சனி, 16 மே, 2020

காரண காரியங்களை அறிந்து கவிதை பாட வேண்டும்.
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

நூற்பா: 52
காரண காரியம் காணாப்
புலமையைப் பூரணம் என்ன புகலவொண்ணாதே.
இதன் பொருள்: (உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கிலித் தொடர் போலக் காரண காரியத் தொடர்புடையவை. பல சமயங்களில் அவை எளிதில் விளங்காது எனினும்) நிகழ்ச்சிகளினுடைய காரண காரியத் தொடர்பை அறியா ஒருவரின் கல்வியாற்றலை முழுமை பெற்றதாகக் கூறமுடியாது என்றவாறு விளக்கம்: பொதுவாக நிகழ்ச்சிகளின் பருப்பொருளான காரணங்களை அனைவரும்  எளிதில் உணர்வர்; ஓரளவு நுட்பமான காரணங்களை அறிஞர்கள் அறிவர்..மிகமிக நுட்பமான காரணங்களையும் அறிவதே முழுப்புலமையாகும் என்கிறார். அத்தன்மை கைகூடும் வரையில் கல்வியில் திருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே கருத்து. இந்நூற்பாவிற்க்கு வேறு ஒரு  முறையிலும்  பொருள் உரைக்கப்படும். இவ்வுலகில் உள்ள பருப்பொருள்கள் யாவும் காரியங்கள் என்றும்  இவற்றின் அமைப்பிற்கான காரணங்கள் மண்,  நீர், காற்று, தீ, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களேயாம் எனவும் அறியாதவருடைய புலமையை முழுமை பெற்றதாகக் கூறமுடியாத என்றவாறு, இவ்வுரை இவருடைய "காரணமாம்  பூதமனைத்தும் காரியமாம் பௌதிகமும் சீர் அருள்சித்து ஆடும் தினம்" என்னும் கொள்கைக் கிணங்கக் கூறப்பட்டது.
பருப்பொருள் பூதங்களின் சேர்க்கைகளால் ஆனவை எனில் அவை பகுதிக்களை உடையன. அதாவது கண்டப் பொருள் என்பது ஒருதலை.  எந்தவொன்று பகுதிகளால் ஆனதோ அது நிலையற்றது. ஒரு நாளின்றேனும் ஒருநாள் அழிந்துவிடும் என்பது தத்துவ நூற்கொள்கை. நிலையாமையை உணராதவருடைய முழு புலமையன்று என்பது இரண்டாவது பொருள்கோளின் கருத்து.

நன்றி: பதிவு புலவர்
ஆ. காளியப்பன் அவர்கள்,
தலைவர், தொல்காப்பியர்,
தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக