைந்துவிட்டது. இதன்பிறகு நாகாசலம் எனப்படும்

திருச்செங்கோட்டிற்கு 12 அமாவாசைகள் தம்பதியர் சென்றனர். இறைவன்

அருளால் முதலில் ஒரு பெண் குழந்தையும், அடுத்து ஒரு ஆண்குழந்தையும்

பிறந்தது. ஆண்குழந்தை பிறந்தது 1870, நவம்பர் 25ல். குழந்தைக்கு அர்த்தநாரி

எனப் பெயரிட்டனர். இளம் பருவத்திலேயே தந்தையை இழந்தார் அர்த்தநாரி.

படிப்பில் நாட்டமில்லை. ஆனால் மல்யுத்தம், சிலம்பம் கற்றார்.



இளவயதிலேயே மைசூரு சென்று விட்டதால் தமிழ் தெரியாமல் போனது.

ஒன்பது வயதிலேயே அர்த்தநாரிக்கு திருமணம் நடந்தது. மனைவியைக்

காப்பாற்ற மைசூரு அரண்மனையில் சமையல்காரராக பணிபுரிந்தார்.

அப்போது இறைநாட்டம் இல்லை. 22 வயதில் மைசூருவில் நடந்த ஒரு

திருமணத்திற்குச் சென்றார்.அத்திருமணத்தில் பெண்ணிற்கு தாலிகட்டும்

சமயத்தில் மாப்பிள்ளைக்கு வலிப்பு வந்துவிட்டது. எனவே, பெண் வீட்டார்

அந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்து, திருமணத்திற்கு வந்த அர்த்தநாரிக்கு

பெண்ணைக் கொடுத்து விட்டனர். இரண்டாம் திருமணம் நடந்த மூன்று

வருடங்களுக்குள்ளாக முதல் மனைவியும், அவருடைய மூன்று

குழந்தைகளும் இறந்து விட்டனர்.



இதையடுத்து சில நாட்களில் இரண்டாவது மனைவிக்குப் பிறந் இரண்டு

பெண் குழந்தைகள் ஒரே நாளில் இறந்து விட்டனர். இதனால் அர்த்தநாரிக்கு

தாளாத துக்கமும், வாழ்க்கையில் வெறுப்பும் ஏற்பட்டது. பட்ட காலிலேயே

படும் என்பதற்கேற்ப அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. எவ்வளவோ

வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. அரண்மனையில் இருந்த

வேலைக்காரனின் சொல்படி, தன் இரண்டாவது மனைவியுடனும்,

எஞ்சியிருந்த ஒரே மகன் நரசிம்மனுடனும் அவர் பழநி சென்றார்.



நான்கு வருடங்கள் அங்கே தங்கி கோயிலில் கூட்டி மெழுகுவது, மலர்

பறிப்பது ஆகிய கைங்கர்யங்களைச் செய்தார். 48நாட்கள் அபிஷேகப் பால்,

நிவேதன பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட்டு வந்த அர்த்தநாரிக்கு

முருகன் அருளால் வயிற்றுவலி நீங்கியது. ஒருமுறை, மதுரையிலிருந்து

பழநி வந்த தேவதாசி, திருப்புகழ் பாடல் ஒன்றைப் பாடி நடனமாடினாள்.

பாடலைக் கேட்ட அர்த்தநாரி தன்னை மறந்தார். ஆனந்தக் கண்ணீர்

பெருகியது. முருகன் அந்தப் பாடல் மூலம் அர்த்தநாரியை ஆட்கொண்டு

விட்டார். தமிழ் தெரியாத அர்த்தநாரி திருப்புகழை எப்படி படிப்பது என்று

வருத்தம் கொண்டார். ஒரு சிறுவனின் உதவியுடன் தமிழ் படித்து திருப்புகழ்

பாடும் திறன் பெற்றார். அவரை மைசூரு சாமி என மக்கள் அழைத்தனர். 1912ல்

அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியை தரிசித்தார். பின்

சென்னை சென்று, செங்கல்வராயபிள்ளை என்பவர் வீட்டில் தங்கி

அன்னதானம் வழங்கினார். ஒருசமயம் முருகனே சிறுவன் ரூபத்தில் வந்து

அன்னம் பெற்றுச் சென்றார் என கூறுவார்கள்.



இதன்பிறகு, வடஇந்திய யாத்திரை சென்றார். மீண்டும் திருவண்ணாமலை

திரும்பி ரமண மகரிஷியுடன் 15 நாட்கள் தங்கினார். பின், ரமணர் அவரை

அங்கிருந்து வெளியேறும்படி கூறினார். இதனால் வருத்தம்அடைந்த

அர்த்தநாரி வரும் வழியில் சேஷாத்ரி சுவாமிகளைச் சந்தித்தார். அவர்

அர்த்தநாரி யிடம், வள்ளிமலைக்கு சென்று தவம் செய். நான் அங்கு

வருகிறேன் என்றார். அதன்பிறகே ரமணர் திருவண்ணாமலை யிலிருந்து

அவரை வெளியேற்றியதன் அர்த்தம் புரிந்தது. சென்னை- பெங்களூரு

ரோட்டில் <உள்ள திருவல்லம் என்ற ஊரிலிருந்து 12கி.மீ., தொலைவில்

வள்ளிமலை உள்ளது. திருமாலின் மகளான வள்ளி, பூலோகத்தில்

நம்பிராஜனின் மகளாக வேடர் குலத்தில் பிறந்து, தினைப்புனம் காத்து,

தவமிருந்து முருகனை மணந்த பகுதியே வள்ளிமலை. முருகனின்

புனிதப்பாதங்கள் பட்ட அத்தலத்தில் தங்கிய அர்த்தநாரி, தவவாழ்வில்

ஈடுபட்டார். இதன்பின் வள்ளிமலை சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.



பல தலங்களுக்கும் சென் திருப்புகழின் பெருமையை மக்களிடம்

உணர்த்தினார். ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று மக்கள் மேல்நாட்டு

நாகரீகப்படி தங்கள் நடைமுறையை மாற்றி வந்த காலம் அது. அதைத்

தடுக்கும் வகையில், அன்று மக்கள் முருகனைத் தரிசிக்கும் வழக்கத்தை

ஏற்படுத்த விரும்பினார். 1918 ஜனவரி முதல் நாள் திருத்தணியில் படிவிழா

என்ற நிகழ்ச்சியைத் தொடங்கினார்.



ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றும் அதைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.

பல இடங்களில் திருப்புகழ் சபை அமைத்தார். 1944ல் பழநியில் திருப்புகழ்

மாநாடு நடத்தினார். திருப்புகழ் பாராயண தவநெறி திருமுறை என்ற நூலை

வெளியிட்டார். சங்கீத ஞானம் இல்லாத சுவாமிகளுக்கு வள்ளிநாயகி

ஒருமுறை காட்சியளித்தாள். தனது பெயரை பொங்கி என எழுதிக்காட்டினாள்.

சுவாமிகள் அதன் பிறகு, வள்ளி சிலை ஒன்றை வடித்த அதற்கு பொங்கி

வைஷ்ணவி என திருநாமம் சூட்டி பிரதிஷ்டை செய்தார். 1950 நவம்பர் 22ல்

சமாதி அடைந்தார். அவரது திருமேனி வள்ளிமலையில் அவர் தவம் செய்த

குகை யிலேயே வைக்கப் பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக