தமிழ் மொழியை விட உயர்மொழி உண்டு எனக் கேட்டதும் சினம் கொள்ளாதவன் புலவனல்ல
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்
நூற்பா: 63
தமிழ்மொழிக்கு உயர்மொழி தரணியில் உளதுஎனில் வெகுளியற்று இருப்போன் வெறும்புல வோனே.
இதன்பொருள்: தமிழைவிட எல்லாவகையாலும் சிறப்புப்பெற்றதாகிய வேறு ஒரு மொழி இவ்வுலகத்திலே இருக்கிறது என யாராவது ஒருவர் கூறக்கேட்டும் சற்றும் சினங்கொள்ளாமல் ஒரு புலவன் இருப்பின் அவன் பெயரளவில் புலவனே அன்றி உண்மையில் வெறும் சதைப்பிண்டமே என்றவாறு.:
விளக்கம்: ஆகிய அடிப்படைச்சீர்கள் ஆறும் அவனுடைய ஆறு தலைகள்; இவைகளை அமைத்த அகத்திய முனிவர் முருகனடியார்” என்பார். “கண்நிகர் மெய்யும் சென்னிக் கணம்உறழ் சேர்க்கைச் சீரும் திண்ணிய புயங்க ளேபோல் திகழ்தரும் உயிரும் வேறு ஒன்று எண்ணிடற்கு அரியது ஆகும் எஃகமும் இயலிற்காட்டும் புண்ணிய முனிக்கோன் செவ்வேள் பொற்பதத் தடிமைதானே”1 என்றது அது. இவர் இத் தமிழ்மொழி தன்னை அன்புடன் பயில்பவரை தேவர்களுக்கும் தேவராக ஆக்கும் எனலை இந்நூல் 672-ஆம் நூற்பா உரையிற் காட்டினாம். இவ்விலக்கணத்தின் ஈற்றிலே அமைந்துள்ள ஒரு வண்ணக்கவியில் தமிழை, “உலகேழும் மெச்சும் உம்பர் நாட்டும் ஒங்கு துய்ய வண்மை தமிழதாமே”2 எனப் போற்றுகிறார். இவர் தமிழைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்து ஒரு பெரிய நூலாகவே வெளியிடலாம். விரிவஞ்சி அனைத்தையும் கூறி விரிக்காமல் இவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மட்டும் சுருக்கமாகக் காட்டி அமைவேன். இந் நூலாசியர் தம் யாத்திரைகளின் இடையில் ஒருசமயம் இராயவேலூரில் தங்கியிருந்தபோது வடமொழிப்புலமை மிக்க இருவர் இவரிடம் தமிழைவிட வடமொழியே உயர்ந்தது என்றனர். பேச்சு முறையான வாதமாக வளர்ந்தது. முன்னிரவில் தொடங்கி மறுநாள் விடியும்வரை வாக்குவாதம் நீடித்தும் முடிவுகாண முடியவில்லை. இறுதியில் திருவுளச் சீட்டுப்போட்டு எடுப்பது என முடிவாயிற்று. அவ்வாறே செய்தனர். தமிழே உயர்ச்சி என்ற சீட்டு வந்தது. உடனே, “தமிழே உயர்ச்சி என்று சீட்டுக் கொடுத்த பெருமாளே” என்ற திருப்புகழ்ப்பா ஒன்றும், தமிழ்த் துதிப்பதிகம் ஒன்றும், 100 கட்டளைக் கலித் துறைகளால் தமிழ் அலங்காரமும் பாடினார். இந்நிகழ்ச்சியின் விரிவை இவர் சுயசரிதையாகிய “குருபரதத்துவம்” என்னும் நூலில் புதுவைச் சருக்கத்திற் காணலாம். தமிழ் வடமொழியிலிருந்து தோன்றியது என்பாரை எண்ணிப்பாடியது.
நன்றி: பதிவு
புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.