செவ்வாய், 5 மே, 2020

விநாயகர் தனிச்சிறப்பு


விநாயகர் என்ற சொல்லுக்கு விசேடமான நாயகர் என்றும் தனக்கு மேல் ஒரு நாயகர்
(தலைவர்) இல்லாதவரென்றும் பொருள். மலம் இல்லாதவர் விமலர் என்பது போல நாயகர் இல்லாதவர் விநாயகர். யானைகளை இயக்குகின்ற தலைவன் கையில் அங்குசம் பாசம் வைத்துக் கொண்டு யானையை தன் வழி நடத்துவான். விநாயகராகிய  யானை தம்முடைய கைகளில் அங்குச பாசத்தை வைத்துக் கொண்டு உயிர்களை எல்லாம் வழி நடத்துகின்றார்.

   ஒரு வீட்டிற்கு நாயகர், ஒரு சபைக்கு நாயகர், ஒரு ஊருக்கு நாயகர், ஒரு மாவட்டத்துக்கு நாயகர், ஒரு மாநிலத்திற்க்கு நாயகர், ஒரு நாட்டிற்கு நாயகர் என்று தலைவர்கள் இருப்பார்கள். ஆனால் எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகுக்கும் தலைவராக விளங்குபவர் விநாயகர்.

விநாயகரே ஐந்து தொழில்களுக்கும் நாயகராவார். 
 கொம்பினை எழுத்தாணியாக வைத்துள்ள கையினால் படைத்தலையும், மோதகம் அல்லது பழம் வைத்துள்ள கையினால் காத்தலையும், அங்குசம் வைத்துள்ள கையினால் அழித்தலையும், பாசம் வைத்துள்ள கையினால் மறைத்தலையும், துதிக்கையினால் அருளலையும் ஆக ஐந்து தொழிலையும் ஐந்து
திருக்கரத்தினால் உணர்த்துகிறார். 

விநாயகர் சிவபெருமானைப் போல முடியில் கங்கை, பிறைச் சந்திரன், கொன்றை, வில்வம் ஆதிய முடியும் சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணும், பாம்பு ஆபரணமும் அணிந்து தாமே சிவ பரம்பொருள் என உணர்த்துகின்றார்.

"யாம் ஐம்முகன் என்று சடையில் பாசடைக் கூவிளம் தூ இளம் திங்களோடு இதழி அரவத்தம்பு மணியணிப் பணி அடியோடு எண்ணும் முக்கண்ணும் எய்தி" என்பது பேரூர் பச்சை நாயகி பிள்ளைத்தமிழ்த் துதிப் பாடல். உமாதேவியாரைப்போல தமது திருக்கரங்களில் அங்குசம், பாசம் அணிந்து விளங்குகின்றார்.

வழிபடுபவர் பயம் நீக்குவதற்காக
யானை முகத்துடன் விளங்குகின்றார். "வெருவும் சிந்தை விலகக் கசானனம் விளங்கும் சித்தி விநாயகனே வள்ளலே" என்கிறார் ராமலிங்க சுவாமிகள்.

   யானை முகம் மிருகத்தையும்,  நான்கு கைகள் தேவரையும், உடம்பு மனிதரையும், கால்கள் பூதத்தையும், ஒருபக்கம் கொம்புடைமை ஆண் என்பதையும், ஒருபக்கம் கொம்பில்லாமை பெண் என்பதையும் உணர்த்தி எல்லாம் தாமாக விளங்குபவர் விநாயகர்.

   வழிபடுவதற்க்கு எளியவராக விளங்குபவர் விநாயகர். சாணம், மஞ்சள் முதலியவற்றில் யார் எந்த இடத்தில் வைத்து வழிபாடு செய்தாலும் அவர்கள் நினைத்த காரியம் இடையூறின்றி நிகழும் படி அருள் செய்பவர். யாரும் விரும்பாத வன்னி, அருகு, எருக்கு மலர் இவற்றை ஏற்று அருள் செய்பவர். தன்னை வழிபடுபவர்களின் துன்பம் நீக்கியருள்பவர். "வழிபடும் அவர் இடர் கடி கணபதி" என்பார் திருஞானசம்பந்தர். இன்பம் இடையறாது நிற்கவும் துன்பம் தூரத்துள் நீங்கவும் விநாயகரைப் போற்றுவாம் என்பார் சாந்தலிங்க சுவாமிகள்.

   விநாயகரை வழிபட்டால் கல்வி, ஞானம் எல்லாம் தானே உண்டாகும்.  "நற்குஞ் சரக்கன்று நண்ணில் கலைஞானம் கற்கும் சரக்கன்று காண்" என்பது ஞான சாத்திரம். சிவபெருமான் முதலாகிய எல்லாக் கடவுளர்களும் விநாயகர் வழிபாடு செய்யாமல் ஒரு செயலைச் செய்தால் இடையூறு உண்டாகும் என்பது, "அச்சிவன் உரை ரதம் அச்சது பொடி செய்த அதிதீரா" என்னும் திருப்புகழால் தெரியவருகிறது.
  
   ஆகவே நம்முடைய சகல நற்செயல்களும் எவ்வித இடையூறுமின்றி, நல்ல வண்ணம் நிறைவேறும் பொருட்டு ஐந்து கரமும் ஆனை முகமும் உடைய விநாயகப் பெருமானை முதற்கண் வழிபாடு செய்து எல்லா நலங்களையும் பெறுவோமாக!


நன்றி.
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள்,
கௌமாரமடாலயம், கோவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக