கௌமார மடாதிபதி சிரவை ஆதினம் தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் கோடிக்கரை குழகர் கோவில் சென்று வந்தார்கள். அதன் படத்தை நமது கௌமாரப்பயணம் வாசகர்கள் தரிசித்து மகிழுங்கள்.
கோடிக்கரை குழகர் கோவில் பற்றி நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வர சுவாமிகள் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள் அதையும் வாசகர்கள் அறிந்து கொள்ளுங்கள். திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமுதக் கலசத்தை வாயு பகவான், தேவருலகிற்கு எடுத்துச் சென்ற போது அமுதம் சிதறிக் கீழே விழ, அது சிவலிங்கமாக ஆயிற்று என்று
தலவரலாறு கூறுகிறது. சேரமான் பெருமாள் நாயனாருடன் இத்தலத்திற்கு வந்த சுந்தரர், கோயில் கடலருகே தனித்திருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தி பாடியதாக வரலாறு சொல்லப்படுகிறது.
இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றத் தலமுமாகும். தட்சிணாயன, உத்தராயண புண்ணிய காலங்களில் தல தீர்த்தமாகிய கடலில் நீராடுவது சிறப்பு எனக் கருதுகின்றனர். இத்தலத்து முருகப்பெருமான் ஓர் முகமும், ஆறு கரங்களும், ஏனைய ஆயுதங்களுடன் ஒரு திருக்கரத்தில் அமுத கலசமும் ஏந்தியிருக்கிறார். அமுத கலசம் ஏந்தியிருப்பது தலப்புராணம் தொடர்புடையதாக இருக்கலாம். இத்தலத்து விநாயகரும் "அமிர்த விநாயகராவார்"
கடற்கரையிலுள்ள சித்தர் கோயிலில் சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக நம்பப்படுகிறது. நவகிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன; இத்தலம் கோளிலி தலம் எனப்படுகிறது. இந்த தலத்தைப் போற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் உள்ளன.ஏழாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பாடல், கொல்லிப் பண்ணில் அமைந்தது.
“கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்
குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (7.32.1)
”கோடிக்குழகர் கோயிலின் அயலிலும் அதன் புறத்திலும் எங்கும் தேடியும் ஒரு குடியும் காணாத நிலையில், கோயிலுள் புகுந்து இறைவரின் திருவடியைத் தொழுது உள்ளம் வருந்தி மலர் போன்ற கண்களில் நீர் வரக் `கடிதாய்க் காற்று' எனத் தொடங்கும் பதிகம் பாடிக், கொற்றவையுடன்
இறைவர் வீற்றிருக்கின்ற தன்மையையும் அப்பதிகத்துள் வைத்துப் போற்றினர்.
பொன்னியின் செல்வன் என்னும் நூலில் இரண்டாம் பாகத்தின் முதல் அத்தியாயத்தில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இத்தலத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வந்து இறைவனை வணங்கியதாகவும், இத்தலத்து இறைவன் தனிமையில் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக