ஞாயிறு, 3 மே, 2020

பாசப் பழிமுதல் பறித்தல்

பாசப் பழிமுதல் பறித்தல்.
தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள்.
மூன்றாம் குருமகா சந்நிதானம்,
சிரவை ஆதீனம், கௌமார மடாலயம், கோவை.



தெய்வ மணம் கமழச் செய்யுள் இயற்றும் சேக்கிழார் பெருமான், தாம்
இயற்றிய திருத்தொண்டர்  புராணத்தில்  உள்ள ஒரு செய்யுளைப் பற்றி எழுந்ததே
இந்தக்  கட்டுரை.
இளையான்குடி என்ற நகரத்தில், வாய்மையில் மிக்க வேளாண் குலத்தில்,
மாறனார் என்ற பெயரமைந்த பெரியார், அரனிடத்திலும் அடியவர்களிடத்திலும்
அன்பு பூண்டு விளங்கினார். அவர் தம் உழவுத் தொழிலால்
வரும் பொருளைக் கொண்டு, அரன் அடியவர்களுக்குப் பூசை செய்து அமுது படைத்து வந்தார்.
இவ்வாறு நாள்தோறும் அடியவர்கள் வந்து மகேசுவர பூசை கொண்டு, வாழ்த்திச்
சென்றதின்  பயனாகக் குபேரன் போன்று செல்வங்கள் நிறையப் பெற்றவராக
விளங்கினார்.
    செல்வம் மிக்க நாளில் செய்வதன்றி,  வறுமை வந்து துன்பம்  நேரிட்ட
காலத்தும்  இப்படியே செய்ய வல்லவர் என்று உலகினர்க்கும் உணர்த்தும்
பொருட்டுச் சிவபெருமான்,  இவரது  செல்வங்களை நாள்தோறும் மெல்ல மறைந்து
போகும்படி திருவுளம் கொண்டார். இவ்வாறு வளம் சுருங்கவும் இளையான்குடி மாற நாயனார் தம் உளம் சுருங்குதல் இன்றித் தமது திருப்பணிகளில் முதிர்ந்த
கொள்கையராக விளங்கினார்.
   இவ்வாறு நிகழும் நாளில் இறைவன் உலகினர்க்கு நாயனார் உணர்த்த வேண்டி  மழைக் காலத்தில் ஊணும், உறக்கமுமின்றி வேறு ஆதரவுமின்றி
அடைக்கப்பட்டிருந்த  நள்ளிரவில்,  நற்றவத்தர் வேடம்  கொண்டு இவர் மனையின்பால் எழுந்தருளினார். நாயனார் கதவைத் திறந்து உள்ளே அழைத்து ஈர
உடையை  நீக்கி அமர இடம் கொடுத்து அவர்க்கு உணவூட்ட எண்ணினார்.
     தம் மனைவியை  நோக்கி, “நமக்கு முன்பு உணவில்லையாயினும் இவ்வரன்
அடியார்க்கு அமுது படைக்க வேண்டுமே” என, அவர் “மற்றொன்றும் காண்கிலேன்,
நேரம் அகாலமாயிற்று.  தருபவரும் இலர், போமிடமும் வேறில்லை, வயலில்
பகலில் விதைத்த செந்நெல்  மழையில்  நீரின்  மேல்  ஒரு பகுதியில் இருக்கும்.
வாரிக்கொண்டு வந்தால் அமுதாக்கலாம்” என்று தம்  மனைவியார் கூற உடனே
நாயனார், அந்நடுவிருள் யாமத்து மின்னலின் உதவியால் சென்று கைகளினால்
தடவி அந்நெல்  வித்துக்களை எடுத்துக்கொண்டு மனையின்பால் அடைந்து தம்
மனைவியிடம் கொடுத்தார். அவர் மனைவியார் வீட்டு வாயில் எதிர்நோக்கி
இருந்து கொண்டு வந்த நெல்லை வாங்கிக் கொண்டார். அந்நெல் முளையை
வறுப்பதற்காக விறகில்லை   எனத் தம் வீட்டுக் கூறையை அறுத்து நாயனார்
விறகாக்கினார். பின்பு மனைவியார் அதை வறுத்து அரிசியாக்கி அமுதாக்கினார்.
கறிக்காகத் தம் கொல்லையில் உள்ள குழிநிரம்பாக் கீரையைப் பறித்துக்
கொடுத்தார் நாயனார். அந்தக் காட்சியை சேக்கிழார் பெருமான் சித்தாந்த
கருத்தில் வைத்து விளக்குகிறார்.

குழிநிரம்பாத புன்செய் குரும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க”

   குழி நிரம்பாத சிறிய அளவு உள்ளமையாலும், நள்ளிருள் காலம்  ஆனதாலும் அக்குறும் பயிர்களைத் தடவிப் பறிக்க வேண்டியதாயிற்று.
"பாசப்பழிமுதல் பறிப்பார் போல” நாயனார் பறித்தவை குரும்பயிரன்று அவை
பாசத்தின் பழி முதல் என்றார். "பாசப் பழிமுதல்” ஆணவமாகிய சகசமலத்திற்கு
வேராகி நிற்கும் மூல கன்மம் என்பர். “யாக்கை தன் பரிசும் வினை இரண்டும்
சாரும் மலம் மூன்றும் அற” என்பது கண்ணப்ப நாயனார் புராணம். வித்தாகிய
செந்நெல்முளை வாரியதால் வித்து மேல் விளையாமல் செய்த செயல் ஆகாமிய
கர்மங்களைக் கழித்தலும்,
வீட்டின் அலகுகளை அறுத்தல், புவன போகங்களை
இல்லாமல் வீட்டியதனால் சஞ்சித கர்மங்களை அழித்தலும் குரும்பயிர் வேருடன்
பறித்தலால் ப்ராப்த வினைகளை வேருடன் அழித்தலும் குறிக்கப்பட்டன.

ஈண்டுப் பாசம்  என்றது ஆணவமலத்தையும் குறிக்கும். பாசமாகிய
ஆணவமலம்,  இறைவன் உயிர்கள் போன்று என்றும் நிலைத்தலையுடையது. ஒரு
வீட்டில் உள்ள இருள் விளக்கு வைத்தால் ஒடுங்கியிருத்தல் அன்றி,  இல்லாமல் போவதில்லை.
அது போல ஆணவமலம் ஞானிகளுக்குத் தொழிபடாது
ஒடுங்கியிருக்கும்.  "பாசப்பழிமுதல் பறிப்பார் போல” என்றது அத்தகைய ஆணவ
மலத்தை முதலோடு (வேறோடு) பறித்தனர் என்று விளங்குகிறது. நெல் வித்தை
வாரிக் கொண்டு வந்தமையால் இனிப் பிறப்பாகிய வித்தைக் களைந்துவிட்டனர்
என்றும், பேரின்ப மயமாகி உயிர்க்குச்சொந்த வீடாகிய முத்தி வீட்டு
இன்பத்தையடையவும் தன்மையராதலின் உடலுக்குத் துணையுள்ள பந்த வீட்டை
அறுத்தனர் என்றும் பொருள் அமைகின்றது.

அரன் அடியவர்கள் யாவராயினும் பக்தியோடு மனையில்பால் அழைத்து
அவர்களின் பாதங்களை விளக்கி  ஆதனத்தில் அமர்த்தி, அர்ச்சனை செய்து அமுது
படைத்தது வழிபடும் தன்மை சிவஞான போதும் 12ம் சூத்திரம்.
 “மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
 ஆலயம் தானும் அரன் யனத் தொழுமே”
என்ற பகுதியின் விளக்கத்தால் உணரலாம்.
 “பாசம் எனும் பேயே பசுவைப் பதியிடம் விட்டு
 ஆசடையச் செய்ததம்மம் மா”
 என்பது தண்டபாணி சுவாமிகள் திருவாக்கு. பாசப் பழி முதலைப் பறித்தால்
வீடு பேற்றை அடையலாம் என்ற கருத்தை மாற நாயனார் குழி நிரம்பாத
புன்செய்க கீரைகளைப் பறிப்பதன் மூலம் தெய்வச் சேக்கிழார் பெருமான்
உணர்த்தியருளுகிறார்.
தட்டச்சு, வடிவமைப்பு.
 மு.செல்வக்குமார்,
 சி.மாதேஸ்.
 சிரவை ஆதீனம்,
 கௌமார மடாலயம்,
 கோவை.
நன்றி: சிரவையாதீனம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள், கௌமார மடாலயம், கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக