திங்கள், 18 மே, 2020

  திருவருள் பெற்றோரை புலமைச் செருக்கால் அவமதிக்கக் கூடாது
வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்


நூற்பா 54

திருவருள் பெற்றோரை புலமைச் செருக்கால் அவமதிக்கக் கூடாது.
அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை
மருட்சி யினதுஎன வையப் படுமே.

இதன்பொருள்: திருவருள்  வலிமை பெற்றுள்ள பெரியவர்களுக்குக் கூடப் பயப்படாத புலமைச் செருக்கு அறிவு மயக்கத்தின் விளைவாகக் கருதப்பட்டு நல்லோரால் பழிக்கப்படும்.

 விளக்கம்: கல்வியும் வாக்கு வன்மையும் சற்றும் சந்தேகமில்லாமல் மிக உயர்ந்த செல்வங்களே ஆகும் என்றாலும், திருவருளை மாதவத்தால் பெற்றவர்களின் ஏற்றம் இவரினும் மேம்பட்டதாகும். எனவே அருளாளர்களிடத்தில்  புலமையோர் பயப்படுதலே முறையாகும். அவர்பால் அச்சமின்மை “அஞ்சுவது  அஞ்சாமை பேதைமை அஞ்சுவது;  அஞ்சல் அறிவார் தொழில்”(427) என்பதற்கேற்ப  அறிவின்மையே யாகும். அதுவே மருட்சி எனப்பட்டது. வசைகவி யாண்டானைப் பற்றிக் கூறும் போது இவர் “ வாக்குவலி வெகுவாகப் பெற்று அரிய  வண்ணம் எட்டும் வழங்குவார்க்கும் ஆக்குவதும் அழிப்பதுவும் பெறல் அரிது என்று உணர்ந்தோரே ஆண்டான் சொல்போய்த் தாக்கும் அதிசயம் அறிவார். தவம் சிறிதும் முயலாராய்த் தருக்கம் கற்றுப் போக்கு வரவு  உணராமல் புலம்பும் இளங்கவிஞர் உளம் புகுந்திடாதே” என்று உரைப்பது இங்கு  நினைக்கற்பாலதாகும்.

பதிவு: புலவர்ஆ.காளியப்பன் அவர்கள், தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமாரமடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக