புதன், 13 மே, 2020


வண்ணச்சரப தண்டபாணி அடிகள் இயற்றிய அறுவகை இலக்கணம்.

நூற்பா : 47
பல்லக்கை விட திருவோடு மேல் மாய்வார்  போற்றி மகிழும் பாவலோர், வண்ணச் சிவிகையில் வையகம் படைத்தோற் கழறும் பாவலர் கையோடு
உயர்வே 47
இதன் பொருள்: சிலநாட்களே உயிர் வாழ்ந்து மடியும் மனிதர்களை அவர் தரும்  பரிசுகளுக்காகப் புகழ்ந்து பாடி, அதனால் பெறும் பல்லக்கு, விருது போன்ற பரிசுகளைப் பெற்று செல்வச் செழிப்பில் வாழும் வாழ்வை விட தனு, கரண, புவன போகங்களை படைத்து அளிக்கும் வல்லண்மையைப் பாடும் புலவர் கையில் ஏந்தும் பிச்சைக் பாத்திரமாகிய திருவோடே சிறந்தது.
விளக்கம்: வண்ணச் சிவிகைச் செல்வச் செழிப்பையும், இரக்கும் கலமாகிய திருவோடு வறுமையும் குறிக்கும். "பொய்மையாளைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்"(சுந்தரர் தேவாரம்)" தருக்காவலா என்று புல்லரைப்பாடி தனவிலை மாதருக்கு ஆவலாய் மயிலே குயிலே என்று தாமதர் ஆய்தருகா அலாநெறிக்கே  திரிவீர்கவிசாற்றுமின்--பத்தருக்கா அலாயுதன் பின்தோன்று அரங்கர் பொற்றாள் இணைக்கே" (திருவரங்கத்தந்தாதி)என்பன போன்ற ஆன்றோர் மொழிகளை நினைத்துக் கூறப்பட்டது இந்நூற்பா. மனிதர்களைப் புகழ்ந்து பாடாமையையே பல புலவர்கள் சிறப்புத் தன்மையாகக் கருதினர் என்பதை "மனிதக் கவிமொழி யாமங்கை வாழ்மண வாளவள்ளல் புனிதக்கவி கொண்டு மாலைசெய்தான்" என்னும் திருவரங்கத்து மாலை சிறப்புப்பாயிரத்தால் அறியலாம்
நன்றி:பதிவு
புலவர்ஆ.காளியப்பன்.
நன்றி:
சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக