ஞாயிறு, 16 மார்ச், 2014

பஞ்சமுகி ஆஞ்சநேயர்





மந்த்ராலயம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சமுகி

ஆஞ்சநேயர் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் முதன்மை

தெய்வமான ஆஞ்சநேயரின் விக்ரகம் ஐந்து தலைகளுடன் வித்தியாசமாக

காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.



இவற்றில் ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு கடவுளை குறிக்கும் விதமாக

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பாங்கு அற்புதமானது. அதாவது கருட

பகவான், நரசிம்மர், ஹயாகிரீவர், ஹனுமான் மற்றும் வராஹ மூர்த்தி ஆகிய

கடவுளர்களின் தலைகளுடன் இந்த சிலை காணப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமி, ராம பிரான் மற்றும் ஆஞ்சநேயரின் தீவிர பக்தர் என்று

நம்பப்படுகிறது. ஒரு முறை ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 12 ஆண்டுகள் தொடர்ந்து

கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார்.



அவரின் பக்தியை கண்டு வியந்து போன ஆஞ்சநேயர், ராகவேந்திர

சுவாமியை காண்பதற்காக பஞ்சமுகி ஆஞ்சநேயர் வடிவத்தில் வந்ததாக

சொல்லப்படுகிறது.பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயிலின் சுற்றுப்பகுதிகள்

பாறைகளால் சூழப்பட்டிருந்தாலும் அதன் இயற்கையழகு மெய்சிலிர்க்க

வைக்கும். மேலும் கோயில் செல்லும் வழியில் இயற்கையாக உருவான

பாறைகள் சயன மஞ்சம்,தலையணை, புஷ்பக விமானம் போன்ற

வடிவங்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.


ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்:

இராமருக்கும், இராவணனுக்கும் போர் நடந்தது. இதில் இராவணன்

நிராயுதபாணியானான். இதனால் இராமர் இராவணனை கொல்ல

மனமின்றி,”இன்று போய் நாளை வா’ என திருப்பி அனுப்பிவிட்டார்.

இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை

இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் செய்ய நினைத்த

இராவணன், “மயில் இராவணன்’ என்ற மற்றொரு அசுரனது துணையுடன்

போருக்கு கிளம்பினான்.

இராமரை அழிப்பதற்காக மயில் இராவணன் கொடிய யாகத்தை நடத்த

திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் இராம-லட்சுமணனின் உயிருக்கு

ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த

ஆஞ்சநேயரை அனுப்பும்படி இராமரிடம் கூறினான்.

இராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும்

முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி

பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற

தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம்

ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல

வாழ்விற்காக மயில் இராவணனை அழித்தார்.

இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க

முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக

“பஞ்சமுக ஆஞ்சநேயர்’ விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும்

வளத்தையும் குறிக்கும் வகையில் “ஜய மங்களா’ என்றும்

அழைக்கப்படுகிறார்.


பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் உள்ள ஆஞ்சநேயரை

வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும்,

லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான

அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும்,

கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும்

தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல

சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக