வெள்ளி, 15 மே, 2020

காலப் போக்கினை அறிந்து கவிதை பாட வேண்டும்
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம் 

நூற்பா: 51
கால வேற்றுமை கருதாப்
 புலவன் 
சீலமே எனினும் 
சிறுமையினனே 51
இதன் பொருள்: மாறி வருகின்ற காலப்போக்கின் இயல்பைச் சிந்தித்து பார்க்காத கவிஞர் சிறப்புடையவராகவே இருந்த போதிலும் உலகின் அன்றைய சிந்தனையை உணராதவர் என்னும் குறையை உடையவராகிறார். என்றவாறு. விளக்கம்: உலகில் காலம் செல்லச் செல்ல புதிய கருத்துக்கள் தோன்றுகின்றன. இதன் விளைவாகப் பழைய மரபுகள் தாமே மாறுகின்றன, அல்லது வலிய மாற்றப்படுகின்றன. இத்தன்மை தவிர்க்க முடியாத இயற்கை நியதி. இதனைப் புலவர் உணர வேண்டும். எனவேதான் நன்னூலாரும் "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல; கால வகையினான; 
என்றார். இவரும் யாப்பைப்பற்றி ஓரிடத்தில் "பழைய யாப்பு எனினும், பண்பு இலது ஆயிற் களையவும் புதிய கட்டே ஆயினும் இனிதாயின் ஏற்கவும் துணியும் கல்வியாளர் என கண்ணனையரே". என்கிறார். இதனை இலக்கண இலக்கிய உலகியல் மரபு பற்றிய அனைத்திற்கும் பொதுவாகக் கொள்ளலாம்.

நன்றி பதிவு: காளியப்பன் அவர்கள்.
நன்றி. சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக