வெள்ளி, 8 மே, 2020


விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்

கஜபூசைச் சுந்தர சுவாமிகள் அருளியது

   ஞானம் என்ற சொல்லுக்கு அறிவு என்று பொருள். விஞ்ஞானம் என்றால் விசேட அறிவு. மெய்ஞ்ஞானம் என்றால் மேலான அறிவு என்று பொருள்.

   இன்று நாம் விஞ்ஞானத் துறையில்  எவ்வளவோ முன்னேறியிருக்கிறோம். சில நூற்றாண்டுகட்கு முன் வாழ்ந்தவர்களைவிடப் பல மடங்கு பல துறையில் மக்கள் சமுதாயம் முன்னேறியிருக்கிறது.  ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே  எவ்வளவோ விஞ்ஞான சாதனைகளைக் காண்கிறோம். கட்டிடம் கட்டும் அமைப்புகளாலும், உடுத்துக் கொள்ளும் உடைகளாலும் உண்ணுகின்ற உணவுகளாலும்  செல்கின்ற வாகன வசதிகளாலும் மின்சார சாதனங்களாலும் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளோம். நெடும் தொலைவையும் விரைவில் சென்றடையும் விரைவு ஊர்திகள்,நெடும் தொலைவில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் பேசும் தொலைபேசிகள், ஒலிகளை ஈர்த்துக் கேட்கும் வானொலிப் பெட்டிகள், தொலைவுக் காட்சியைக் காணும் டெலிவிஷன் அமைப்புகள், சந்திர மண்டலத்திற்க்கு செல்லல் அங்கே கால் வைத்தல், மண் எடுத்து வருதல்  போன்ற எண்ணற்ற வளர்ச்சிகளைக் காண்கிறோம். காணுகின்ற பௌதீகப் பொருளினுடைய உதவியால் அறிவைப் பயன்படுத்திக் கண்டவை விஞ்ஞான சாதனைகள் ஆகும்.

   காணாத பொருள்கள், கடவுள், உயிர்கள், வினை ஆதியன ஆகும். ஆனால் உள்ள பொருள்கள் மூளை கண்ணுக்குக் காணாத பொருளாயினும் உள்ள பொருள் என்பதை அனைவரும் அறிவர். உண்ணவும் உலாவவும் பேசவும் செயல்படவும் காரணமாக உள்ள உயிர் காணாத பொருள். இருபத்தி நான்கு மணி நேரமும் உடலை இயக்கும் உயிரை யாரும் காணமுடியாது. காணா உயிர் காணும் உடம்பை இயக்குகிறது. அதுபோலக் காணாத  கடவுள் உலகை இயக்குகின்றார். எல்லாப் பொருள்களையும் கடந்து எல்லாப் பொருள்களின் உள்ளும் இருப்பதால் கடவுள் என்று கூறுகிறோம்.
  
   காணாத இருவினை காரணமாகப் பிறந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறோம். வினையை அனுபவிக்க அமைந்ததே உடம்பு.  வினைப் போகமே ஒரு தேகம் என்பர் ஆன்றோர்.  இந்த உடம்பை  இறைவன் அற்புதமாகப் படைத்திருக்கிறான்.  ஒரு விரலோ, பல்லோ போய்விட்டால் உணர்ச்சியுடையதாக நாம் உண்டாக்க இயலாது.

   எல்லா மக்களுக்கும் கண்,மூக்கு, வாய் ஒரே மாதிரி மாறுபாடு இல்லாதிருந்தாலும் ஒவ்வொருவரைக் காணும்போது வேறுபாடு தெரிந்து கொள்கிறோம்.  உறுப்புகள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும் கோடிக்கணக்கான மக்களையும் வேறுபாடாக உணரும் அமைப்பைக் காண்கிறோம்.  பேச்சு ஒலியில் வேறுபாடு, எழுதும் எழுத்தில் வேறுபாடு, கைவிரல் ரேகையில் வேறுபாடு இவ்வாறு மாறுபாடில்லாத மாறுபாடு இறைவனின் அற்புத படைப்பாகும்.

   இந்த உடம்பை இயக்கும் உயிர் இந்த உடம்பை எடுக்குமுன் எங்கிருந்தது?  இந்த உடம்பை விட்டு பின் எங்கே சொல்லும்? எவ்வாறு செல்லும்? அவ்வாறு செல்லும் உயிர்ப் பயணத்திற்கு நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என்ன செய்ய வேண்டும்? இந்தக் கருத்தினை  எங்கள் ஞானசிரியராகிய தவஞானத் தமிழ்க்கடல் தவத்திரு கந்தசாமி சுவாமிகள் கூறும் பாடல்

எங்கிருந் திங்கே வந்தனை?  இங்ஙன் எவ்வித முயற்சிஉற் றாய்?மேல் இங்கிருந் தெங்கு போக உத்தேசம் எய்தினை? எனில் விடை  அறியேன்; தெங்கிருங் குரும்பை சுவர்கநீர் நாடி தெரிவையர் சுவர்க்கநாட் டிசையும் நங்கிருங் காரை மடைமரு வரங்க நாதனே சீதர மணியே.
காரமடை அரங்கநாத மாலை. 

 நன்றி: சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள். கௌமார மடாலயம் கோவை.

1 கருத்து:

  1. இரு ஆண்டுகள் பின் கடவுள் அருளால் மீண்டும் கெளமாரபயணத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது நன்றி.

    பதிலளிநீக்கு