செவ்வாய், 19 மே, 2020

கல்வி அறியா செல்வந்தனிடம் கவிதை உரைப்பது பாழ் 
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்         
       
நூற்பா: 50                                               

கல்வி அறியா செல்வந்தனிடம் கவிதை உரைப்பது பாழ்
அருமை  அறியான் அவையிடைப் புகுந்து
பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே 50

இதன்பொருள்: கல்வியின் அருமையையும், கசடறக் கற்றதம் அருமையையும் உணரமாட்டாத ஒரு செல்வன் முன் சென்று தம்பெருமையைக் கூறுவதும்,அவன் அறிந்து பாராட்டிப் பரிசில் வழங்குவான் என எதிர்பார்த்தலும் தவறாகும்.

விளக்கம்: “கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றம் தமதே; பிறிதன்று” (நீதிநெறி விளக்கம்24)  “கல்லா அறிவின் கயவர்பால், கற்றுணர்ந்த நல்லார் தமதுகனம் நண்ணாரே” என்றெல்லாம் ஆன்றோர் கூறியுள்ளனர்.  

தமிழ்ப்புலவர்கள் செல்வர்களைப் புகழ்ந்து பாடி அவர்களிடம் கைநீட்டிப் பரிசில்  பெறுவதை இவர் இழிவாகக் கருதிகிறார். எனவேதான், அதனை விரித்துக் கூறாமல் ஏனையும் என்றார். சேக்கிழார் முத்தநாதன் செயலைக் கறுமிடத்து ”பத்திரம் வாங்கித் தான்முன் நினைத்தவப் பரிசே செய்ய” என்பதைப்போன்ற மரபு. 
இவருடைய இக்கொள்கை புலவர் புராணத்தில் படிக்காசுப் புலவரைப் பற்றிக் கூறுமிடத்து, “தில்லை யம்பதிச் சிவன்படிக் காசளித் திட்டதாகச் சிலர் சொல்வார்;எல்லையின்றி வூர்தொறும் அஃது இரந்தனன் என்பார்சிலர்; இன்னோன் சொல்லை வேட்டு அரன் அளித்திடில் காயலூர்த் துலுக்கன் ஆதியார்ப் பாடும் தொல்லை யன்னவற் றொடர்வுறாது எனத்தெளி தூயவர் சிலர்தாமே” (புலவர்குமரகுரு39) என வேறு பற்பல பாடல்களாலும் விளங்குகிறது.

பதிவு புலவர் ஆ.காளியப்பன்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக